மோட்டார் வண்டியின் பகீஸ்கரிப்பு..!

 



கடந்த வாரம் நாங்கள் எதிர்பாராத விடயங்கள் பல நிகழந்தன..! அம்மாவின் வருத்தம்..! மகளின் பரீட்சை முடிவு..! பரீட்சைப் பணிப்பாளர் நேர்முகத்தேர்வு..! எனப்பல வேறுபட்ட உணர்வை நான் அடைந்திருந்தேன். எனக்கு அந்த உணர்வுகளைக் கடந்து போகவே விருப்பம்.  அதை முகம்கொடுத்துக்கடக்க முயன்றேன். அந்த  முயற்சி இன்னும் தொடர்கின்றது..! இந்த சமயத்தில் மகளுடன், எனது தாயார் வீட்டிற்கு செல்ல வெளிக்கிட மோட்டார் வண்டி “ஸ்ராட்” செய்ய மறுத்தது. பல முயன்றும், களைத்தது தான் மிச்சம்..! மகளும் கூட முயன்றாள்..!

பின்னர் அம்மா வீட்டிற்கு மகளும், நானும் காரில் போய் அம்மா சொன்ன வேலைகளை முடித்து, பரீட்சை முடிவுகளுக்குப் பிறகு மகளையும் கூட்டிச்சென்று ஊக்கப்படுத்தத்தொடங்கினேன்.

நாம் நினைப்பது எல்லாம் நடக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் நடக்கும் என்ற நம்பிக்கையில் முயல்வதுவே  எமது கடமை..!

மகளைச் சாதாரணமாக மாற்றுவது எனபது ஒரு சவாலான விடயம் என்றாலும் அதைச்செய்தே ஆகவேண்டும்.

மாலை திருகோணமலை போகவேண்டும். ஆனால் வண்டி பழுதாகிவிட்டது. ஞாயிறு என்பதால் கடையும் பூட்டு..! பின்னர் மனைவியின் தயவில் மோட்டார் சைக்கிளில் வெளிக்கிட்டு, இனுவில் ஆஸ்பத்திரியடியில் ஒரு மினிபஸ்ஸைப்பிடித்து திருகோணமலை சென்றேன். நான் நினைத்ததை விட வேளைக்கே யாழ் பஸ் ஸ்டாண்ட் போனதால், நிறைய நேரம் கிடைத்தது.  பஸ் ஸ்டாண்டில் நிற்பதில் ஒரு சந்தோசம் வந்தது. எனது தந்தையாரும் இ.போ.சவில் வேலை பார்த்தவர். அவர் இருக்கும்போது பஸ் ஸ்டாண்ட் எப்படி இருந்ததோ அதைவிடக் கேவலமாக இப்போது இருக்கின்றது..! அரசின் பொருளாதார நிலை இங்கும் தெரிகின்றது..! வசதிபடைத்த நமது மக்களாவது, இப்படியான இடங்களில் தமது சேவைகளைச் செய்து, மக்களுக்கும் சௌகரியங்களை ஏற்படுத்தி, தமது மக்களுக்கான சேவை மனப்பாண்மையை ஏனையவர்களுக்குக் காட்டலாம்.

 

பஸ்ஸில் போகும் போது, சேலான் வங்கி ஊழியர் ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. அவருடன் கதைத்துக்கொண்டு போனததால் நேரம் போனது தெரியவில்லை.

வழமையைவிட இம்முறை நேரத்திற்குச் சென்றுவிட்டேன். அடுத்த நாள் லீவு எடுத்து மோட்டார் சைக்கிளை திருத்தியிருக்கலாம். ஆனால் ஓபிண் டே (Open Day) என்று அறிவித்ததால் எனது சில கடமைகள் அங்கே மிச்சமாகவுள்ளன. அதைச் செய்து முடித்தால் தான் எனக்கு நிம்மதி..!

அடுத்தநாளும் வந்தது..!

எண்ணியது போல் கருமங்கள் நடந்தன..! ஓபிண் டே பல அனுபவங்களையும், திறமைகளையும் வெளிக்கொண்டுவந்தது..!  இன்னும் சிறப்பாகச் செய்ய ஆசை..! பார்ப்போம். அடுத்தமுறை எப்படி நடத்தலாம் என்று..?

அன்றைய நாள் இனிமையாக நகர, அடுத்த நாள் மாணவர்கள் வரவு மிகக் குறைந்திருந்தது..! அதனால், எனது  வருகைதரு விரிவுரையாளர் வேலைக்கான கொடுப்பனவு ஆவணங்களை நிரப்பத்தொடங்கினேன். எனது பாடங்களுக்கான பாடவேளைகளில் அரைவாசிக்கு கீழேயே நான் படிப்பித்துள்ளேன்..! அவ்வளவு லீவுகள் எடுத்துள்ளேன். யாழில் இருந்தபோது லீவுகள் எடுப்பது குறைவு..!

நேற்றும் இன்றும் எனது வகுப்புக்களை, பாடத்திட்டங்களை முடிப்பதற்காகத்  எடுத்து, பாடங்களையும் முடித்து, ஒருவாறு நேரங்களை சமப்படுத்தினேன்.

படிப்பித்ததால், இரண்டு நாட்களும் பயனுள்ளதாக மாறின.  இன்று, யாழ் வெளிக்கிட வேண்டும் என்பதால் நேரத்திற்கு செல்ல முடிவுசெய்து, அவ்வாறே மதியத்துடன் புறப்பட்டேன்.

பின்னர், யாழ் வந்துசேர இரவு ஏழுமணிவரை எடுத்துள்ளது.  பிந்தி வந்தால் ஓட்டோ பிடிக்க வேண்டிவரும் அல்லது வீட்டில் இருந்து உதவி எடுக்க வேண்டும்.

அதனைத் தவிர்க்க, அரை நேரத்துடன், 1.15 மணி பஸ்ஸில் ஏறி, யாழ்வர  மாலை 6.15 ஆகிவிட்டது. பின்னர் மினி பஸ் பிடித்து வீடு வந்து சேர 7.00 மணிக்கு கிட்ட வந்துவிட்டது. வந்த உடனேயே மோட்டார் வண்டியை திருத்தக் கொண்டுபோனேன். “திருத்துனர்” சொன்னார் இதைச் செய்ய பெரிய செலவு உண்டு..! தங்களுக்கும் கடை பூட்டும் நேரம் வந்ததால், நாளைக்குப் பார்ப்பம் என்றார். நானும் தலையாட்டினேன். 

நீண்ட நாட்களுக்குப் பிறகு தேநீர் அருந்தி, குளித்து, விளக்குவைத்துச் சாப்பிட இரவு 8.00 மணி தாண்டிவிட்டது. அத்துடன் பிள்ளைகள் மற்றும் மனைவியுடன் கதைத்துப் பொழுதைப் போக்கிய பின்னர், மகளைப் படிக்கத் தூண்டினேன். முயற்சியை மட்டும் தொடரவேண்டும். வெற்றிகள் வரலாம், போகலாம். ஆனால் முயற்சியை விடாது தொடர வேண்டும்.

 

ஆ.கெ.கோகிலன்

14-06-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

நம்பிக்கையீனம்..!

இயற்கை தந்த வலி..!