இடமாற்றம்..!
ஆரம்ப காலத்தில் நிரந்தரப் பணிப்பாளர் என்ற பதவியை எதிர்த்த நான், இறுதியில் நிரந்தரப் பணிப்பாளராக வந்துவிட்டேன்..!
விரும்பி நடந்ததோ அல்லது விதியின் வசத்தால் நடந்ததோ நாமறியோம்.
ஆனால் நடந்துவிட்டது..!
தொடர் தோல்விகளும், கஷ்டங்களும் பல காலம் என்னைச் சூழ்ந்ததால்,
வந்த ஞானம், வாழ்க்கையில் எது நடந்தாலும் ஏற்கும் பக்குவம் எனக்கு எப்பவோ வந்துவிட்டது..!
எனது மரணத்தைக் கூட என்னால் ஏற்க முடியும். எனக்கு ஏதாவது கடமை இருந்தால் தான், இந்தப்பூமியில்
இருக்க வேண்டிய நிலைவரும். அப்படியான கடமைகள் இல்லையாயின் இங்கு இருக்கவேண்டிய அவசியம்
கிடையாது..! இந்தமனநிலைக்கு வந்து நீண்டகாலமாகிவிட்டது..!
இன்று காலை வழமைபோல், அலுவலக மின்னஞ்சல் பெட்டியைப் பார்த்தேன்.
அதில் ஒரு அஞ்சல்
என்னைக் கவலைகொள்ள வைத்தது..! ஒவ்வொரு நாளும் எனது மனதில் ஒரு உறுத்தல் ஏற்படுகின்றது..!
அது, நான் திருகோணமலையில் இருந்து இடமாற்றம் பெற்றது யாரையும் தண்டிக்கும் நோக்கத்துடன்
கூடியது அல்ல. அங்கு தொடர்ந்து இருந்தால் எனது குணத்திற்கும், கோபத்திற்கும் ஏதாவது
அசம்பாவிதங்கள் ஏற்பட்டுவிடும் என்ற முன்னெச்சரிக்கை தான்..! ஆனால் ஆச்சரியமாக பல மாறுதல்கள்
இலங்கையில் அப்போது ஏற்பட்டன. உள்நாட்டு யுத்தம்
முடிவுக்கு வந்தது..! சொந்த இடத்திற்கு திரும்பும் ஆசை வந்தது..! செலவைக் கட்டுப்படுத்தவும்,
தண்ணீர் பிரச்சனையில் இருந்து நிரந்தரமாக மீளவும், இங்கு வரவேண்டிவந்துவிட்டது.
ஆனால் யாருமே எதிர்பாராமல் யாழ்ப்பாணத்தில் இருந்து பலிகடாவாக
மாறியது, எனது சேவையை ஒத்த ஒருவர் தான்..! இருவருக்கும் எனக்கும் நியமனம் ஒரே வருடத்தில் தான் நடந்தது..!
நான் இங்கு வர, இவர் அங்கு சென்றார். சில மாதங்களில், பதில்
பணிப்பாளராக நியமனம் பெற்றார். அது நிரந்தரப் பதவி அல்ல. சிலவருடங்கள் கழித்து, அந்த நிறுவனத்திற்கு நிரந்தரப்
பணிப்பாளர் பதவிக்கு அழைப்பு விடுக்க, நானும்
விண்ணப்பித்து, நேர்முகத்தேர்வும் செய்தேன். அங்கு பணிப்பாளராகப் போகத்தேவையான புள்ளிகளும்
பெற்று, நியமனம் நடைபெற முன்னர், அங்குள்ள பதில் பணிப்பாளர் கேட்டதற்கு இணங்க, நியமனம்
நிறுத்தப்பட்டது..! அதற்கு பல கதைகளும் சொல்லப்பட்டன..! ஆனால், உண்மை எனக்கு அப்பவே
தெரிந்துவிட்டது.
சில வருடங்கள் கழிய மீண்டும் யாழ், திருகோணமலை இரண்டிற்கும்
நிரந்தரப் பணிப்பாளர் கோரப்பட்டது. இம்முறையும் நான் திருகோணமலை செல்லத் தயாராகவே இருந்தேன்.
என்னைவிட அனுபவம் கூடியவர் இங்கு பணிப்பாளராக வரக்கூடிய வாய்ப்பு இருந்தது. அதுவும்
ஏதோ காரணங்களால், தடைப்பட்டு, நான் யாழ்ப்பாண நிறுவனத்திற்கு பணிப்பாளர் தரம் இரண்டில்
நியமிக்கப்பட்டேன்..! அதேவேளை திருகோணமலை நியமனம் மீண்டும் நிறுத்தப்பட்டது..! தொடர்ந்தும் பதில் பணிப்பாளரே இருந்தார்..! நாம் ஒன்றும்
செய்யவில்லை. பதில் பணிப்பாளர் நியமனம் நாட்டிற்கு நல்லது. அரசிற்கும் செலவு குறைவு. இருந்தாலும் நிரந்தரப்பணிப்பாளர் ஒருவரை சேவை மூப்பின்
அடிப்படையில் நியமிக்க, தலைமையகம் தவறியது மட்டும் உண்மைதான். இதனால், என்னைவிட, இங்கு
இருக்கும் ஒருவர் அதிகம் பாதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, அவருக்கும் இங்கு இருக்கவே பிடிக்கவில்லை. எங்காவது பல்கலைக்கழகத்திற்குச்
செல்ல கடுமையாக முயற்சித்தார். இன்றுவரை முயன்றுகொண்டு தான் இருக்கின்றார்..!
பணிப்பாளர் தரம் 2 இலிருந்து பணிப்பாளர் தரம் 1 இற்கு முன்னேறி,
ஏறக்குறைய தேவையான ஆறுவருடங்களையும் நிறைவு
செய்யும் காலம் எனக்கு நெருங்கிவிட்டது. தொடர்ந்து ஒரு நிறுவனத்தில் ஆறுவருடங்களுக்கு மேல்
இருப்பது நிறுவனத்திற்கும், அங்குள்ள ஊழியர்களுக்கும், எனக்கும் நல்லது அல்ல. அது தான்
இப்பதவிக்கான விதியாகவும் இருக்கின்றது.
அதனால் தற்போது, தலைமையகம் தரும் இடமாற்றத்தை ஏற்க நான் தயாராகவே
இருக்கின்றேன். இந்தத்தருணம் தப்பினால், 55வயதைத் தாண்டிவிடுவேன். பின்னர் இடமாற்றம்
செய்வது சட்டப்படி தவறாகும்.
அதேவேளை பதில் பணிப்பாளராகத் தொடர்ந்து இருந்து, தற்போது
பணிப்பாளராகவும் சில காலம் கடமையாற்றி, தற்போது தனது இறுதிக்காலத்தில் ஊரோடும், உறவோடும்
இருக்க ஆசைப்படும் அவரது கோரிக்கையும் நியாயமானதே..!
ஆனால், இதன் முடிவு தலைமையகத்திடமே இருக்கின்றது. என்ன முடிவு
வந்தாலும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்துடனேயே நான் இருக்கின்றேன்.
உண்மையைச் சொல்வது என்றால், கொரோனா வந்தபின்னர், உருப்படியாக
ஒன்றையும் செய்யமுடியாத சூழல்தொடர்வதை என்னால் ஏற்க இயலாமல் உள்ளது. எல்லார் மேலும்
வெறுப்பும், கோபமும் வருகின்றது..! பிள்ளைகளைப்
பார்க்கும் போது கவலையாக உள்ளது. அவர்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டிய வசதிவாய்ப்புக்களை வழங்கமுடியாது இருக்கின்றது. சரியான அடித்தளங்கள்
இல்லாமல், அகலக்கால் வைத்ததால், ஏற்படும் நெருக்கடிகள் வேதனையை வழங்குகின்றன..! நான் வந்த ஆறு வருடத்தில், ஆறுக்கு மேற்பட்ட பணிப்பாளர்
நாயகங்கள் வந்து சென்றுவிட்டார்கள்..! தலைமையகம் இருந்ததைவிட மோசமாகப் பின்தங்கிச்
செல்கின்றது. பொருளாதாரச் சூழல் பல ஊழியர்களை சோர்வடையச் செய்துள்ளது. சிலர் நாட்டைவிட்டே
ஓடிவிட்டார்கள்.
எல்லாவற்றையும் தாங்கித் தாண்டிச் செல்ல எனக்கு தைரியம் இருக்கின்றது.
ஆனால், எல்லோருக்கும் அப்படி இருப்பதாகத் தெரியவில்லை.
தாய்மார்கள் சொல்வது போல் காலபலன்களும், இவற்றிற்கு காரணமாகலாம். சரி அந்த வகையிலும் முயற்சி செய்து பார்ப்போம்.
நிறுவனத்திற்கு நல்லது நடந்தால் சந்தோசம். அது யாரால் வந்தாலும் சந்தோசம். ஆனால் அது
நிச்சயம் நடக்க வேண்டும். அதற்கு சிலவேளை இடமாற்றமும் ஒரு தேவையாக அமையலாம்..! அமையட்டும். நாமும் அதனை வரவேற்போம்.
ஆ.கெ.கோகிலன்
26-09-2023
கருத்துகள்
கருத்துரையிடுக