ரோமியோ..!

 



தனது மகளின் இறப்பின் பின் விஜய் அன்ரனி நடிப்பில் மீண்டும் கவனம் எடுத்து மாறுபட்ட கதைக்களமுள்ள படங்களில் நடித்துவருவது பாராட்டிற்கு உரியது. நம்பி பார்க்கலாம் என்ற வகையிலே அவரது படங்கள் இருக்கும்..! அந்த வகையில் இந்தப்படமும் இருக்கின்றது. ஆனால் சில குழப்பமான கட்சிகள் வருவதால், எல்லோருக்கும் பிடிக்குமா என எண்ணத்தோன்றுகின்றது.

கதைப்படி சற்று வயது அதிகமான கதாநாயகன், தன்னைவிட 10 வயது குறைவான பெண்ணைக்கண்டதும் திருமணம் செய்ய விரும்புகின்றார். ஆனால் பெண்ணின் பூரண சம்மதம் அறியாமல், ஏதோ வேறோர் ஆசையில் அவளும் சம்மதிக்க, திருமணம் நடக்கின்றது. அதன் பின்னர் தான் புரிகின்றது, பெண்ணிற்கு தனது கனவுத்தொழிலான நடிப்பில் நட்சத்திரமாக  ஜொலிக்க வேண்டும் என்பது..! இதனால் கட்டிய கணவனை ஒரு பொருட்டாக மதிப்பது கிடையாது, மாறாக, அவரைவிட்டு விலகத் துடிக்கின்றார்..! அத்துடன் தனது இலட்சியத்தை அடைய முனைகின்றார்.

மனைவியின் இந்த நடவடிக்கையால் தடுமாறிய ஹீரோ, இன்னோர் வழியில் தன்னை யார் என்று சொல்லாமல் மறைத்து, ஒரு ரசிகனாகக் கைபேசியூடாக  அறிமுகமாகி, கட்டிய மனைவியுடன் உரையாடுகின்றான்..! காலப்போக்கில், அருகிலுள்ள கணவனை மதிக்காமலும், பொருட்படுத்தாமலும் இருந்துகொண்டு, முகம் தெரியாமல் கதைக்கும் அவளது கணவனுடைய வார்த்தைகளுக்கு அதிக மதிப்பைக்கொடுக்கின்றாள்.

இதன் சாத்தியம் சற்று இடித்தாலும் படம் பார்க்கும் போது சுவாரசியமாக இருந்தது. எங்கும் போரடிக்கவில்லை. இறுதியில் இருவரும் சிக்கலான சில காட்சிகளின் பின்னர் இணைகின்றார்கள்.

காது கேட்காத தங்கச்சி இறந்தாரா அல்லது தொலைந்தாரா என்பதே தெரியாமல் கதை சென்றது சற்று சலிப்பைத் தந்தது. ஹீரோ, தாய், தந்தை என ஒருவரும் கண்டுபிடிக்க முடியாத தங்கச்சியை, மனைவி இலங்கையில் இருந்து கண்டுபிடித்ததாகச் சொல்வது சற்று சொதப்பலாகத் தெரிந்தாலும், சரியென்று மன்னித்துப் பார்த்தேன்.

இறுதிவரை கணவனும், கைபேசியில் கதைத்தவனும் ஒருவனே என மனைவி தெரியாமல் இருப்பது போல் கணவன் நினைத்தது, தவறு என்று புரிந்த இடம் சற்றுப் புத்திசாலித்தனமாக இருந்தது.

நாயகியாக மிருணாளினி ரவி என்பவர் நன்றாக நடித்திருந்தார். அத்துடன், யோகிபாபு உட்பட நட்புக்களைக் காட்டிய நடிகர்கள் அனைவரும் பரவாயில்லாமல் நடித்து இருந்தார்கள். ஏனைய கலைஞர்களின் நடிப்பும், தொழில்நுட்பங்களும் பரவாயில்லை.

விநாயக் வைத்தியநாதன் என்ற இயக்குனர் வித்தியசமாகக் கதையை யோசித்து இருந்தாலும் இயக்கும் போது, அதனைச்சற்று சேதப்படுத்தி விட்டார் என்றே தோன்றுகின்றது. இல்லை என்றால் இன்னும் நன்றாகப் படம் வந்திருக்க வேண்டும்.

படம் பார்க்கலாம், பரவாயில்லை என்ற அளவில் படம் அமைந்துள்ளது..!

 


ஆ.கெ.கோகிலன்

19-06-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நம்பிக்கையீனம்..!