மாணவ மனங்கள்..!

 

தற்கால மாணவர்களின் மனங்களில், நற்பண்புகளைத் தாண்டி, யாருக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை தான் நினைத்ததைச் சாதிக்க வேண்டும் என்ற ஒரு நோக்கமே பெரிதாக இருப்பதாக எண்ணத் தோன்றுகின்றது.

 

ஒரு கற்கைநெறிக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், போட்டி அடிப்படையில், விரும்பிய கற்கைநெறி கிடைத்ததும், மகிழ்ச்சி அடைகின்றார்கள். அதைவிட இன்னும் சிறப்பான ஒரு வாய்ப்பு வரும்போது, கிடைத்ததைவிடுத்து, அடுத்த வாய்ப்புக்குப் போகத்தவிக்கின்றார்கள்..!

ஒரு முறைகூடச் சிந்திப்பதில்லை தம்முடைய இவ்வாறான செயற்பாட்டால் சமவயதை ஒத்த எவ்வளவோ அப்பாவி ஏழைமாணவர்கள் பாதிப்படைகின்றார்கள் என்பதை..! தமக்கு பிடித்து இருந்தால், அதுவும் இருப்பதைவிட சிறப்பானதாக எந்தவிதமான  இலவச வாய்ப்புக்களையும், மேலே சொன்னமாதிரியான  மாணவர்கள் வைக்கோல் பட்டறை நாய்கள்  மாதிரி எண்ணம் கொண்டு, அதை அடையவே செயற்படுகின்றார்கள். ஒன்று கிடைத்தால், அதில் கொஞ்சக்காலமாவது நிறைவுடன் இருக்க வேண்டும். அப்படி இருக்க முடியவில்லை என்றால் என்ன என்று சொல்வது..?

பல மாணவர்களுக்கு தங்களின் நடவடிக்கைகளால் மற்றவர்களும் பாதிக்கப்படுகின்றார்கள் என்பதை உணரக்கூட முடியவில்லை என்பது ஒரு வேதனைக்குரிய விடயமாகும்.



எமது நிறுவனத்தைச் சேர்ந்த பல மாணவர்கள், School Leaving Certificates கேட்டு வந்தார்கள். 2020 இற்குப்பிறகு  எமது நிறுவன நடைமுறைகள் மாறிவிட்டது. கற்கைநெறியை விடுவது என்றால் அதற்குத் தண்டப்பணம் கட்டவேண்டும். அதனைக் கட்டிவிட்டு அவர்கள் எங்குவேண்டும் என்றாலும் செல்லலாம். ஆனால் தண்டப்பணம் கட்டாமல், அவற்றை எடுக்க முடியாது. அது உண்மையில் ஒரு குற்றம். ஒரு பிழை நடப்பதற்கு, நாமும் உடந்தையாக இருந்ததாக மாறிவிடும்.

அதேவேளை பல மாணவர்களுக்கு எமது நிறுவனத்திலும், எமது கற்கைநெறிகளிலும் நம்பிக்கையற்று விடும். ஒரு பிழை, பல பிழைகளை ஏற்படுத்தி, இறுதியில் எமது நிறுவனத்தை வைத்திருப்பதே அரசிற்கு சுமையாக மாற்றிவிடும்.  நாமும் வேலையை விட்டுவிட்டுச் செல்லவேண்டியது தான்.

எமது கற்கை நெறிகள் குறித்த ஒரு வேலை செய்வதற்கு என்று உருவாக்கப்படவில்லை. பல வேலைகள் செய்யக்கூடிய வகையில் பொதுவானதாக (General Purpose) உருவாக்கப்பட்டுள்ளது.  எமது கற்கைநெறிகளை கற்பதால் யாருக்கும் எந்தக் கெடுதலும் ஏற்பட்டுவிடாது. மாறாக அரச வேலை கிடைக்கவில்லை என்றாலும், சுயதொழிலில் ஈடுபடும் எண்ணத்தை வழங்கும். அதற்குத் தேவையான திறன்களும் கிடைக்கும்.

தவறு என்றே தெரியாமல் பெற்றோர்கள், பாதுகாவலர்கள், நலன்விரும்பிகள் கூட மாணவர்களைக் கூட்டிக்கொண்டு, நியாயம் கேட்க வருகின்றார்கள். ஒரு பதிவைச் (Registration) செய்துவிட்டு, அதனை ரத்துச்செய்யாமல் (Cancellation), எம்மை தவறுகள் (Wrong doing / Illegal activities) செய்யத்தூண்டுகின்றார்கள்..!

பாவம் பார்த்தால், பிழை எமது தலையிலே வந்துவிழும்.  நான் அடிக்கடி எடுக்கும் உதாரணம் திருமணப்பதிவு. பதிவு செய்தால் செய்தது தான். பதிவு செய்துவிட்டு, ஏதாவது தொடர்புகளை ஏற்படுத்தினால், அது தவறான தொடர்பாகிவிடும். பதிவு செய்த நபர் பிடிக்கவில்லை என்றால் பதிவை ரத்துச்செய்துவிட்டு, அடுத்த விரும்பிய நபரைப் பதிவுதிருமணம் செய்யலாம். இதனைத் தான் சட்டம் அனுமதிக்கும். இங்கு திருமணப்பதிவு என்றால் என்ன..? ஒரு கற்கைநெறிக்கான பதிவு என்றால்  என்ன..? விதிமுறைகள் ஏறக்குறைய ஒன்றுதான்.  வேண்டுமென்றால் இணைந்து செயற்படுவதற்கான கால அளவு வேறுபடுகின்றது எனலாம். 

சட்டங்களின் நோக்கமே அனைவரையும் பாதுகாப்பதே. விதிகளை மீறாமல் இருந்தால் நிச்சயம் பலருக்கு நன்மை கிடைக்கும்.  அனைவரும் நிம்மதியாக வாழலாம்.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!