நலன்புரிச்சங்கப் பிரியாவிடை
ஒருவித வழமையில் இருக்கும் ஒரு சமூகத்தை இன்னொரு வழிக்கு மாற்றுவது என்பது மிகக்கடினமான காரியம். எமது யாழ் சமூகம் எவ்வளவு கல்வித்தரம் இருந்தாலும் போட்டியும் பொறாமையும் அவற்றுடன் கூட வருவது என்பது மிகவும் துயரமான விடயம்..!
எமது சமூதாயத்தைப்போன்றே எமது நிறுவனங்களிலுள்ள சமூக மாதிரிகளின் எண்ணமும் செயற்பாடும் இருக்கின்றது என்பது நிதர்சனம். தவறுகள் விடுவது மனித இயல்பு தான். வேண்டும் என்று திரும்பத் திரும்ப ஒருவர் விடுகின்றார் என்றால் அவர் இன்னமும் கற்கத்தொடங்கவில்லை என்று அர்த்தம். உண்மையில் கற்றல் இருப்பின் விடும் தவறுகள் நிச்சயம் குறையும். பூரணமனிதனாகும் வாய்ப்பு கூடும். நான் இந்த மாதிரித் தான் என்னைச் செதுக்கினேன். இருந்தாலும் இன்னும் நிறையச் செதுக்க இடமுண்டு என்பதையும் அறிவேன். அதற்கான முயற்சியையும் எடுக்கின்றேன்.
பின்னர் சில சம்பவங்கள் நடந்தன. அதனால் பல சிக்கல்கள் நிறுவனத்தில் ஏற்பட்டன. அந்த சமயத்தில், ஒரு சில ஊழியர்கள் எமது நிறுவனத்தை விட்டு இடம் மாற்றம் பெற்றுச் செல்லும்போது, பிரியாவிடை செய்யமுடியாத சூழல் இருந்தது.
அதன்பின்னர் பல நலன்புரிச்சங்கத் தலைவர்கள் வந்தார்கள். பல
நல்ல விடயங்களைச் செய்தார்கள். இருந்தாலும் குறைகள் இருந்தன.
அதில் குறிப்பாக, பல ஊழியர்கள் எமது நிறுவனத்தை விட்டு இடமாற்றம் பெற்று அல்லது வேறுதொழிலுக்கு அல்லது ஓய்வுபெற்று செல்லும் அனைத்து
ஊழியர்களுக்குமான பிரியாவிடைகளை முறையாக நடைமுறைப்படுத்த முடியாது போனதிற்கு நான் முதலே
சொன்ன சமூக மனப்பாங்கு தான் காரணம்.
ஒருவர் செய்வதை, குறை காண்பதும், அதற்கு வலுச்சேர்க்க ஒரு
கூட்டத்தைச் சேர்ப்பதும், எல்லோருமாகச் சேர்ந்து அதனை நிராகரிப்பது அல்லது வேண்டாவெறுப்பாக
கலந்து கொள்ளுவதும் என்ற நிலையில் இருப்பதையே பெரும்பாலானோர் செய்தார்கள்.
தப்பித்தவறி ஒன்று இரண்டுபேர் இருந்தாலும் அவர்கள் மனத்தையும் மாற்றி ஏதோவோர் பக்கத்திற்கு இழுத்து, ஒற்றுமைக்கு எப்போதும் ஆப்படிப்பதிலேயே கவனமாக இருந்தார்கள். இந்தக்குணம் தான் தமிழர்கள் எவ்வளவு திறமையிருந்தும், முயற்சி இருந்தும் எமக்கான உலக அங்கீகாரம் இன்னும் எதிர்பார்த்த அளவு கிடைக்காமைக்கு காரணம்..!
இந்த இயல்பு மாறுமாயின் தமிழர்களை அசைக்க முடியாது.
திறமை, முயற்சி மற்றும் நற்பண்பு இவை தான் உலகம் எதிர்ப்பார்க்கும் முக்கிய இயல்புகளாகும்.
நானும் இதனை நிலைநாட்ட என்னால் இயன்றவரை முயன்றேன். ஆனால் பலன் இல்லை. என்ன செய்வது..? அடுத்த வருடம் பொறுப்பு கைமாறியது. நானும் யார் வந்தாலும் சொல்லிப் பார்த்தேன். நடக்கவில்லை. இயற்கை இவை எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு இருந்தது..!
கொரோனாவையும், கொடூர பொருளாதாரக் கஷ்டத்தையும் தந்தது. நான் நினைத்தேன். இப்போது மனங்களில் மாற்றம் வந்திருக்கும் என்று..! என்ன ஆச்சரியம் அது பெரிய அளவில் மாற்றம் அற்றே இருந்தது. எனக்கும் ஏமாற்றம் ஆகிவிட்டது.
எனது எண்ணங்களை எனக்கு யார் மேலும் திணிக்க விரும்பவில்லை.
ஆகவே எமது ஊழியர்களின் அனுமதியோடு தான் அந்த எண்ணங்களை நிறைவேற்ற முயன்றேன்.
அந்தவகையில் பிரியாவிடை
செய்யாமல் விடுபட்ட அனைத்து ஊழியர்களையும் அழைத்து, இன்றைய தினம் (23-01-2023) அவர்களுக்கான பிரியாவிடையைச்
செய்து முடித்தோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக