முதுமையில் பிணி..!
எனது தாயார் மிகவும் இறுக்கமானவர். எங்களைக் கஷ்டப்பட்டு
வளர்த்து ஆளாக்கியவர். பிடிவாதம் கூட..! தான் சொல்வதையே சரியென நினைப்பார். யார் சொன்னாலும்
கேட்கமாட்டார். புலமைப்பரீசில் விவசாய டிப்ளோமா என்ற படிப்பைக் குண்டசாலையில் படித்ததாலும்,
ஆசிரியராக இருந்த படியாலும், கொஞ்சம் தன்நம்பிக்கை அதிகம்.
என்ன வருத்தங்கள் வந்தாலும் ஏதாவது இயற்கை முறையில் மாற்றிவிடுவார்..!
வைத்தியசாலைகளுக்குப் போவது மிகக்குறைவு. வேறு வழியே இல்லை என்றால் தான் அங்கு போக
நினைப்பார். ஒரு முறை எனக்கு ஒரு விநோதமான வருத்தம் வந்தது..! என்னைத் தெல்லிப்பளை
வைத்தியசாலையில் மூன்று நான்கு நாட்கள் வைத்திருந்து,
அதனைக் குணப்படுத்த உதவினார்.
இப்படியாக ஏதாவது எமக்கு வந்தால் தான் வைத்தியசாலைக்குப்
போவார். இல்லை என்றால் தானே ஏதாவது இயற்கை மருத்துவங்கள் செய்து மாற்றிவிடுவார்.
அண்மையில் அவரது காலில் நகச்சுற்று வந்து, நகம் விழுந்து,
காலில் புண்வந்தது. அதனைத் தொடர்ந்து, அதில் வீக்கம் ஏற்பட்டு மாறமல் இருக்க வைத்தியரிடம்
போகவேண்டிய சூழல் வந்தது. நானும் ஊரில் இல்லாத படியால் எனக்கு அடுத்த தம்பியும், அவர்
மனைவியுமே அவரை மருந்துகட்டச் செய்தனர். அத்துடன்
புண் மாறி, ஓரளவு சுகமாக வந்தது.
இருந்தாலும் வயது மூப்பாலும், மறதிகளாலும் சுத்தமாக புண்
இருந்த இடத்தைக்கவனிக்காமல் விட்டதால் மீண்டும் கால் வீங்கி, புண்களும் பரவி விட்டது..!
நானும் ஊரில் இல்லை.
வெசாக் லீவு வந்ததால், நானும் ஊருக்கு வந்தேன். தம்பியும்
வந்தான், இருவரும் சேர்ந்து எனது காரில் அம்மாவைக் கொண்டுசென்று காட்ட முனைந்தோம்.
முதலில் நான் புக்பண்ணின ஆயுள்வேத மருத்துவரை நாடினோம். அவர் காலைப்பார்த்துவிட்டு,
வீக்கத்திற்கும் நோவிற்கும் இப்போது சிகிச்சை அளிப்பது கடினம். முதலில் ஆங்கில மருத்துவரிடம்
காட்டி, அன்டிபயாட்டிக் போடச்சொன்னார். அவர் சொன்னது போல், எனது வீட்டிற்கு கிட்டவாகவுள்ள மருத்துவரிடம் காண்பித்து, மருந்துக்கள் மற்றும்
கிறீம் போன்றவற்றை வாங்கிக்கொடுத்தேன். தம்பி கூட இருந்து அம்மாவிற்கு அவற்றைப் போட்டுவிட்டார். நேற்றும் அவ்வாறே மீண்டும் மருத்துவரிடம் காட்டிப்போட்டு,
வழமையான முறையில் தம்பி மருந்துகளைப் போட்டுவிட்டார்.
ஓரளவிற்கு மாறுவது போல் தெரிந்தாலும், முற்றாக மாறினால் தான்
அவர்களுக்குச் சுகமாக இருக்கும். அல்லது அனைவருக்கும் சங்கடமாக இருக்கும்.
இந்த சமயத்தில் மருத்துவர்களை மதித்தாலும், அவர்களின் வியாபார
எண்ணங்களைப் பார்க்கும் போது கவலையாக இருக்கின்றது. நேரவிரயம், அதிக பணம், வியாபாரிகள் போல் வாடிக்கையாளர் தொடர்புகளைப்
பேணி, ஒவ்வொரு நோயாளியையும் தமது நிரந்தர வாடிக்கையாளராக மாற்றுவதைப் பார்க்க மருத்துவம்
ஒரு பெருவர்த்தகமாக மாறுவது கண்கூடு.
நாட்டில் சில நல்ல மருத்துவர்கள் இருந்தாலும் வியாபார மருத்துவர்களே
சரியான சந்தைப்படுத்தல் நுட்பங்கள் ஊடாக மேலே தெரிகின்றார்கள்..! அதனூடாகப் பணம் சம்பாதித்து,
மகிழ்கின்றார்கள்.
மருத்துவம் சேவை என்று சொன்னாலும் அது இலாபம் அளிக்கும் ஒரு
பெரிய வியாபாரமாவது உலகிற்கு கேடு..!
மரணம் என்பது நிச்சயம். மருத்துவத்தால் சிறிது காலம் தள்ளிப்போட
மட்டுமே முடியும். ஆனால் அந்த நீட்டலுக்கு அசைப்படும் மக்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம்..! உலகம் போற போக்கில் போனால், வாழ்க்கை இலகு என்பார்கள்.
வேறுமாதிரிச் சென்றால் பல சவால்களை முகங்கொடுத்தே நகரவேண்டியிருக்கும்..!
அதனைத் தனி மனிதர்களே நிச்சயிக்கட்டும். நான், எனக்குப் பிடித்த
வகையில் செல்லவே விரும்புவேன்.
ஆ.கெ.கோகிலன்
26-05-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக