திருகோணமலை பஸ் சேவை..!
நான் இங்கு வந்து ஏறக்குறைய 6 மாதங்களுக்கு மேலாகின்றது. ஆரம்பத்தில் காரில் வந்தாலும், பின்னர் அரச பேருந்திலே பயணிக்கின்றேன். போகும்போதும் வரும்போதும் எமது நிறுவனத்தை தாண்டித்தான் செல்லவேண்டும். அதனால் பஸ்ஸில் பயணிப்பது இலகு என்றாலும், ஒவ்வொரு முறையும் திருகோணமலையில் இருந்து யாழ்வரும்போது சீட் கிடைப்பது கடினம். நின்று தான் வரவேண்டும். வவுனியா தாண்டுவதற்குள் எப்படியாவது சீட் கிடைத்துவிடும். யாழில் இருந்து வரும்போது புக்பண்ணி வருவதால் சீட் எப்படியும் கிடைக்கும். இருந்தாலும் இவ்வாறு யாழிற்கும், திருகோணமலைக்கும் செல்லும் பஸ்களின் தரம் மிகவும் குறைவாகவே இருக்கும். சீட்கவர்கள் கிழிந்து கேவலமாக இருக்கும். சீற் கம்பிகளும் சரியான முறையில் வெல்டிங் செய்யாதபடியால் உடைவது போலிருக்கும்..!
நேற்று, யாழில் இருந்து வெளிக்கிடும்போதே கடும் சனம். மூச்சுவிட முடியவில்லை.
போனகிழமை இரு நாட்கள் லீவு வந்ததால், மக்கள் தூர இடங்களுக்கு சென்றுவந்துள்ளார்கள்.
அதனால் வழமையை விட அதிக கூட்டம்..! இந்த நிலையில் புக்பண்ணி வந்தாலும் மக்களின் கஷ்டங்களைப்
பார்த்தால் நாங்களும் தொடர்ந்து இருந்து வருவதில் சங்கடங்கள் இருக்கும். வயதானவர்கள்
நிற்பார்கள். பெண்கள் அதிலும் கர்ப்பிணிப்பெண்கள், குருமார்கள், நோயாளிகள், இயலாதவர்கள்
எனப்பலர் வருவதால் எனக்கு மனம் மிகக்கஷ்டமாக இருக்கும். யாருக்கு உதவுவது என்பதே பெரும் சிக்கலாக இருக்கும்.
இவ்வாறான சூழலில், யாழில்
இருந்து புறப்பட்ட பஸ்ஸில் பரந்தன் வரை இருந்து சென்றேன். பின்னர் ஒரு இடைத்தர வயதுடைய
பெண்ணிற்கு சீட் கொடுத்து உதவினேன். எனக்குப்பக்கத்தில் இருந்தவரும் எனக்கு முதலே எழுந்து ஒருவருக்கு சீட் கொடுத்தார். அவர் இருந்ததால், நான் கொடுத்தசீட்டில்
பெண்ணால் சரியாக இருக்க முடியவில்லை. ஒருவாறு சமாளித்து இருந்தார்கள். வவுனியா வந்ததும்
எழுந்து எனக்கு சீட் தந்தார்கள்.
இடையில் நின்றுவரும் போது,
பஸ்களின் தரம், மற்றும் அவற்றின் சேவைகள் தொடர்பாக அங்கு நின்ற மக்கள் திருப்தியற்று
இருந்தார்கள். குறிப்பாக பல பஸ்சேவைகள் Bus
Break Down ஆல் நிறுத்தப்பட்டுள்ளன. நாங்கள் பயணம் செய்த நேரத்திற்கு முதலுள்ள பஸிலும் ஏதோ இயந்திரக்கோளாறு காரணமாக இடையில் பஸ் நிறுத்தப்பட்டுள்ளது.
அந்த பஸ்ஸில் பயணித்த மக்கள் வவுனியாவில் காத்திருக்கின்றார்கள் என்ற செய்தியை எமது
பஸ் நடத்துனர் எமக்குத் தெரியப்படுத்தினார்..! அப்போதே பயம் வரத்தொடங்கிவிட்டது..!
இன்று சொன்ன நேரத்தில் பஸ் போய் சேருமா..? அல்லது இடையில் தவிக்க வேண்டி வருமா..? கடவுள்
மேல் பாரத்தைப் போட்டுவிட்டு, பஸ்களின் தரங்கள் மேம்படுத்த வேண்டும் என்றும், புதிய
பஸ்களை கொள்வனவு செய்யக்கோரியும் திருகோணமலை இ.போ.ச முகாமையாளருக்கு தெரிவிக்க நினைத்தோம்.
அத்துடன் மீடியாக்களுக்கும் தெரிவிக்க நினைத்தோம்.
இந்த எண்ணம் முடியும் முதலே, பஸ் வவுனியா வர சீட்டைத் தந்தார்கள்.
நாம் இருவரும் இருந்தோம். வவுனியாவில் நிறைய
மக்கள் ஏறினார்கள். மக்களின் கூட்டத்தைப் பார்த்ததும் பஸ் போய்சேருமா என்ற எண்ணம்,
போய் சேரும்வரை தொடர்ந்து எழுந்துகொண்டே இருந்தது..! கெப்பிட்டிகொலாவ, கொரோப்பொத்தான, ரொட்டவேவா, மொரவேவா
எனப்பொறுமையாக ஒடுங்கிக்கொண்டு இருந்த நான், இடையில் இறங்க வேண்டும் என்பதால், நான்
இருந்த இடத்தில் இருந்து முன்னுக்கு செல்ல
முனைந்தேன். நடக்க முடியவில்லை. அவ்வளவு கூட்டம். பையையும் தூக்கி வைத்துக்கொண்டு,
எல்லாரிடமும் உதவிகேட்டு, சிலரிடம் ஏச்சும் வாங்கி, என்னையறியாமல் கால்களை உழக்கியதால்,
கோப்பட்டுக் கத்தியும் சங்கடப்பட்டார்கள்..!
வரோதய நகரில் குறிப்பாக துவரங்காட்டுச் சந்தியிலுள்ள எமது ATI இல் இறக்கிவிடக்கேட்க, இடையில் நிற்பாட்டிவிட்டார்கள்..!
பின்னர் இறங்கி, திரும்ப படிக்கட்டில் நின்றுபடி அடுத்த Bus Holt இல் இறங்கினேன். நான் எண்ணியபடி, கஷ்டமான விடயங்கள்
ஒன்றும் நடக்காத படியால் இறைவனுக்கு நன்றி கூறி, நிறுவனத்திற்குள் நுழைந்தேன்.
நிம்மதியாக இருந்தது. நாளை எமது மாணவர்களுக்கு இரண்டாம் செமஸ்டர் தேர்வுகள்
தொடங்குகின்றன. அதனைச் சரியாகச் செய்யவே இறைவன்
கஷ்டங்களைத் தவிர்த்தார். இவ்வாறான பயணங்கள்
சொதப்பினால் எமது வேலைகளும் சொதப்பும்..! நல்ல காலம், தொடக்கம் சிக்கலாக இருந்தாலும், முடிவு நிம்மதியாகப்
போய்விட்டது..! மீண்டும் இயற்கைக்கும் இறைவனுக்கும் நன்றி.
ஆ.கெ.கோகிலன்
24-06-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக