வெறுப்பேத்தும் சூழல்..!
எனது காலம் இப்போது கஷ்ட காலம் போலும்..! எதனைத் தொட்டாலும் அந்தவிடயம் முடிவதாக இல்லை. மேலும்
பெருப்பதாகவே எனக்குப் படுகின்றது. குளியல்
அறையைக் கழுவ முனைய, அடியோடு தண்ணீர் வரும் குழாய் உடைந்தது. திருத்த முனைய, அது மேலும்
மேலும் சிக்கலாகி பயத்தையே கொடுக்கின்றது. தற்போதைய பொருளாதாரச் சூழல் அதிக செலவீனங்களுக்கு
இடம்கொடாது.
ஆகவே திருத்த மனமின்றி, அப்படியே விட்டுவிட்டேன். எனது பழைய வீட்டிலும் வேலைக்கு வந்த பெண், பைப்
ஒன்றை உடைத்துவிட்டார். அதைத் திருத்த முனைய மேலும் தண்ணீர் குழாயில் வெடிப்பு ஏற்பட்டு
பெரிய பிரச்சனையாகிவிட்டது.
பிளம்பர்களுக்கு போனை அடித்தாலும் அதனை எடுக்கின்றார்கள் இல்லை. வேலையால் வரும்போது, மூத்த மகளையும் ரியூசன் சென்ரரில் இருந்து கூட்டிவந்தேன். வரும்போது, பசியால் ஏதாவது வாங்கலாம் என அவளிடம் சொல்லிக்கொண்டே வந்தேன். ரோல்ஸ் வாங்க நினைத்து, அது தவற, சோளன் வாங்க நினைத்தேன். அதுவும் முடியாமல் போக, வீட்டிற்கு கிட்டவாகவுள்ள மரக்கறிக் கடையில் இறுதியில் மரவள்ளிக்கிழங்கு ரூபா.300 இற்கு வாங்கினேன்.
மனைவியிடம் அவற்றை அவிக்கச் சொன்னேன். அவர் அவற்றின் தோலை உரிக்கும் போது நீலம் பாரித்து இருந்தது..! ஒவ்வொன்றாக உரிக்கும் போது எல்லாமே நீலமாக இருந்தது. கடும் கோபத்துடன், கடைக்குச் சென்று திருப்பிக்கொடுத்துவிட்டு, அந்தக்காசுக்கு வேறுசில கள்ளத்தீன்கள் வாங்கினேன். இருந்தாலும் மகளுக்கு மரவள்ளி கிழங்கு மற்றும் உறைப்புச் சம்பல் தேவையாக இருந்தது. ஆனால் முடியவில்லை. இன்றும் அதே நிலையில் தண்ணீர் குழாயைத் திருத்தினேன். அதற்கு பொருட்கள் வாங்கிய செலவே ரூபா.1350.00. ஒருவாறு தண்ணீர் ஒழுகுவதைக் குறைத்தாகிவிட்டது. அதுவரை பிளம்பர் ஒருவரும் பதில் சொல்லவில்லை.
அதனைத்தொடர்ந்து,
வீட்டிலுள்ள மரவள்ளிகளை இழுப்போம் என முடிவெடுத்து, இழுத்தேன். எல்லா மரவள்ளிகளும்
கிழங்குகள் அற்று, அடிப்பகுதி கறையானால் அரிக்கப்பட்டு இருந்தது. முழுமரவள்ளியையும்
பிடுங்கி, அந்தவிடத்தைச் சுத்தப்படுத்திவிட்டு இதனை எழுதுகின்றேன். மரவள்ளி சாப்பிடக்கூடாது
என்று இயற்கையே சதி செய்ததுபோல் சூழல் இருக்கின்றது. என்ன செய்ய..? மகளுக்கும் ஏமாற்றம்
தான்..? பார்ப்போம் நாளைக்கு சந்தையில் வாங்குவோம். பஞ்சம் வரும் என்று மரவள்ளிகளை
நட, அனைத்தையும் கறையான் காலியாக்கியது, ஆச்சரியமாக
இருக்கின்றது..! கறையானே பஞ்சத்தில் இருக்கின்றதா..?
கருத்துகள்
கருத்துரையிடுக