ஒன்றை விட்ட அண்ணன்..!

 



நீண்டநாட்களாக திருகோணமலையில் இருக்கும் எனது ஒன்றைவிட்ட அண்ணன் வீட்டுக்குச் செல்லவேண்டும் என்று நினைத்தேன்.

இடையில் ஒரு முறை ஒரு Gift ஜயும் வாங்கிக்கொண்டு, எனது காரில் அவரது வீட்டிற்கு கிளம்பினேன். போன நேரம் மாலை 7.00 மணிக்கு கிட்டவாக இருக்கும். ஏறக்குறைய 15 வருடங்களுக்கு முன் அந்த வீட்டிற்கு அடிக்கடி போவது வழக்கம்.

அந்த எண்ணத்தில் ஒரு வீதியால் போனேன். ஏதோ தவறுதலாக  வந்ததுபோல் எல்லாம் தெரிந்தன. பிறகு தான்  உண்மை புரிந்தது பாதை மாறி வந்துவிட்டதாக..!

பின்னர் கஷ்டப்பட்டு அந்தவீதியில் காரைத் திருப்பிக்கொண்டு, இன்னொரு வீதிக்கு வந்து, அதிலிருந்து இன்னோரு வீதியால் ஆரம்பத்தில் போன வீதிக்கு சமாந்தரமாகவுள்ள வீதியில் பயணித்தேன். இது தான் அண்ணன் இருக்கும் வீதி என்பதை ஓரளவிற்கு நிச்சயப்படுத்திக்கொண்டு மேலும் சென்றேன். இடையிலுள்ள கட்டடங்களைப் பார்த்ததும் எனக்கு குழப்பமாகப் போய்விட்டது. இந்த வீதியாலும் அதிக வாகனங்கள் வந்துகொண்டிருந்தன. வீதியும் அவ்வளவு பழகியதைப் போல் தெரியவில்லை. ஒரு கோவிலுக்கு முன்னாலுள்ள சிறிய வீதியில் இறங்கித் திரும்ப அவர்களின் வீடு வரவேண்டும். ஆனால் அந்தக்கோவிலையே காணவில்லை..! காரில் இருப்பதால் இறங்கி அலையவும் முடியவில்லை. கொஞ்சத்தூரம் சென்று பார்த்துவிட்டு, எனது போனிலும் அவர்களது எண்கள் இல்லாததால் திரும்பத் தங்கியிருந்த இடத்திற்கு வந்துவிட்டேன். திருமலை வந்து இரண்டாவது மாதத்தில் போகவேண்டிய வீட்டிற்கு, இறுதியாக 6ம் மாதமே போகக்கூடியதாக அமைந்தது..!

இம்முறை ஒரு மோட்டார் சைக்கிள் கிடைத்ததால், அதன் உதவியுடன் இலகுவாகப் போகமுடிந்தது.

அங்கு போனால் நீண்ட நாட்களுக்குப் பிறகு அண்ணனையும், அவரது மனைவியையும், பிள்ளைகளையும் விசாரித்து, ஏறக்குறைய இரு மணித்தியாலங்கள் அவர்களுடன் செலவிட்டேன்.

 

சின்ன வயதில்  அண்ணன் அவர்களின் வீட்டிற்கு, டீவி  பார்க்க அடிக்கடி போவேன். வளர்ந்தபின் அவர்களிடம் கேட்டுப்படித்தும் இருக்கின்றேன்.  அந்த  அண்ணாவும், அவரது அக்காவும் எனக்கு நிறைய விடயங்கள் சொல்லித் தந்துள்ளார்கள்..!

அது மாத்திரமன்றி, அவர்களது அப்பாவிடமும் பாடசாலையில் தமிழ் படித்துள்ளேன். மிகவும் கண்டிப்பு மிக்கவர். அவர்கள் அந்த நேரத்தில் நல்ல வசதியுடன் வாழ்ந்து வந்தார்கள். என்னிடம்  ஒரு சாதாரண சைக்கிள் இருந்த வேளை, அவர்களிடம் நல்ல மோட்டர் பைக் இருந்தது..!

