கே.ஜே. ஜேசுதாஸ்

 

தமிழில் பிரபலமான பாடகர்கள் இருக்கின்றார்கள். அவர்களுள் எஸ்.பி.பாலசுப்ரமணியம், கே.ஜே. ஜேசுதாஸ் மற்றும் மலேசியா வாசுதேவன் போன்றோர் ஒரு காலத்தில் மிகவும்  புகழ்பெற்று விளங்கினார்கள்.  இவர்களில் இசை ஞானம் அதிகம் உள்ளவர் என்று கே.ஜே. ஜேசுதாஸ் அவர்களையே சொல்வார்கள். அதற்காக மற்றவர்களுக்கு ஞானம் கிடையாது என்பது அர்த்தமல்ல. இவர் இசை படிப்பதற்காக நிறையக்காலங்களைச் செலவிட்டுள்ளார். அத்துடன் அவரது குரலும் மிகவும் துல்லியமான கணீர் என்று ஒலிக்கக்கூடியது.

இருந்தாலும் இவருடைய தாய்மொழி மலையாளம் என்பதால் தமிழில் “பிள்ளை“ என்பதை “பில்லை“ என்றே உச்சரிப்பதாகப் பலர் சொல்வார்கள். இருந்தாலும் அவருடைய பாடல்களை மறக்க முடியாது. “கண்ணே கலைமானே..” இன்று வரை கேட்கத்தோன்றும்.  அதேபோல் “அதிசயராகம், ஆனந்த ராகம்  அழகிய ராகம் அபூர்வ ராகம்..” என்ற பாடல் 80களில் கலக்கியது.  நிறைய நல்ல பாடல்களைப் பாடியுள்ளார். எனக்கு மிகவும் பிடித்த அவருடைய பாடல் ”ஏ பாடல் ஒன்று..”

நிறைய பக்திப்பாடல்களையும் பாடியுள்ளார். கிறிஷ்தவர் என்றாலும் நிறைய ஐயப்பன் பாடல்களைப் பாடியுள்ளார்.

10-01-1940இல் பிறந்த அவருக்கு இன்று 83 வயதுகள் ஆகிவிட்டது.  1961 முதல் பாடிக்கொண்டிருக்கும் இவர் ஏறக்குறைய 80000 இற்கு மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். இந்திய மொழிகள் தாண்டி அரபிக்,  ஆங்கிலம் ரஷ்ய மொழி மற்றும் இலத்தீன் மொழிகளில் கூடப் பாடல்கள் பாடியுள்ளார். 

தற்போது உயிரோடு இருக்கும் மிகச் சிறந்த பாடகர்களுள் இவரே முதன்மையானவர். அவரது பாடல்கள் வருவது இப்போது குறைவு என்றாலும் அவருடைய பாடல்களின் இனிமை என்றும் குறையாதது. காலங்கள் கடந்தும் அந்தக் குரல் இந்தப் பூமியில் நிலைக்கும். 

3 பிள்ளைகளின் தந்தையான அவரின் மகன் விஜய் ஜேசுதாசும் பாடல்கள் பாடியுள்ளார். அத்துடன் விஜய் போல் ஜேசுதாசும் படங்களிலும் நடித்துள்ளார். பாடல்களுக்கு இசையும் அமைத்துள்ளார்.  கேரள அரசின் பல விருதுகளைப் பெற்றதுடன், இந்திய அரசின் உயர்விருதுகளையும் பெற்றுள்ளார். அவருக்குப் பிறந்த தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வோம்.





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!