அரியண்டம்..!

 


தூர இருந்து வாழ்வதால் ஏற்படும் நன்மைகள் பல  இருந்தாலும், சில தீமைகள் குடும்பங்களை இன்னும் தள்ளி வைத்திருக்கச் செய்யும்..! ஆனால் அதனைப்புரிந்து, இன்னும் அன்பாகவும், விட்டுக்கொடுப்புடனும் வாழ்ந்தாலே உறவுமுறையைப் பேண முடியும்.

நான் திருகோணமலை சென்றதில் இருந்து கடைச்சாப்பாடு தான் அதிகம்..!  ஒரு சில சாப்பாடுகள் மட்டும் உறவுகளின் வீடுகளில் எடுத்துள்ளேன். அதனைத் தொடர விரும்பவில்லை.

கடைகளில் சாப்பிடும்போது எந்தக்கடையில் எது நன்றாக இருக்கும் என்ற ஒரு தெளிவு சில வாரங்களில் வந்துவிடும். அதன் பிறகு அந்தந்தச் சுவைக்காக  அந்தந்த கடைகளுக்குப்போவது வழமை.  பிட்டு என்றால் இங்கே எடுத்தால் தான் அது பிட்டு..! ரொட்டி என்றால் இந்தக்கடையில் இருந்து எடுத்தால் தான் அது ரொட்டி..! பரோட்டா என்றால் இந்தக்கடை..! மதியத்திற்கு இந்தக்கடை..! இவ்வாறாக ஆறு மாதங்கள் நெருங்குகின்ற நிலையில் கடந்த வெசாக் லீவில் வீடுவந்து மனைவியின் சாப்பாட்டைச் சாப்பிடும் போது சுவையே தெரியவில்லை..!

உப்பும் இல்லை..! புளிப்பும் இல்லை..! இனிப்பும் இல்லை..! என்ன சுவை என்றே புரியவில்லை..? மனைவியிடம் சற்றுக்கோபமாக “என்ன சாப்பாடு..?” இது என்று கேட்டேன். வழமைபோல் தான் என்றார். சுவையில்லையே என்றேன்..! நீங்கள் கண்ட கண்ட இடங்களில் சாப்பிட்டு, வாயைக்கெடுத்து வைத்துள்ளீர்கள் என்றார். அது சரி தான். என்ன செய்ய..?

வரும்போதே மச்சம் வேண்டும் என்ற ஒரு நிபந்தனையோடு தான் வீடு வந்தேன். இல்லை என்றால் இன்னும் ஒரு வாரம் அங்கேயே தங்கிவிட்டு வரட்டா எனக்கேட்க, மனைவி கவலைப்பட்டார்.

அதற்கேற்ப நேற்று இறைச்சி சமைத்துப் பரிமாற அதற்குள் அவரின் முடி இருந்தது..! எடுத்துக்காட்டினேன்..! கண்ணாடி போட்டுக்கொண்டு சமைக்கலாம் தானே என்றேன். அப்படிச்சமைப்பது கஷ்டம் என்றார்..!

அதுவும் தனது கண்ணாடி கிட்டப்பார்வைக்கு மாத்திரம் வாங்கியது என்றார். பின்னர் நிலைமை புரிந்தது.

மேலும் தண்ணீரைத்தெளித்து, மனைவியின் கஷ்டத்தை நினைத்து சாப்பிடும்போது, ஒரு சோற்றுப் பருக்குடன் கட்டெறும்பு ஒன்று கட்டிப்பிடித்து அவிந்து இருந்தது..! அதனைத் தூக்கி எறிந்துவிட்டுச் சாப்பிட்டேன். ஒவ்வொன்றுக்கும் மனைவியைக் குறைப்பட்டாள், அவர் என்ன செய்வது..? கடையில் நாய் இறைச்சியே சமைத்து தந்தாலும் எப்படிக்கண்டு பிடிப்பது..? மனைவியைக் குறைசொல்லிப் பயனில்லை.. இருந்தாலும் “ஒரு அரிசியை கட்டிப்பிடித்துக்கொண்டிருக்கும்  எறும்பை” அப்படியே போட்டு சோறுகாய்ச்சும்போது அவித்துவிட்டீர் எனப்பகிடியாகச் சொல்ல ஓடிவந்து பார்த்து, இது அடிப்பிடித்த ஒரு சோற்றுப்பருக்கை..! உங்களுக்கு எறும்பு சோறைக்கட்டிப்பிடித்து செத்ததாகத் தெரிகின்றது என்றார்..!

அது உண்மையில் எறும்பே அல்ல எனப்புரிய வைத்தார்.

பாவம். எவ்வளவோ கஷ்டப்பட்டு சமைத்துத் தர குறைகள் மாத்திரம் கூசாமல் சொல்லிக்கொண்டிருக்கின்றோம். இடையில், நான் இல்லை என்றால் நிலமை புரியும் என்றார். மனது பதறிவிட்டது.   ஒன்றும் சொல்லவில்லை. பேசாமல் எல்லாவற்றையும் சாப்பிட்டுவிட்டு வந்துவிட்டேன்.

முன்பு அம்மா சொன்னது ஞாபகத்திற்கு வந்தது..! “படப்போறாய்.. உனது குணத்தை மாற்றிக்கொள்” என்பார்.  நான் சின்ன வயதில் எதற்கும் நொட்டை பிடிப்பது வழக்கம். தேனீரில் ஒரு நுள்ளானைக் கண்டாலே போதும், அதனை வெளியே ஊற்றிவிடுவேன்..! திரும்பப் போட்டுத்தரச்சொல்லி அடம் பிடிப்பேன்.  அம்மா குளியல் அறைக்குச் சென்று வந்தால் வடிவாக அவதானித்துக்கொண்டிருப்பேன். சரியாகச் சவற்காரம் கைகளில் போடாவிட்டால் சொல்லிக்காட்டுவேன். இல்லை என்றால் அம்மா சமைப்பதே பிடிக்காது..! கீரை, முட்டைப்பொரியல், வெண்டிக்காய் சுத்தமாகப் பிடிக்காது. இப்படியான வாழ்க்கை வாழும் போதே அம்மா அவ்வாறு சொன்னார்.

பின்னர் எனது வாழ்க்கைப் பயணத்தில் “பல பாடங்கள்” படித்தாகிவிட்டது. இருந்தாலும் ஞாபக மறதியால், மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறியது போல எண்ணங்கள் வருகின்றன..!

அருவருப்புப் பார்த்தால் அன்பு அற்றுவிடும்..! அல்லது அறுந்துவிடும்..! எதனையும் அன்போடு பார்த்தால் அங்கே அரியண்டம் இருக்காது.

 

ஆ.கெ.கோகிலன்

26-05-2024.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!