அந்த அண்ணனுக்கு பல நண்பர்கள் பல நல்ல இடங்களில் இருந்தார்கள். இவர் அதிகநேரம் அவர்களுடனேயே செலவிடுவார். அவர் உயர்தரம் படித்தாலும் பல்கலைக்கழகம் போகும் அளவிற்கு புள்ளிகள் எடுக்காததால் தொழில்நுட்பக்கல்லூரியில் படித்து பின்னர் அந்தத்துறையிலே வேலையும் செய்தார்.

தயார் மறைந்த பின்னர் திருகோணமலை வந்து, வேலை செய்து, ஒரு பெண்ணையும் காதலித்து அதன் பயனாக, அவர்களுக்கு தற்போது இரு பெண் குழந்தைகள் இருக்கின்றார்கள்.

ஒரு பெண், தமிழ் ஆசிரியராக, தாத்தா போல் வேலை செய்கின்றார். இன்னோர் பெண் உயர் தரம் படிக்கப்போகின்றார். இதற்கு இடையில் அண்ணனுக்கு ஒரு வருத்தம் வந்து, சரியாகக் கதைக்க முடியாமல் கஷ்டப்பட்டு, வேலையும் செய்ய முடியாமல் தற்போது வீட்டிலே இருக்கின்றார்..!

இவர் திருமணம் முடித்து, சில வருட காலங்கள் வாடகை வீடுகளில் இருந்து, வெறுத்து சொந்தவீடு கட்ட வென்று வெளிநாடு சென்று உழைத்தார். அவர் மனைவி இங்கே அரச வேலையில் இருப்பவர்.

சில வருடங்களுக்குப் பிறகு,  அவரது எண்ணம் நிறைவேறியது. திருகோணமலையில் காணி வாங்கி, சொந்தவீடு கட்டி நிறைவாக சொந்த வீட்டிலே பிள்ளைகளுடன் வசிக்கின்றார்கள்.

அவர்களின் திருமணமும் சமூகம் மாறிச் செய்ததால் இரு பக்கங்களிலும் இருந்து கிடைக்கும் உதவிகள் குறைவு எனச்சொல்வார்கள்.

ஆனால் தற்போது காலம் மாறி விட்டது..! அனைவரும் படித்து நல்ல நிலைகளில் இருக்கின்றார்கள். பொருளாதாரமும் பரந்து வளர்ந்துள்ளது..! தற்போது, திரும்ப உறவுகள் வருவதாகவும், இனி சற்று நிம்மதியாக இருக்கலாம் எனவும் நம்பிக்கையுடன் இருக்கின்றார்கள்.

நானும் அவர்களுக்குச் சொன்னேன். யாரிடமும் குறையைப் பார்க்காதீர்கள். நிறையை மாத்திரம் பாருங்கள் என்று. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை..!

உறவுகளுடனும், நட்புக்களுடனும், அயல்களுடனும் குற்றங்கள் பார்க்காமல் பழகுங்கள். அது தான் நமக்கு நம்பிக்கையையும் தைரியத்தையும் தரும். அனைவரிடமும் குறைப்பட்டால் நாம் அநாதையாகவே இருக்கவேண்டிவரும்.

இவ்வாறாக அவர்களுக்கு நம்பிக்கையூட்டி, மகளுடனும் கதைத்து, அவரின்  கல்வி மற்றும்  உயர் தரப்பாட விருப்பத்தையும்  அறிந்து, அதன்படியே போகச்சொல்லிவிட்டு, அண்ணரையும் உடற்பயிற்சிகள் செய்யச் சொல்லிக்கொண்டு, அண்ணியிடமும் விடைபெற்று தங்குமிடத்திற்கு வந்தேன். நீண்ட நாட்களாக இழுபட்ட பயணம் முடித்த ஒரு திருப்தி வந்தது..! எது எப்ப நடக்க வேண்டுமோ, அப்போது தான் நடக்கும். ஆசைக்கு, அது தொடர்பான முயற்சியை மாத்திரம் செய்துகொண்டிருக்கலாம்.

 

ஆ.கெ.கோகிலன்

01-06-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

நம்பிக்கையீனம்..!

இயற்கை தந்த வலி..!