சாபம் (The curse/malediction)

 

அண்மைக்காலமாக நிறையக் கெட்டபெயர்கள் எனக்குத் தானாகவே வருகின்றன..! எவ்வளது தூரம் தவிர்த்தாலும் அவை வந்தே சேருகின்றன. இவை பெரும்பாலும் நான் வேலை செய்யும் இடத்தில் இருந்தே வருகின்றன.  எமது நிறுவனத்தில் பாதுகாப்பு ஊழியர்களாக வேலைசெய்தவர்கள் ஒரு தென் இலங்கையிலுள்ள கொம்பனியின் மூலமே அந்த வேலையைச் செய்தார்கள். எமது நிறுவனத்திற்கு வேலைசெய்தாலும் அவர்கள் அந்தக்கொம்பனியின் வேலையாட்களே..! இருந்தாலும் எமது நிறுவனத்தில் வேலை செய்வதால் நான் எனது நிறுவன ஊழியர்கள் போலவே அவர்களையும் நடாத்தினேன். அவர்களது  சில பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு உதவினேன். என்னால் இயன்ற நன்மைகளை அவர்களுக்குச் செய்து கொடுத்தேன். இந்தச்சூழலில் கொம்பனிக்கும், பணிப்பாளர் நாயகத்திற்குமான ஒப்பந்தத்தில் அவர்கள் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்பதால், அவர்களை வேலையைவிட சொல்லப்பட்டுள்ளது..! அதற்கு ஒரு சில மாதங்கள் காலக்கேடும் கொடுக்கப்பட்டது. கொம்பனியும், அந்த ஊழியர்களும் அதனைச் சரியாகச் செய்யவில்லை. அத்துடன் அந்தக்காலப்பகுதி, பொருளாதாரச் சிக்கலால் நாடு உச்சக்கட்டப் பாதிப்பில் இருந்தது. நான் கூட அலுவலகம் போகமுடியாத எரிபொருள் தட்டுப்பாடுகள் இருந்தன.  கொம்பனிக்கும் ஆட்களை எடுக்க முடியாது இருந்துள்ளது. அத்துடன் மிகக்குறைவான சம்பளமே அவர்களுக்குக் கொடுப்பதால், அந்தச் சம்பளத்திற்கு வேறு பொருத்தமான ஆட்களை அமர்த்த கொம்பனியால் முடியவில்லை. அந்தக்கொம்பனி, வவுனியாவிலுள்ள ஒரு முகவரூடாகவே இந்த வேலைகளைச் செய்தது.  அவர்கள் நேரடியாக எமது நிறுவனத்திற்கோ, அல்லது என்னையோ சந்திக்க முனையவில்லை. இதற்கான ஒப்பந்தம், பழைய பணிப்பாளர் நாயகத்திற்கும், கொம்பனிக்கும் இடையிலே நிகழ்ந்துள்ளது. அவர்கள் விதிமுறைகளைத் தெளிவாகக் கொம்பனிக்கு கொடுத்திருந்தாலும், கொம்பனி இலாபத்தைத் தவிர வேறு எந்த நலன்களிலும் அக்கறை காட்டவில்லை என்றே தெரிகின்றது. இதற்குப் பின்னாடி  தென்னிலங்கை அரசியல் பின்புலங்களும் இருக்கலாம். பாதுகாப்பு ஊழியர்களைப் பணிக்கு அமர்த்தும்போது, இங்கு வேறுகொம்பனிக்கு கீழ்  எமது நிறுவனத்தில் வேலைசெய்த பழைய  பாதுகாப்பு ஊழியர்களையே கொம்பனியும் எம்மிடம் கேட்டு எடுத்தது. ஆனால் அதன்பின்னர் அவர்களுக்கு இடையே சரியான தொடர்பாடலும், கண்காணிப்பும் இல்லாமையால் இவ்வளவு சிக்கலும் ஏற்பட்டது..!  சில தவறான கொம்பனியின் நடைமுறைகளை நானும் தலைமையகத்திற்குத் தெரியப்படுத்தினேன். அவர்களும் காதில் போட்டதாகத் தெரியவில்லை. எல்லாத் தொடர்புகளையும் எழுத்திலேயேயும் வைத்திருந்தேன்.  2021இல் கொரோனா காரணமாக அனைத்து பாதுகாப்பு ஊழியர்களும் பாதிக்கப்பட்டிருந்தபோது மாற்று ஏற்பாடுகூடச் செய்யமுடியாமல் கொம்பனி இருந்தது. நான் தலைமையகத்திற்கு கொம்பனியின் சேவை திருப்தியாக இல்லை என்பதையும், அவர்களுக்கு திரும்ப சேவை நீடிப்பு வழங்கவேண்டாம் என்றும் சொன்னேன்.  ஆனால் தலைமையகம், ஏதோ காரணத்திற்காக அதனைச் செய்யாது மேலும் மேலும் எம்மையும், நிறுவனத்தையும் சிக்கலுக்குள் தள்ளிவிட்டது.  


