குடும்பம் ஒரு கோவில்..!

 


 




ஒவ்வொரு குடும்பத்திற்குள்ளும் எவ்வளவோ பிரச்சனைகள் இருந்தும், அந்தக்குடும்பத்தை கலையாமல் காப்பது என்றால் தந்தை அல்லது தாயே காரணமாக இருக்க முடியும். சில இடங்களில் விதிவிலக்கான சூழல் அமையும். தந்தையும், தாயும் அவ்வாறான நிலையில் இல்லை என்றால், பிள்ளைகள் தான் அதனைச் செய்ய வேண்டும். எனக்கும் அவ்வாறான சூழலே வாய்த்திருக்கின்றது. தந்தை உயிருடனே இல்லை. தாயார் இருந்தாலும், முதுமை மற்றும் வைராக்கியம் போன்ற காரணங்களால், அவரைக் குறையும் சொல்ல முடியாது. மாறாக நிறையும் சொல்ல முடியாது..! இந்த நிலையில் வரும் சிக்கலைச் சமாளிப்பதே பெரும் மனவலியாக அமைகின்றது. அலுவலகத்திலும் பல சிக்கல்கள், அவிழ்படாமல் தொடர்ந்து, நிலைமாறாமல் இருக்கின்றன..! இவற்றிற்கு நடுவே எனது குடும்பத்தினரின் கோரிக்கைக்கும் முகம்கொடுக்க வேண்டியது  எனது தவிர்க்க முடியாத கடமை. எனது குடும்பத்தினர், எனது இயல்பை ஓரளவிற்காவது அறிந்திருப்பார்கள் என்று நம்புகின்றேன். இல்லை என்றால் என்ன செய்ய முடியும்..? திரும்பத் திரும்பச் சொல்லித் தெளிய வைக்கலாம். புரியவே தயாரில்லை என்றால் ஒன்றுமே பண்ணமுடியாது. நடப்பதை ஏற்றுக்கொண்டு செல்வதே இலகு.

 இன்று, உறவினரின் மரணவீடு  என்பதால் லீவு எடுத்து சமூகக்கடமையைச் செய்தேன். சிறு உரையையும், கேட்டதற்காக ஆற்றி, வேறுசிலரின் உரைகளையும் தொகுத்து, அமரரின் ஆத்மா சாந்திக்கு வேண்டினேன்.  மனைவியும், இரண்டாவது மகளும் சேர்ந்து கலந்துகொண்ட நிகழ்வு முடிய மதியம் தாண்டியது. பின்னர் குளித்து, உணவுண்டு உறங்கி எழ மாலையாகியது.  வழமைபோல் மாலை பூக்கன்றுகள், மற்றும் செடி கொடிகளுக்கு தண்ணீர் அடித்துவிட்டு, இன்று விசேடமாக மகளைக்கூட்டிக்கொண்டு, கடைக்குச் சென்றேன். அவளின் உடலில் பல தளும்புகள், ஆடைகளால் ஏற்படுவதாக உணர்ந்து, அதனைத் தவிர்க்க, மாற்று வழியில் துணிகாயவைக்கும் தாங்கி ஒன்றையும், துணிகளைத் தாங்கும் தாங்கி ஒன்றையும் வாங்க கடைக்குப்போக, அம்மாவீட்டில் தம்பி மகன் படிக்க மேசை கேட்டது ஞாபகத்திற்கு வந்தது. பொருளாதாரக் கஷ்டம் பலரையும் வாட்ட, அதற்குள் மாட்டிய தம்பியைக் காப்பது அண்ணணின் கடமைகளில் ஒன்று தானே..! அந்த வகையில் அவருக்கும் ஒரு மேசை மற்றும் கதிரையை வாங்கிக் கொடுத்துவிட்டு வீடு வரும்போது, மேலும் சில பொருட்களுடன், மகள் கேட்ட தள்ளுவண்டிச் சுண்டலையும், வடையையும் வாங்கி, குடும்ப உறுப்பினர் அனைவரையும் திருப்திப்படுத்தியது மனதிற்கு நிறைவாக அமைந்தது.

மனத்தை நிறைவாக வைக்க, மற்றவர்களுக்குச் செய்யும் உதவிகளே உதவுகின்றன..! நிறைவான மனம், நோய்களைத் தாங்கும் சக்தியை வழங்குகின்றது. அதனால் வைத்தியச் செலவுகளும் குறைகின்றன..! நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்..! தேவைக்கு உதவுவதே வாழ்வின் நோக்கம்..!

 

ஆ.கெ.கோகிலன்

12-09-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!