காந்தாரா..!

 

இது ஒரு கன்னட படம்.  ஒரு காட்டில் வாழும் மக்களையும், அவர்களை ஆளும் மக்களையும் வைத்துப்பின்னப்பட்ட உண்மைக்கதையைத் தழுவிய படம். பார்க்கும் போது, உண்மையைப் பார்ப்பது போன்ற ஒரு அனுபவத்தைப் படம் தந்தது..!  

தமிழில்  மாரி செல்வராஜின் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெற்றிபெற்ற கர்ணன் படம் தந்த பாதிப்பைப்போல் இப்படமும் மனித உணர்வைத் தட்டியெழுப்பி, ஏமாற்றப்படும் இனத்திற்கு ஆதரவாக பார்வையாளர்களையும், களம் இறங்க வைக்கின்றது. அதற்கு உதவும்  நாடக இறைவனாக கதாநாயகன் மாறும் இடம் மிக ஆக்ரோசமாக இருக்கின்றது.  

இந்தக்கதை,  கர்னாடகா காட்டுப்பிரதேசத்தில், வாழும்  ஒரு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு,  நிம்மதியற்று அலைந்த அந்த ஊர் மன்னரால் கடவுள் பெயரில் வழங்கப்பட்ட நிலம் தொடர்பானது.

மன்னரின் வாரிசுகள் பிற்காலத்தில் அக்கொடையை ஒத்துக்கொள்ளவில்லை. அதனால், நயவஞ்சகமாக மீண்டும் அந்த நிலத்தை அபகரிக்க முயல, அதற்கு அரச வனத்துறையைப் பயன்படுத்தி, அம்மக்களுக்கும், வனத்துறைக்கும் இடையில் பிரச்சனைகள் வரத்தூண்ட, இறுதியில், யாரால்  இவையாவும் நிகழ்கின்றன என்பதைப் புரிந்த கதாநாயகன் இறைவனின் வேடத்தில், உருக்கொண்டு ஆடும் மரண ஆட்டம் தான் இந்தக்காந்தாரா..! 

இறுதியில் வேசம் போட்ட அவன் காட்டுக்குள் காணாமல் போவது ஆச்சரியம்..! படம் தொடங்கும் போது இருந்த ஆச்சரியம் இறுதியில் முடியும் போதும் இருந்தது..! 

யதார்த்த சூழலில் இறையருளால் மண்மீட்க, மேற்கொள்ளும் பழிவாங்கும் படலமே காந்தாரம் என்றும் கதையைச் சுருக்கிச் சொல்லலாம். ரிசாப்செட்டியின் (Rishab Shetty) கதை, நடிப்பு, இயக்கம் சிறப்பு என்பதற்கு சான்று இந்தப்படத்தின் இமாலய வெற்றி..!  

அத்துடன் ஒளிப்பதிவு, இசை  என அனைத்தும் தரம்..! கே.ஜி.எப் படத்திற்குப் பின்னர் வந்த ஒரு கன்னடப்படம் முழு இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்தது என்றால் ஆச்சரியம் தான். 




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!