எண்ணங்கள் செய்யும் சாகசம்..!

 

 


இயற்கை என்னுடன் ஏதோ ஓர் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருப்பதாக நான் அடிக்கடி உணர்கின்றேன். இது எல்லோருக்கும் பொருந்தும் என்றாலும் எல்லோரும் அவ்வாறு நிகழ்வுகளைப் பொருத்திப்பார்ப்பதில்லை. ஆனால் நான், அதனைச் செய்வதுண்டு..!

நேற்று,  திருகோணமலை நன்னடத்தைச் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஆணையாளர் ஒரு கூட்டத்திற்கு என்னை அழைத்திருந்தார்.  அதில் சூழ்நிலைகள் காரணமாக தொடர்ந்து படிக்க முடியாது போகும் மாணவர்களுக்கு “என்ன வழிகள்..?” இருக்கின்றன என்பதும் அவர்களுக்கு “எப்படி நிறுவனங்கள் உதவுகின்றன..?” என்பதும் அதுமாத்திரமன்றி, கா.பொ.த சாதரண தரம் தாண்டி உயர் தரம் படிக்க முடியாதவர்களுக்கான “வசதி வாய்ப்புக்கள் என்ன..?” என்பதும், அதையும் தாண்டி பல்கலைக்கழகங்கள் கிடைக்காதபிள்ளைகளுக்கு “எப்படியான வசதி வாய்ப்புக்கள் இருக்கின்றன..?” என்பதும்  தொடர்பான கலந்துரையாடல்கள் அங்கே இடம்பெற்றன. அதில் பல்கலைக்கழகம் செல்லத் தகுதியான புள்ளிகள் இருந்தும், பல்கலைக்கழகம் போக முடியாத மாணவர்களுக்கு எங்களுடைய நிறுவனம் இருக்கின்றது என்பதும் அதில் படிப்பதற்கு உயர்தரத்தில் 3 பாடங்களும் சித்தியடைய வேண்டும் என்று சொல்லியிருந்தேன். ஆனால்  மாலை, எனது மகளின் நிலையைப் பார்த்தால் எனது நிறுவனத்தில் கூடப் படிப்பதற்கு தகுதியற்று இருப்பது ஆச்சரியமாக இருக்கின்றது.

இயற்கையும், இறைவனும் எனது வாழ்வில் பல இடங்களில் கூடவே இருக்கின்றன..! இந்த விடயத்திலும் அவ்வாறான ஒரு எண்ணமே மேலோங்கி இருக்கின்றது. அதற்காக மகள் நல்ல கெட்டிக்காரி..! நிறைய புள்ளிகள் எடுத்திருப்பாள் எனச்சொல்லமுடியாது. ஆனால் ஒரு இடைத்தரத்தில் இருந்திருப்பாள் என்று நினைத்தேன். அது மாறியது இன்னும் ஆச்சரியமானதாக இருக்கின்றது.

ஒருவிடயம் மட்டும் உண்மை. முயற்சி சரியாக இருந்தால், இன்று தோற்றாலும் நாளை வெல்ல முடியும்.

அது தவிர  முயற்சி செய்பவர்களைக் கவலைப்படுத்திப் பயன் ஒன்றும் இல்லை.  அதுமாத்திரமன்றி, அவர்களுக்கு உறுதுணையாக இருந்து இந்தக் கடினமான சூழலில் இருந்து மீண்டு வரத்துணையாக இருக்க வேண்டும்.

இந்தப் பரீட்சை முடிவு வந்த நேரத்தில் எனக்கு, எமது நிறுவனத்தின் பரீட்சைப் பணிப்பாளர் பதவிக்கான நேர்முகத்தெரிவு  கடிதமும் வந்தது..! மகள் பரீட்சையில் எல்லாப்பாடங்களிலும் தோற்ற நிலையில், என்னைப் பரீட்சைப்பணிப்பாளராக மாற்ற, நேர்முகத்தேர்வுக்கான கடிதமும் ஒன்றாக வந்தது மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கடந்த மூன்று நான்கு வாரங்களில் இரண்டு மூன்று முறை எமது நிறுவனத்திற்கு காரிலேயே வந்துள்ளேன். ஒவ்வொரு முறை காரில் வரும்போதும் நேர்முகத்தேர்வுக்கான கோவைகளையும், தேவையான ஆவணங்களையும் காரில் கொண்டுவருவேன்.  ஆனால் எமது நிறுவனத்தைச் சேர்ந்த சகோதரமொழி பேசும் ஊழியர் ஒருவர், நேர்முகத்தேர்வுகள் நிறுத்தப்பட்டதாகவும் இனி எப்ப அழைப்பார்களோ தெரியாது என்றும் கவலைப்பட்டார்..?  இந்த முறை திருகோணமலை வரும்போது காரைக் கொண்டுவரவில்லை..! அந்த ஆவணங்களையும் கொண்டுவரவில்லை..!

இங்கு தொடர்ந்து ஜந்து நாட்களுக்குமேல்  நின்றால் வீட்டு நினைப்புக்கள் வந்துவிடுவதால், இம்முறை வெள்ளி ஊர் போக நினைக்க, மனைவியே சொன்னார்  இன்னும் நான்கு நாட்கள் நின்று செவ்வாய் பின்னேரம் வந்தால், பின்னர் அங்கே இரண்டு நாட்கள் கீரிமலை மற்றும் அந்தியேட்டிக்கடமைகளில் பங்குபற்றி எமக்கான துடக்கை நீக்கலாம் என்று..!

ஆனால் திடீரென கீரிமலைக்கு  போகக்குறித்த நாள்  அன்று, கொழும்பில் நேர்முகத் தேர்வு வருவதால் என்ன செய்வது என்றே தெரியவில்லை..? மனமும் சலித்துக்காணப்படுகின்றது.

இடமாற்றம் தரும்போதே பழைய பணிப்பாளர் நாயகம், பரீட்சைப் பணிப்பாளர் பதவிக்கு  விண்ணப்பம்  கோரும்போது விண்ணப்பிக்கும்படி கோரியதால், நானும் விண்ணப்பித்தேன். அதேவேளை திருகோணமலையிலும் ஒரு சிரேஷ்ட விரிவுரையாளர் இந்தப்பதவிக்குத் தன்னை தயார்படுத்திக்கொண்டு வருகின்றார்.  இரண்டு சூழலையும் கவனத்தில் எடுத்து நான் செயற்படவேண்டியுள்ளது..!  இங்கே, எனது  முயற்சியை மாத்திரம் செய்வேன்.  நாளை  நடப்பதை ஏற்போம். இது தான் தற்போதுள்ள எனது மனநிலை.

இடமாற்றக்கோரிக்கை, பரீட்சைப் பணிப்பாளர் பதவி விண்ணப்பம், தற்போதைய பணிப்பாளர் பதவிக்கான ஆசை,  நன்னடத்தைச்சிறுவர் பராமரிப்பு கூட்ட எனது கருத்து, இவை எல்லாம் இன்று ஒருபுள்ளியில் நிற்க, நான் தடுமாறவேண்டிய சூழலில் மாட்டினேன்.

பல முறை பிள்ளைக்கும், மனைவிக்கும் போன் எடுத்துத் கதைத்தேன். பிள்ளை கூடத்துணிந்து, அப்பா அடுத்தமுறை பார்ப்போம் எனச்சொன்னாலும், என்னால் நம்ப முடியாமல் இருக்கின்றது..!  ஒரு பாடம் கூடப் பாஸ்பண்ணமுடியாமல் எவ்வாறு போனது என்பதே  என் மனதில் இருந்த பெரிய கேள்வி..!

பலருக்குச் சொல்லியுள்ளேன்..! மனநிலையைத் தயார்படுத்த வேண்டும் என்று..! குறிப்பாக அதிகபட்சம் நன்றாகச் செய்து இருந்தால், 3A உம் சுத்தமாகச் செய்யவில்லை என்றாள் 3F உம் தான் வரப்போகின்றது என்று..! நிச்சயம் இவற்றிற்கு இடையிலே ஏதோ ஒன்று தான் வரும்..! ஆனால் அது 3F  தான் வரும் என நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை ஏனென்றால் அவர் சராசரிக்கு மேலே இருப்பவள். ஆனால் என்னுடைய வாக்கில் அதுவும் உள்ளது, இப்போது புரிகின்றது..!

சின்னவயதில் பல தவறுகளைச் செய்து எத்தனையோ பொய்களைச் சொல்லியுள்ளேன். சில பொய்களை இன்னும் மாற்றவே இல்லை..!   அப்படியிருக்க மகளும், மனைவியும் சொன்ன சின்னப்பொய்களைக் கூட தாங்க முடியாமல் பேசி, அவர்களுக்கு வேறுப்பை ஏற்படுத்தியுள்ளேன்..! இனிமேல் பொய் சொல்ல வேண்டாம் என்றும் “பொய் சொன்ன வாய்க்குப் பொரியும் கிடையாது..” என்றும் பொரிந்து தள்ளியுள்ளேன்.

எனக்குத் தெரியப்பொய்களைக் கூசாமல்  சொல்லும், நபர்களின் பிள்ளைகளே 3A சித்திகளைப் பெற்று, மருத்துவராகவும் பொறியியலாளராகவும் படிப்பதற்கு தெரிவாகியுள்ளார்கள்.

அப்படியிருக்க நேர்மை, நியாயம், தனிப்பட்ட முயற்சி  என்று நான் நம்பிய கோட்பாடுகள் தவறாகிப்போனதோ  என்னும்  எண்ணம் மனதில் எழுந்த கவலைக்குப் பெரும் காரணமாகத் தோன்றுகின்றது..! அதுவே  என்னை இவ்வாறும் எழுதத்தூண்டியது.

 

ஆ.கெ.கோகிலன்

01-06-2024.

 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

நம்பிக்கையீனம்..!

இயற்கை தந்த வலி..!