அயோத்தி..!
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்திலுள்ள ராமர் கோவிலுடன் தொடர்புடைய
ஒரு இந்து ஆச்சார குடும்பத்தின் தலைவன், பெண்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை..! அதேபோல்
தென்னிந்தியர்களையும் கேவலமான மனிதர்களாகவே பார்க்கின்றான்..!
அவனின் குடும்பத்தில் மனைவி, பருவ வயது மகள் மற்றும் ஒரு
சிறு மகன் இருக்கின்றார்கள். அவன் வீட்டிலும் மனைவி பிள்ளைகளிடம் அன்பாக இருப்பதில்லை. “பான்பராக்” போட்டுக்கொண்டு, தன்சார்பிலேயே அனைத்தையும் பார்க்கின்றான்.
மனைவி பொறுத்துப்போனாலும், மகளுக்கும் மகனுக்கும் அவனது இயல்புகள் பிடிக்கவில்லை. தள்ளியே
இருக்கின்றார்கள். இந்த நிலையில், இராமேஸ்வரத்திலுள்ள ராமரைத் தரிசிக்க விரும்புகின்றான்.
மனைவி மற்றும் பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு
ரெயிலில் பிராயாணம் செய்கின்றான். அயோத்தியில் இருந்து மதுரை வந்ததும், தவிர்க்க முடியாத
சூழலில், டக்ஸி மூலம் ராமேஸ்வரம் போக குடும்பத்தினரை வற்புறுத்திக் கூட்டிச்செல்கின்றான்.
அந்நேரம் மகள் உடலுபாதையைக் கழிக்க சந்தர்ப்பம் கேட்ட, மறுத்து தனது கோபத்தை வெளிப்படுத்தி,
அவளையும் அடக்கிவரத் தூண்டிக் கஷ்டப்படுத்துகின்றான்..! டக்ஸியில் ஏறினாலும் அதன் சாரதியை வம்புக்கிழுத்து,
அவனை விரைவாக வண்டியை ஓடப்பண்ணி, இறுதியில் விபத்தில் மாட்டி அனைவரும் மருத்துவமனையில்
சேர்க்கப்படுகின்றனர்.
இந்த நிலையில் அவனின் மனைவி கடுமையாகப்பாதிக்கப்பட்டு, உயிரிழக்கும்
நிலைக்குப்போகின்றார்..! இதனால் பல சிக்கல்கள்
வருகின்றன..! அனைத்தையும் தாண்டி, ராமர் தரிசனம் பார்க்க வந்த மனைவி, சடலமாக அயோத்தி
திரும்பச் சூழல் வழியமைத்துவிட்டது..!
அங்கு இவர்களிடம் ஏதேட்சையாக வந்து, மனப்பூர்வமாக உதவி செய்துகொண்டிருக்கும்
சசிக்குமார் மற்றும் புகழ் படாதபாடுபட்டு, குறித்த நாளிலேயே அந்த வடஇந்திய மனிதனையும்,
பிள்ளைகளையும் அவனது மனைவியின் சடலத்துடன் அயோத்தி அனுப்பி வைக்கின்றான். வசதி இல்லாவிட்டாலும்
தாம் இந்திய நாட்டின் உயர்வானவன் என்ற அந்த வட இந்திய மனிதரின் எண்ணம், சசிக்குமாரின்
நடவடிக்கைகளால் சிதைக்கப்படுகின்றது. ஒரு கட்டத்தில் மகளே, தந்தையின் போலிப் பெருமையை
உடைத்து, அவரைத் திருந்தச் செய்கின்றாள்.
விதிமுறைகள், பணம், நேரம் போன்ற பல தடைகளைத் தாண்ட, என்ன
என்ன வழிகள் இருக்கின்றதோ அனைத்தையும் முயல்கின்றார்கள்.
