பனங்கிழங்கு..!
எமது பிரதேசம் பனைகளுக்கு பிரபலமானது. யுத்த காலத்தில் இலங்கை மற்றும் இந்திய ஆமி அடித்த செல்களில் இருந்து எவ்வளவோ மக்களைக் காத்தது பனைமரங்கள் தான்..!
யாழ் சமூகம் என்றும் எமது கற்பகதருவான பனைமரங்களுக்கு தலைவணங்கித்தான் ஆகவேண்டும். அவ்வளவு பலன்களைக் காலம் காலமாக எமது மக்களுக்கு வழங்கி வருகின்றது. அண்மையில் வந்த நாகரீகங்களும், வெளிநாட்டுப்பொருட்களும், பணமும் மக்களின் எண்ணங்களை மாற்றிவிட்டது. அதன் விளைவு இன்றைய பொருளாதார இறுக்கச் சூழல்..!
பொருளாதார இறுக்கத்தைக் குறைக்க, அரசு வீட்டுத்தோட்டம் செய்யச்சொல்ல நானும் என்னால் இயன்றதைச் செய்தேன். அந்தவகையில் மூன்று நான்கு மாதங்களுக்கு முன்னர், பனங்காய் பணியாரம் செய்ய அடுப்பில் சுட்ட பனம்பழக் கொட்டைகளை ஒரு சிறிய மண்மேட்டில் அவை முளைக்கின்றதா எனச்சோதிப்பதற்கு, குட்டிப்பனம் பாத்தி போட்டேன். நேற்று மாலை வேலையால் வந்ததும், அந்தப்பாத்தியில் ஏதாவது வந்திருக்கின்றதா எனப்பார்க்க கிண்டினேன். என்ன ஆச்சரியம் பனங்கிழங்குகள் விளைந்திருந்தன..!
சுட்ட பனம் கொட்டைகளும் பலன் தருகின்றது..! முளைத்திருக்கின்றன..! ஆனால் பாத்தி சிறுவுயரம் என்பதால் கிழங்குகள் மண்ணுக்குள் தாண்டிருந்தன. தண்ணீர்விட்டு, கிடங்காக்கி, அவற்றை மிகக்கஷ்டப்பட்டு இழுத்தேன். 5 அல்லது 6 கிழங்குகள் வந்தன. அத்துடன் களைத்துவிட்டேன். விடுபட்ட ஒன்று இரண்டு கிழங்குகளை என்னால் இழுக்க முடியவில்லை. பிக்கானால் இறுக்கிக் கொத்தினேன். அவை சிதைந்துவிட்டது. அத்துடன் பெரும் களைப்பு வந்துவிட்டது. அப்போது ஒரு உண்மை புரிந்தது. ஒரு ரூபா.100 பெறுமதியான கிழங்குகளை உருவாக்கி, எடுக்கவே எனக்கு நாக்கு தள்ளுகின்றது..!
கருத்துகள்
கருத்துரையிடுக