சீதா ராமம்

 

பல நாட்களாக எனது மகள், கேட்ட ஒரு படம் சீதா ராமம்..!  DVD ஏன் இன்னும் வாங்கவில்லை என்பாள்..? நான் சொன்னேன் நான் DVD வாங்கும் கடையில் அந்தப்படம் இன்னும் வரவில்லை என்று.. அதற்கு அவள் தனது நண்பர்கள் எல்லாரும் பார்த்துவிட்டார்கள். நீங்கள் வேறு கடையில் கேட்டுப்பார்க்கலாமே என்பாள். நானும் சரி என்று தலையாட்டினாலும் வாடிக்கையாக வாங்கும் கடையைவிட்டு வேறு கடைக்கு போக மனமில்லை. இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் இந்தப்படம் புதுவருடம் அன்று 3.00 மணிக்கு போடுவார்கள் என்று விளம்பரங்களும் வந்தன. மகளுக்குச் சொன்னேன் TVஇல் போடுகின்றார்கள். இனி DVD  வாங்கத்தேவையில்லை என்றேன். இரண்டு மூன்று தடவை அந்தப்படத்தை பார்க்கவேண்டும்  என்றும், வாங்குங்கள்  என்றும் சொன்னாள். நானும் சரி என்று ஒத்துக்கொண்டேன். 

இன்று புதுவருடம். நேற்றும் இன்றும் கடும் வைரஸ் காய்ச்சல். ஒரு இடமும் போகவில்லை. ஒரே படுக்கை. தலைப்பாரம் வேறு..! வாய் கச்சலாக இருந்தது. எதையும் சாப்பிடப்பிடிக்கவில்லை. TV நிகழ்ச்சிகளையும் ரசிக்க முடியவில்லை. பனடோல் இரண்டை எடுத்துக்கொண்டு சீதா ராமத்தில் ஒன்றித்தேன்.

காஷ்மீர் எல்லையில் உறவுகள்  ஒருவர் கூட இல்லாத ஒரு இராணுவ வீரன்  காதல் வயப்பட்டு, கைகூடி வரும்வேளை பாகிஸ்தான் இராணுவத்திடம் சிக்கி இறக்கின்றான்.

காஷ்மீரில் நடக்கும் சண்டையில் ஒரு பெண் குழந்தையைக்காக்க முனைந்ததால் இந்த நிலை அந்த இராணுவ வீரனுக்கு ஏற்பட்டது.  அவன் காதலித்த சீதா மகாலக்சுமி என்பது நூர் ஜகான் என்ற ஓர் இளவரசி.  அவளும் காதலுக்கு மரியாதை செய்து அந்த இராணுவ வீரனிடமே வந்துசேர்கின்றாள்.  இந்த சம்பவங்கள் நடந்து   பல வருடங்களுக்குப்பிறகு,  பாகிஸ்தான் பெண், லண்டனில் இருந்து, வன்முறைகளில் ஈடுபட்டு, அதற்கு நட்டஈடு கட்ட தாத்தாவின் உதவியைக் கேட்க வர, தாத்தா இறந்தும், கொடுத்த வேலையை நிறைவேற்றும் போது, அவளுக்குப் புரிகின்றது இராணுவ வீரன் காத்த அந்தப் பெண்குழந்தை தான் என்று..!



இதனை முதலே ஊகிக்கக் கூடியதாக கதை இருந்தது. இருந்தாலும் இந்தக்கதையில் ஒரு ஈர்ப்பு இருக்கின்றது. அது, மதங்கள், இனங்கள், நாடுகள் கடந்து மனிதம் என்ற ஒன்று இருக்கின்றது என்பதை உணர்த்திச் செல்கின்றது.  துல்கர் சல்மான் (Dulquer Salmaan), மிருனால் தாகூர் (Mrunal Thakur) ராஷ்மிகா மந்தானா  (Rashmika Mandanna) ஆகியோர்களின் நடிப்பு சிறப்பு.  ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு அனைத்தும் தரம். இயக்குனர்  ஹனு ராகவாபுடியை (Hanu Raghavapudi)  பாராட்டலாம்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நம்பிக்கையீனம்..!