ஸ்டார்..!
நடிப்பு என்பதைத் தொழிலாக செய்யவிரும்பும் ஒருவரின் தொடர்
முயற்சியே கதை..! இங்கு, வாழ்க்கையிலே நூற்றிற்கு தொன்னூறு வீதமானவர்கள் நடித்துத்தான்
வாழ்கின்றார்கள்..! சினிமாவில் நடிக்க முயற்சிக்காவிட்டாலும், நிஜத்தில் திறமையான நடிகர்களாகவே
பெரும்பாலானோர் இருக்கின்றார்கள்..!
நிஜமாக, நடிக்காமல் உண்மையாக இருந்தால், இந்தப்பூமியில் வாழ்வது
கஷ்டம் எனப்பலர் நினைக்கின்றார்கள்.
குறிப்பிட்ட ஒருசிலரே, நிஜத்தில் நடிக்காமல் வரும் துன்பங்களையும்,
துயரங்களையும் தாங்கிக்கொண்டு, இயற்கையினதும் இறைவனினதும் இறுதி முடிவை எதிர்பார்த்துக்
காத்திருக்கின்றார்கள்.
இந்தப்படத்தைப் பொறுத்தவரை தந்தை லால், நடிக்க ஆசைப்பட்டு
அது முடியாமல் போக, பிள்ளையை சிறுவயதில் இருந்தே தூண்டிவர, அவனுக்கும் அது ஒரு பேராசையாக
எழ, தானும் வாழமுடியாமல், வந்தவர்களையும் வாழவிடாமல் போக, ஒரு இடத்தில் “கட்” சொல்லி
முடிகின்றது கதை..! படத்தில் இரண்டு காதல்கள் வருகின்றன. ஒன்று முறிந்ததற்கான காரணம்
மேலோட்டமாக இருந்தது. ஆழம் போதாது..! இரண்டாவது காதல் கொஞ்சம் பரவாயில்லை. இருந்தாலும்
அதனையும் தொடர முடியாமல் கவின் வெளியேறுவது, கவினுக்கு ஏதோ நோய் என்பது போல் கொண்டுசென்றுள்ளார்கள்.
நிஜமும் நிழலும் ஒரு புள்ளியில் சந்திக்கின்றது..! அப்படியோர்
காட்சி படத்தில் வருகின்றது..! திறமையான நடிப்பு இருந்தால், காட்சிகளில் தவறுகள் இருந்தாலும்,
அந்த நடிப்பு மக்களைப் படத்துடன் ஒன்றிக்க வைக்கும் என்ற உண்மையை கடைசிக்காட்சி உணர்த்தியது..!
மனைவி இறந்து கையில் பெண் குழந்தையை வாங்கும் போது நடிக்கும்
காட்சிகள், உண்மையில் கலங்க வைத்தன.
கவீனுக்கு கமல் மாதிரியாவதற்கான
தகுதிகள் உண்டு..! ஆதனால் தொடர்ந்து அதற்கான முயற்சிகளைச் செய்ய வேண்டும். இது படத்தின் கதையுடன் சம்பந்தப்படாவிட்டாலும்,
கவீன் என்ற நடிகருடன் சம்பந்தப்படுகின்றது.
விஜய் டிவியில் வந்த “கனா காணும் காலங்கள்..” என்ற தொடர்கள்
மூலம் சின்னத்திரைக்கு வந்து, அதிலிருந்து சரவணன் மீனாட்சியில் தடம் படித்து, பிக்பொக்ஸ்
ஊடாகப் பிரபலமாகி இன்று உண்மையில் ஒரு ஸ்டாராக ஜொலிக்கின்றார்.
படத்தில் அனைவரும் சிறப்பாக நடித்திருந்தார்கள். தொழில்நுட்பங்களும்
தரம். இலன் (Elan) என்ற இயக்குனர், கதையை இன்னும்
கொஞ்சம் நன்றாகச் செதுக்கியிருக்கலாம். இருந்தாலும் பார்க்கக்கூடிய படமே..!
ஆ.கெ.கோகிலன்
20-06-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக