ஓபிண் டே (Open Day)..!

 

 


இதுவரை காலமும் எமது நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை என்பது சாதாரண விளம்பரங்கள் மற்றும் பத்திரிகைச் செய்திகள் போன்றவற்றோடு நின்றுவிடும். அந்த விளம்பரங்களுக்கே நாம் நினைக்கும் அளவை விட அதிகம் பிள்ளைகள் வந்து படிப்பார்கள்..!

கொரோனா வந்த பின்னர் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்புக்கள் மாணவர்களை கல்வியின் பால் ஈர்க்கத்தவறி விட்டது. பணத்தேவையால் தொழிலே அவர்களுக்கு முக்கியமானதாகத் தோன்றுகின்றது. சின்னவயதில் இருந்தே கஷ்டப்பட்டு படிப்பித்த பெற்றோரை மேலும் சங்கடத்திற்குள் தள்ள மனமில்லாமல் பல மாணவர்கள் கல்வியை இடைநிறுத்தி வேலைகளுக்குச் செல்கின்றார்கள். சிலர் நாட்டை விட்டே போகின்றார்கள்.

இது இவ்வாறு இருக்க, எமது அரசின் கொள்கைகளும் இலவசங்களை குறைக்க விரும்புகின்றது..! ஒரு பொருள் இலவசமாக கிடைக்கின்றது என்றால் அதன் மாதியாரை புரியாமல் பலர் அதனை வீணடிக்கின்றார்கள். காசுக்குப் படித்தால் தான் அதன் மதிப்பு புரியும் என்ற வகையில் அரசின் போக்குகளும் மாறிக்கொண்டிருக்கின்றன.

இன்னொருபுறம், பல்கலைக்கழகத்தில் படிக்கத் தகுதியிருந்தும்,  இலங்கைப் பல்கலைக்கழகத் தெரிவுக்கான வெட்டுப்புள்ளிகளைப் பெறமுடியாமல் வாய்ப்பை இழந்தவர்கள் இடைநடுவில் அவதிப்பட்டு, வாழ்வை அடுத்தகட்டத்திற்கு நகர்த்த சிரமப்பட்டு  இருப்பதைப் பார்க்க வேதனையாக இருக்கின்றது. இப்படியான இடைநடுவில் தடுமாறுபவர்களை சரியான வழிக்குகொண்டுவருவதும், அவர்களுக்கு நம்பிக்கையூட்டி கற்றலுக்குள் ஈடுபடுத்துவதும், பட்டங்கள் பெறுவதற்கு மாற்று வழிகள் இருப்பதைக் காட்டுவதற்கும், எமது நிறுவனங்களில் படித்தாலும் பெரிய சாதனையாளர்களாக மாற முடியும் என்பதை உணர்த்துவதற்கும்  “ஓபிண் டே” என்ற இந்த நாளை இந்தவருடம் முதல் அனைத்து உயர்தொழில்நுட்ப நிறுவனங்களிலும் நடாத்த கேட்டுள்ளார்கள். அதனடிப்படையில் கடந்த திங்கள் அன்று, எமது நிறுவனத்தில் “திறந்த நாள் விழா” சிறப்பாக நடைபெற்றது. உணவுக்கடைகள், போட்டிகள், ஆச்சரியம் ஊட்டும் விடயங்கள், கலை கலாசார நிகழ்வுகள் மற்றும் ஆலோசனை மையங்கள் என பல விடயங்கள்  நடந்தேறின.

இதன் உண்மையான நோக்கம் எமது நிறுவனத்தைப் பற்றிய அபிப்பிராயத்தை மக்களிடம் கொண்டுசெல்வதும், தேவையுள்ள மாணவர்கள் தமது அடுத்த கட்ட நகர்வை எமது நிறுவனத்தில் முன்னெடுப்பதற்கு உதவுவதுமேயாகும்.

 

இதன் மூலம் அரசின் பொது நிதி, உச்ச பயன்பாட்டைப் பெறுவதை உறுதிப்படுத்துவதே..!

ஆனால் தற்போது, அரச பல்கலைக்கழகங்களும் இவ்வாறான கற்கை நெறிகளை கொடுத்தால், பின்னர் எமது நிறுவனங்களுக்கு தேவையே இல்லாமல் போய்விடும். ஒரு தொழில் இன்னொரு தொழிலை அழித்தால் அது ஆபத்து என்று பொருள்.

அவ்வாறு நடக்காமல் பாதுகாக்க வேண்டியது நமது கடமை.

இந்நிகழ்வை நடாத்தச்சொன்னதற்கு ஏதாவது உள்நோக்கம் இருக்கின்றதா என யோசிக்கும்போது கிடைத்து, எமது நிறுவனங்களின் வளமின்மையை மக்களுக்குக் காட்டி மேலும் எமது நிறுவனத்தின் வலுவைக் குன்றச்செய்வதோ என எனக்குப்படுகின்றது..!

தனியார் நிறுவனங்களையும், அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பல்கலைகழகம் போன்ற நிறுவனங்களை வளர்க்க, எமது நிறுவனங்களை போன்ற  அரசிற்கு இலாபமற்ற கல்வி சார் சேவைசெய்யும் நிறுவனங்களை அரசு அழிக்க முற்படுகின்றதா..? என்ற கேள்வியும்  எழாமல் இல்லை.   இதனை  நாம் ஒருபோதும் முன்னெடுக்க விடக்கூடாது.  அரச நிறுவனங்கள் நட்டத்தில் போனாலும் கஷ்டம் மக்களுக்கே..! ஆனால் அவ்வாறான சூழலில் அதனைத் தடுக்க அல்லது குறைக்க வலுவான திட்டங்கள் போடவேண்டும். இருப்பதை மீளாய்வு செய்து சரியான வழியில் நடாத்த வேண்டும். அதற்கு நம்பிக்கையான விளக்கத்தை மக்களுக்கு கொடுக்க வேண்டும்.

 

இந்த சூழல்களின் நடுவே எமது நிறுவனத்திற்கான ஓபிண் டேயை எமது மாணவர்கள், விரிவுரையாளர்கள், ஏனைய ஊழியர்கள்  எல்லோரும் சேர்ந்து சிறப்பாக செய்தார்கள்.

எமது நிறுவனத்தில் இந்நிகழ்வை சிறப்பாகச் செய்ய பெரிதும் உதவியவர்கள் அனைவரும் மாணவர்களே..! அவர்களுக்கு இந்த இடத்தில் நன்றி சொல்ல நான் கடமைப்பட்டுள்ளேன்.

 

ஆ.கெ.கோகிலன்

11-06-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!