தர்மசங்கடம்..!
மதிப்பை யாரும் பறிக்கவோ அல்லது கொடுக்கவோ முடியாது என்பது
தான் நிஜம். இன்று ஒருவர், நாம் அருகில் நிற்க்கும் போது புகழலாம். நாம் தூரச்சென்றதும்
எம்மைப்பற்றித் தூற்றலாம். கிட்டத்தட்ட அரசியல்வாதிகளை மக்கள் இவ்வாறே பார்ப்பார்கள்.
அரச ஊழியர்களான நாங்கள் அவ்வாறு இருக்கவேண்டிய தேவையோ அல்லது அவசியமோ கிடையாது. எனவே உண்மையாக இருப்பது தான் சிறந்தது. இருந்தாலும்
யதார்த்த வாழ்வில், பல இடங்களில் எமது உண்மை முகத்தைக்காட்ட முடியாத சூழலில் நாமும்
இருக்கின்றோம். தவிர்க்க மனமில்லாத சூழலில் உண்மையைச் சொன்னாலும், சூழலும் அதனைக்கேட்டு,
ஏற்கத் தயாராக இருப்பதில்லை.
இந்த மனநிலையைத் தாங்கவும், சகிக்கவும், என்னை மனரீதியில்
தயார்படுத்தவும் ஒரு பயிற்சி தேவைப்பட்டது. வயதுகள் போக ஆற்றல்களும் ஆயுளும் குறையும்.
அதனால் மரியாதைகளும் குறையும். ஆனால், முன்பு கிடைத்த மரியாதை
எப்போதும் இருக்கும் என்ற நம்பிக்கையில் நாம் நன்றாக நடந்தாலும், அதையும் தாண்டி சில
உண்மையான மனிதர்களின் நடவடிக்கைகள் மனத்தாக்கங்களை ஏற்படுத்தும். அந்தத் தாக்கங்களைத் தாங்கக்கூடிய பக்குவத்திற்கு
நாம் வந்துவிட்டோம் என்றால் எம்மை யாரும் அசைக்க
முடியாது.
யாழ் உயர்தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனத்தில் ஆறுவருடங்களுக்கு
மேல் பணிப்பாளராக இருந்தும், சில விடயங்களை என்னால் செய்ய முடியாது போய்விட்டது. அந்த ஆறுவருடங்களும்
நாடும், உலகமும் பல சவால்களை எதிர்நோக்கவேண்டிய சூழலுக்குள் போய்விட்டது. எப்படிக்கத்தியும்
ஒன்றும் நடக்காவிட்டால் என்ன செய்ய..? ஒதுங்கவேண்டியது தான். அதை நானும் செய்தேன்.
நின்று, போராடி, வெல்லக்கூடிய சூழலும் அமையவில்லை. அமைக்கவும் முடியவில்லை. தலைமைகளின்
சொற்களுக்கு கட்டுப்பட்டு நடக்கும் ஒரு ஊழியனாக என்னால் இயன்றதைச் செய்தேன். தூரம்
சென்றாலும் தற்போது உடல் வலுவுடனும், மனவுறுதியுடனும் இருக்க இறைவனும் இயற்கையும் ஆசீர்வதிப்பதாக
உணர்கின்றேன்.
இந்த ஆரோக்கிய மனநிலையில் இருக்கும்போது, கலை மற்றும் கலாச்சாரத்துடன்
கூடிய பரிசளிப்பு நிகழ்வில் கலந்துகொள்ள, மின் அழைப்பு வந்தபோது, அதனை முதலில் தவிர்க்கவே
நினைத்தேன். பின்னர், யார் தவறுகள் செய்தாலும்,
நானிருந்த நிறுவனமும், பிள்ளைகளும், ஊழியர்களும் என்னுடன் பயணித்த காலத்தை மதிக்கவும்,
என்னால் முயன்ற சில விடயங்கள் நிஜமாக்கப்பட்டிருப்பதை உணரவும், அவற்றின் தொடர்ச்சியை
ரசிக்கவும் எந்த மாரியாதை கிடைக்காவிட்டாலும் ரசிகனாக அந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்க
வேண்டும் என்று உறுதிபூண்டேன். என்னால் இயன்றவரை மனவுணர்வுகளை அடக்கி, வாழ்வியல் யதார்த்தத்தை
உணர்ந்து, பொறுமையுடன் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 வரை இருந்து, என்னால் முடிந்த
ஒத்துழைப்பையும், பாராட்டல்களையும் வழங்கி, மதிய உணவுடனும், தற்போதைய புதிய பணிப்பாளர்
நாயகத்துடன் சில கருத்துக்களைப் பரிமாறியபின், மனைவியின் கோரிக்கையையும் நிறைவேற்றியபடி
வீடு வந்தேன்.
2000 மாணவர்களும், 200 ஊழியர்களும் 6 வருடங்களுக்கு மேல்
என்னுடன் பயணித்ததால், அவர்களின் சந்தோசத்தில் பங்குகொண்டது, எனக்கு சற்று சங்கடமாக
இருந்தாலும் அவர்களுக்குச் சந்தோசமாக இருந்திருக்கும்
என்று நினைக்கின்றேன். அதே நேரம் என்னுடன் வந்த, இன்னோரு பணிப்பாளர் குமுறியது சரியாகப்பட்டாலும்,
அனுபவம் பெற்றவர்கள் பொறுமையுடன் குறித்த கணத்தில் நடக்கும் நல்லவிடயங்களை ரசிக்க வேண்டும்
என்றும், எனக்கும் அவ்வாறான எண்ணங்கள் வந்தாலும், அதனைப் பொறுத்து மௌனமாக இருக்க, அவருக்கும்
மட்டும் கேட்கச் சொல்லி, இறுதிவரை அவ்விழாவை ரசித்து முடித்த திருப்தியில் இருக்கின்றேன்.
யாழில் உள்ள அனைத்து பெரிய மண்டபங்களிலும் எமது கலாசார விழாக்களை நடாத்திய மற்றும்
பங்குபற்றிய அனுபவத்துடன், இப்படியான நிகழ்ச்சிகளின் போக்கை, வீரசிங்க மண்டபத்தில்
தொடக்கிய அனுபவமும் எனக்கு அமைந்தது இறைவனின் ஆசியே..!
மதிப்பும் மரியாதையையும் கேட்டு வாங்குவதல்ல..! அதற்கான தகுதிகளை
மட்டும் நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக எம்மை நாம் முதலில்
மதிக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் எமது மனம் களங்கப்பட விடக்கூடாது. அதனைச் செய்யாவிட்டால்,
அது தான் நாமே நமக்கு அளிக்கும் தீமை.
”தீதும் நன்றும் பிறர் தர வரா..”
ஆ.கெ.கோகிலன்
09-04-2024
கருத்துகள்
கருத்துரையிடுக