இவ்வாறான செயற்பாட்டால் பாதிக்கப்பட்ட அந்த ஊழியர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வேலையைவிட்டுச் சென்றுள்ளார்கள். இருந்தாலும் அவர்கள் வேலைசெய்ய அந்த சில மாதங்களுக்கான கொடுப்பனவை கொம்பனி இன்னமும் செய்யவில்லை. அவர்களுக்கு நியமனக்கடிதம், EPF போன்ற எதுவும் கொம்பனி கொடுக்கவில்லை. இந்தவிடயத்தை நான் பழைய பணிப்பாளருக்குத் தெரியப்படுத்தியபோதும், அவர் அதனைக்கண்டுகொள்ளவில்லை.  மேலும் என்னையே ஏசி, இப்படியான விடயங்களைக்கொண்டுவரவேண்டாம் என்றார். அதனையே நானும் பாதுகாப்பு ஊழியர்களிடம் தெரியப்படுத்தி, நீங்கள் தான் கொம்பனியுடன் கதைக்க வேண்டும். நாம் ஒன்றும் செய்ய முடியாது. உங்கள் சேவை திருப்தி இல்லை என்றால் எனது தலைமையகத்திற்கு தெரிவிக்கமுடியும்.  அவ்வளவு தான் என்று பல முறை  அவர்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளேன்.
இந்த நிலையில் இன்று அந்தப்பாதுகாப்பு ஊழியர்கள் எனது அலுவலகம் வந்து, என்னைத் திட்டி உங்களால் தான் நாங்கள் இங்கு வேலைசெய்தோம். நீங்கள் சொன்னதால் தான் நாங்கள் இங்கே இருந்தோம். உங்களை நம்பினோம். நீங்கள் ஏமாற்றிவிட்டீர்கள். நீங்கள் நல்ல இருக்க மாட்டீர்கள் என்றெல்லாம் என்னைத் திட்டத்தொடங்கினார்கள்..!

எனக்கும் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர்கள் செய்த காலப்பகுதிக்கான கொடுப்பனவைச் செய்யவேண்டும்.  அதனைக்கொம்பனி செய்யவேண்டும்.  60வயதுக்கு மேற்பட்டவர்களை அனுமதித்ததற்கும், அதற்கு மாற்றீடு செய்யாமல் இருந்ததற்கும் கொம்பனியே பொறுப்பு. என்னைப்பொறுத்தவரை நான் உண்மையாக எனக்குத் தெரிந்த அளவிலே நடந்துள்ளேன். அவர்கள் வேலைசெய்த கூலியைப் பெற்றுக்கொடுக்க முனைவேன்.  அவர்கள் வேலைசெய்த காலத்தை உறுதிப்படுத்திக்கொடுப்பேன்.  இருந்தாலும் தலைமையகம் சொன்னால் மட்டுமே அவர்களின் பணத்தை கொம்பனிக்கு கொடுக்க முடியும்.  அதனைச்செய்யும் படியும் இரு சாராரிடமும் கேட்டுள்ளேன்.  இருந்தாலும் தற்போதுள்ள பொருளாதாரக் க ஷ்டமான சூழலில் அவர்கள் என்னிடமே பணத்தை எதிர்பார்க்கின்றார்கள்..! அவர்களுக்கு எமது நிறுவன முகாமைத்துவக்கட்டமைப்பு புரியவில்லை. என்வீட்டில் வேலைசெய்த ஊழியர்கள் போல் செயற்படுகின்றார்கள். சின்னத்தொகைப் பணத்தை அன்பாகக் கொடுத்தால் கூட அதனைத் தவறாக சித்தரிக்கும் சூழல் இங்கும் இருக்கின்றது.  இருந்தாலும் எனது மனம் அவர்களை நினைத்து கவலைப்படுகின்றது. நாட்டுக் குழப்பத்திற்கும், கொரோனா பாதிப்பிற்கும், க ஷ்ட காலத்திற்கும் நான் காரணமானதாக அவர்களை எண்ண வைத்த இயற்கைமேல் எனக்குக் கோபமே வருகின்றது. காலம் செய்த கோலம் என்று இவற்றை எடுத்துக்கொள்ள வேண்டியது தான். நாம் நம்புகின்றேன்  இவை எல்லாம் ஒரு நாள் மாறும்..!




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!