பிச்சைக்காரன் 2

 



 

இன்று காலை இசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் அன்ரனியின் மகள் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துள்ளார் என்ற செய்தி மனதை என்னவோ செய்தது..!  பருவ வயது பெண் மாள்வது பெற்றோருக்கு எவ்வளவு துன்பகரமானது என்பதை யோசிக்க எனக்கும் கஷ்டமாக இருந்தது. இருந்தாலும் நாளை நமக்கு என்ன நடக்கும் என்று யாருக்கும் ஒன்று தெரியாது..? இது தான் வாழ்க்கை..! இப்படித்தான் உலகமே இருக்கின்றது.

சில வாரங்களுக்கு முன்னர் விஜய் அன்ரனி நடித்து, இயக்கித்   தயாரித்த பிச்சைக்காரன் 2 என்ற படத்தின் டிவிடியை வாங்கி வைத்திருந்தேன். இன்று தான் இந்தசெய்தியைக் கேட்டவுடன் படத்தைப் பார்க்க மனம் எண்ணியது..!

அவ்வாறே படத்தைப் பார்த்தேன். முதல் கால்வாசிப்படமும் மிகவும் போராக இருந்தது..!  அதன் பின்னர், மூளைமாற்றச் சிகிச்சை என்ற நவீன மருத்துவப் பாய்ச்சலை வைத்துக் கதை செய்து, கதையின் திசையை மாற்றி, அதற்குள் பாசம், சோகம், வீரம் என்பவற்றை வைத்து, போரடிக்காமல் படத்தைப் பார்க்கலாம் என்ற எண்ணத்தை மிகுதியான, முக்கால் பகுதி கொண்டுவந்தது..! அதுமாத்திரமன்றி கதை, இன்னொரு தட்டில் பயணித்து, ஏழைகளின் உருவாக்கமே பணக்காரர்களால் தான் என்பதை உணர்த்தும் வகையில் சென்று “அன்ரி பிகிலி..!” என்ற ஒரு புதுச்சொல்லுக்கு அர்த்தம் சொல்லி, பூமியில் சுரண்டுபவர்களை “பிகிலி” என்றும் அதை எதிர்ப்பதே “அன்ரி பிகிலி” என்றும் ஒரு கதையளந்து, அதைச் சிறப்பாக மேடையேற்றி, இறுதிவரை படத்தைப் பார்க்க வைத்த விஜய் அன்ரனியின் இயக்கம் பாராட்டுக்குரியதே..!

கதை சென்ற வேகத்தில், இறுதியில் முதலமைச்சரையே ஊதித்தள்ளி, விஜய் அன்ரனி முதலமைச்சராக வந்திருக்க வேண்டும்..! ஆனால் ஏதோ ஒரு காரணத்திற்காக அவ்வாறு முடிக்கவில்லை. சிலவேளை பிச்சைக்காரன் 3 இல் முதலமைச்சராகவோ அல்லது பிரமராகவோ வருவதற்கு வாய்ப்பு உண்டு.

நம்ப முடியாத கதை, காட்சியமைப்புக்கள் என்றாலும், பணக்காரர்கள் நினைத்தால் நாட்டில் ஏழைகள் இருக்க மாட்டார்கள். ஆனால் பணக்காரர் என்ற ஒரு மமதையைப் பேண என்றும் ஏழைகளை ஒழிக்க மாட்டார்கள். அவ்வாறு ஒழிந்தால், பிறகு உலகே அழிந்ததற்குச் சமம்..!

விஜய் அன்ரனி இரு வேடங்களில் நடித்து, இசையமைத்து, தயாரித்து இயக்கிய இந்த வெற்றிப்படத்தால் சமூக மாற்ற விழிப்புணர்ச்சி ஒன்று ஏற்பட்டிருப்பது உண்மை.



நாயகியாக நடித்த காவ்யா தபர் மற்றும் பலரின் நடிப்பும், கதைக்கு ஏற்ப தரமாக இருந்தது. ஏனைய தொழில்நுட்பங்களும் சிறப்பாக இருந்தன.  உணர்வு பூர்வமான கதை என்பதால் லொஜிக் இல்லை என்றாலும் பார்க்க, ரசிக்க முடிந்தது.

 


ஆ.கெ.கோகிலன்

19-09-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!