இறுதியாக சடலத்திற்கும், மகளுக்கும் அயோத்தி போக ரிக்கெட்
கிடைத்தாலும் தந்தைக்கும் தம்பிக்கும் ரிக்கெட் கிடைக்கவில்லை. அதற்கும் முனைய முகாமையாளரைப்
பிடித்து, போடிங்கிலுள்ள பயணிகளிடம் 2 ரிக்கெட்டுகளை விட்டுத்தரும்படி கேட்ட, ஒரு வயதான
பெற்றொர் இன்னொரு நாள் போவதாக விட்டுக்கொடுக்கின்றார்கள்..!
படத்தில் பல காட்சிகள் உணர்வுகளைத் தூண்டிக் கண்களில் நீர்வர
வைக்கின்றன. மனிதம் வெளிப்படுகின்றது..!
மிருகம் போல் நடந்துகொண்ட மனிதன், இறுதியில் உணர்ந்து கதற
கண்களே கலங்குகின்றன..!
முதலில் திரையிலும், பின்னர் OTT தளத்திலும் படம் வெளிவந்தாலும் OTT இல் தான் படம் பிரலமானது..! உண்மையில் ஒரு வித்தியசமான
படம். காதல் காட்சிகள் இல்லை. குடும்பப் பிரச்சனைகள் இல்லை. சண்டைகள் இல்லை. ஆனால்
படம் தேவையான பல கருத்துக்களை கடத்துகின்றது..! சில தர்க்கத் தவறுகளும் இருக்கின்றன.
இருந்தாலும் ஒட்டுமொத்தக்கதை தரமாக இருக்கின்றது.
நான்கு நாட்கள் தாமதித்து, சடலத்தைக்கொண்டு போக விரும்பாமல்,
ஒரே நாளில் பல விதிமுறை மீறல்களைச் செய்து பயணிக்க வேண்டிய தேவை இல்லை. மாறாக அந்தக்
குடும்பத்தை, ஓரிரு நாட்கள் தங்கவைத்து, ஆற
அமர காரியங்களைச் செய்தால், இன்னும் தரமாக இருக்கும். இது உடனே ஒரு நாளிலேயே அடக்கம்
பண்ண துடிப்பது எனக்குச் சரியாகப் படவில்லை. சரி, அவ்வாறான நிலையை மன்னித்து ஏற்போம்.
எல்லாம் செய்ததன் பின்னர், அந்த வட இந்தியர் சசிக்குமாரிடம் பெயர் கேட்க, “அப்துல் மாலிக்” என்று சொன்னது சிறப்பு..! மனிதம் வேறு, மதம் வேறு..! பூமியில் வாழ மனிதம் பேனுவோம், மதத்தை மறப்போம். இல்லையேல் ரத்தங்கள் மீண்டும் ஆற்று நீராகலாம்..!
அனைத்துத் தொழில்நுட்பங்களும் தரம். யாஸ்பல் சர்மாவின் நடிப்பு எரிச்சலூட்டும் அளவிற்கு
தரம். பிரிதி அஸ்ராணி வாழ்ந்துள்ளார்..! தாயாகவும்,
சடலமாகவும் நடித்த அஞ்சு அஸ்ராணிக்கு தலைவணங்கலாம். சிறுவன் அட்வைத் விநோத்தின் இயல்பான
நடிப்பும் கலங்க வைத்தது. அனைத்துப் பாத்திரங்களின் பங்களிப்பும் சிறப்பு. நாயகன் என்று சொல்லாவிட்டாலும், நடிகர் சசிக்குமாரின் இயல்பான
நடிப்பிற்கு, மக்கள் மனதில் ஓரிடம் கிடைக்கும்.
இயக்குனர் ஆர்.மந்திர மூர்த்தி வித்தியாசமான கதையைக்கொடுத்து,
எம்மை மகிழ்வித்ததுடன், மனிதநேயம் பற்றிப் பாடமும் எடுத்துள்ளார்..! அனைவரும் பார்க்க
வேண்டிய படம்.
ஆ.கெ.கோகிலன்
21-06-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக