எதிர்மறைப் புகழ்..!
பொதுவாக வாழ்க்கையில் நடக்கும் நல்ல விடயங்களோ அல்லது கெட்ட விடயங்களோ அவற்றைப்பற்றி கொஞ்சம் இயற்கை ரீதியாக நான் அலசுவது உண்டு.
இம்முறை மகளின் பெறுபேறுகள் நான் நினைத்ததையும் தாண்டி அமைந்தது
ஆச்சரியமானது என்றாலும் அது பல நன்மைகளையும் தருகின்றது..!
மகள் சொன்னது போல் தான் நன்றாகச் செய்யவில்லை என்றாலும் மூன்று பாடங்களில் பாஸ் சித்தியாவது அடைந்திருக்க வேண்டும். ஆனால் அது நடைபெறாததால், மீள் பரீட்சிப்பிற்கு விண்ணப்பம் போட விரும்புகின்றார். இவர் மாத்திரமன்றி இம்முறை நாடு முழுவதிலும் 27000பேர் மூன்று பாடங்களிலும் சித்தியடையத் தவறியுள்ளனர்..! அதேவேளை பல கிராமப்பாடசாலைகளிலும் நல்ல பெறுபேறுகள் வந்துள்ளன..!
கொரோனாவும், வீட்டில் இருந்து படிக்கக்கூடிய ஜூம் ஊடான கல்வியும், சுயமுயற்சியும் பலருக்கு நம்பிக்கை அளித்துள்ளது..! அலைச்சலற்ற ஆரோக்கியமான உண்மையான கல்விக்கு கொரோனா உதவியது, காலவோட்டத்தில் நடந்த பெருமாற்றம்..!
என்னைப்பொறுத்தவரை, இந்தப்பெறுபேறு எனக்கு வருத்தத்தை அளித்தாலும்
அதனை ஏற்றுக்கொண்டு, மகளைத் திரும்ப எழுதுவதற்கு தூண்டவும், துணையாக இருக்கவும் விரும்புகின்றேன்.
தோற்பவர்களை சிறு உதவிகளூடாக இன்னும் நன்றாக முயற்சிசெய்ய
வைக்க வேண்டும். அப்போது தான் அவர்களின் உண்மையான நிலை தெரியும்.
இன்று தான் திருகோணமலையில் இருந்து வீடு வந்தேன். வரும்போதே
எப்படிக்கதைக்க வேண்டும். அவரது முயற்சிகள் தெரிவதால் காயப்படுத்தக்கூடாது என்பதில்
கவனமாக இருந்தேன். இருந்தாலும் மனித மனங்கள்,
ஒப்பீடு செய்வதைக் குறைக்காதே..! எனது மனமும் அவ்வாறே ஓடியது..! ஒரு கட்டத்தில் புரிந்தது
நானும் பிழை செய்வதாக..!
அத்துடன் அதனை விட்டுவிட்டேன்.
அண்மைக்காலத்தில் எனது உறவுகளுக்கு இடையிலும், நட்பு வட்டங்களிலும்
மூன்று பாடத்திற்கும் கொடி தூக்கியதில் மகள் முன்னிலை வகிப்பது ஒருவிதத்தில் என்னை
அனைவருக்கும் தெரியப்படுத்தியுள்ளது..! அனுதாபங்கள் எழுந்துள்ளன..! ஆலோசனைகள் வழங்குகின்றார்கள்..!
முன்பு கதைக்க காலம் போதாமல் தவித்தவர்களும், தற்போது கதைத்து, ஆலோசனைகள் சொல்வது சந்தோசத்தையும்,
அதேவேளை ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகின்றது. நேரோ அல்லது மறையோ ஏதோவோர் வகையில் பிரபல்யம்
அடைந்திருப்பதும் மகிழ்ச்சிக்குரியதே..!
என்ன..? இரண்டாம் முறை எழுதி, தனது முயற்சியில் முன்னேறுவாரா
அல்லது வீழ்ந்து விடுவாரா என்பதை காலம் தான் சொல்லும். எது வேண்டுமானாலும் நடக்கட்டும்.
ஆனால் முயற்சிகள் மட்டும் தொடரவேண்டும். வருவதை ஏற்கத் தயாராக இருக்க, இயற்கையும்,
இறைவனும் உதவவேண்டும்.
ஆ.கெ.கோகிலன்
03-06-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக