வடநாட்டு கலாசாரம்..!
இந்திய தொலைக்காட்சிகளும், திரைப்படங்களும் பல இந்திய பிரதேச
கலாசாரங்களை எம்மையறியாமலே எமக்குள் புகுத்திவிட்டன..!
அதனூடாக பல தொழில்களும் வந்துவிட்டன. இதை குறை என்று சொல்லாவிட்டாலும்
கால மாற்றத்தால் வந்த விளைவு என்று எடுத்துக்கொள்ளலாம்.
எமது நிறுவனத்திலும் அண்மைக்காலமாக, வட இந்தியர்கள் ஹொலிப்பண்டிகை
கொண்டாடுவது போல் எமது பிள்ளைகளும் கொண்டாட விரும்புகின்றார்கள். அதற்கு, தற்போது அவர்கள்
தெரியும், கற்றல் செயற்பாடுகள் முற்றாக முடியும் இறுதி நாளில், வண்ணப்பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவுவதுடன், கலர்
கலந்த தண்ணீரையும் சக நண்பர்கள் மேல் தெளிப்பார்கள். இச்செயற்பாடு அவர்களுக்குப் பெரும்
சந்தோசத்தைக் கொடுக்கின்றது. வாழ்க்கையில் கொண்டாட வேண்டிய தருணங்களில் கொண்டாடத்தான்
வேண்டும். நானும் அதனை மறுப்பதற்கு இல்லை. இருந்தாலும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் கலாசார
அம்சங்களைப் பிரதிபலித்தால் எமது கலாசார விழுமியங்கள் காப்பாற்றப்படும் அல்லது நாம்
வட இந்தியர்களின் கலாசாரத்தைப் பின்பற்றுவது போல், எமது கலாசாரத்தையும் உலகிலுள்ள யாராவது
மக்கள் கூட்டம் பின்பற்றக்கூடிய வகையில் அவற்றைப் பிரபல்யப்படுத்த வேண்டும்.
நீண்டகாலத்திற்குப் பிறகு, மாணவர்களுக்கு சில பாடங்களை, இந்தமுறை
படிப்பித்ததால் நானும் என்னைப் புதுப்பித்துக்கொள்ள முடிந்தது. அத்துடன் எனது கடமையை இயன்றவரை நிறைவாகச் செய்ய,
சில வகுப்புக்களை கற்றல் கால விடுமுறைகளில் கூட எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.
எனது வகுப்புக்கள் முடிந்ததும் இவ்வாறான கொண்டாட்டம் என்னுடைய
சிந்தனையைத் தட்டி விட்டது..! நாம் படிப்பிக்கும் சாக்கில் அவர்களிடம் அதிகம், வாழ்க்கைக்குத்
தேவைப்படக்கூடிய நீதி நியாயங்களை கூறிவிட்டோமோ என எண்ணத்தோன்றுகின்றது..!
இன்று காலை எனது வகுப்புக்களை பிரத்தியேகமாக எடுத்தபின்னர்,
மூன்று முழுநேர கற்கைநெறியைப் பூர்த்திசெய்யவுள்ள மாணவர்கள் கலந்துகொண்ட ஒரு கூட்டத்தில்
என்னைப் பேச அழைத்தார்கள்.
நான் அவர்களிடம், இலவசமாக கல்வியைத் தந்தாலும் அது தரமானதாக
இருக்க அனைவரும் பாடுபட வேண்டும். எல்லோரும் சேர்ந்து செயற்படவேண்டிய செயல் இது..!
நீங்கள் அனைவரும் இந்தக்கற்கைநெறியை சிறப்பாக நிறைவுசெய்து, அனைவரும் பெருமைப்படும்
வகையில் நடக்க வேண்டும். “உங்களின் வாழ்க்கையே..” எமது நிறுவன எதிர்கால மாணவர்களின்
“வரவேற்பு அட்டையாக..” இருக்க வேண்டும். உங்களையும், உங்களது சேவைகளையும் பார்த்து, இங்கு படிக்க ஆட்கள்
வரவேண்டும்.
இறுதியாக உங்களின் நன்மையான எதிர்காலத்திற்கு எனது வாழ்த்துக்களைக்கூறி
அமர்ந்தேன்.
மேலும், அந்தக்கூட்டத்தில் ஒரு வாய்ப்புக்கேட்டு, மாணவர்களை
திருகோணமலை உயர்தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் 25 வருட நிறைவைக் கொண்டாடத் திட்டம்
போடவும், அதற்கான பணிகளை ஆற்ற ஆட்களைத் தயார்படுத்தவும் கேட்டுக்கொண்டேன்.
மேலும் சிலரின் வாழ்த்துப் பேச்சுக்களுடன், எமது நிகழ்வை
முடித்துக்கொண்டு, அவர்களால் வழங்கப்பட்ட மதிய
உணவையும் உண்டுவிட்டு அமர்ந்தேன்.
சிறிது நேரத்தின்பின்னர் தான், மாணவர்களின் விஸ்வருபத்தைக்
காண்டேன். கலர் பொடியை சக மாணவர்களுக்குத் தூவி, அந்நேரத்தை கொண்டாடினார்கள். எம்மையும்
அழைத்தார்கள்.
எனக்கும் வர்ணப்பொடி தடவிப் படம் எடுக்கக்கேட்டார்கள். நானும்,
கணக்காளரும் வேறுசில ஊழியர்களும் அதில் குறைந்த
அளவிலாவது கலந்துகொண்டோம்.
இறுதியாக எனது முன் அறிவித்தலுக்கு ஏற்ப, வர்ணங்கள் பிரண்ட
(பட்ட) இடங்களை நீர்கொண்டு சுத்தப்படுத்திவிட்டுச் சென்றார்கள்.
மாணவர்கள் என்பது எமது பிள்ளைகள் போன்றவர்களே..! அவர்கள்
எமக்குப் பௌதீகமாகப் பிறக்காவிட்டாலும், எமது தர்க்க அறிவின் வழித்தோன்றல்கள் அல்லது
வாரிசுகள்..! நாம் கொடுக்கும்
நல்லறிவுகள், அவர்கள் மனங்களில் மாற்றங்களைக் கொண்டுவரும்.
நல்ல கல்வி, மனித நடத்தையில் நல்ல மாற்றத்தைக் கொண்டுவரவேண்டும்.
அதேபோல் எமது நல்ல விழுமியங்களை, உலகிற்கு காட்டவும், கடத்தவும்
வேண்டும்.
ஆ.கெ.கோகிலன்
13-06-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக