அந்தியேட்டிச் சாப்பாடு..!

 



இன்று எனது நிறுவன ஊழியர் ஒருவருடைய உறவினர் இறந்ததை முன்னிட்டு, அந்தியேட்டிக்கு அழைப்பிதழ் தந்தமையால், அதற்கு செல்வதற்கான ஏற்பாடுகளை முற்கூட்டியே செய்திருந்தேன்.  அதன்படி எமது நிறுவனத்தைச் சேர்ந்த சில ஆண்கள் போகத்தயாராக இருந்தோம்.  ஆனால்  சில பெண் ஊழியர்கள், கோரிக்கையாக ஏன் பெண்களான எங்களை கூட்டிச்செல்ல கேட்கவில்லை என்றார்கள்..! நான், “முற்கூட்டியே ஒழுங்கு செய்தபடியால் என்னால் ஏற்பாட்டை மாற்ற முடியாது” என்றேன். இப்படியான சந்தர்ப்பங்களில் முற்கூட்டியே கேட்டால் நிச்சயம் பெண்களுக்கும் இடம் கொடுக்கலாம் என்று சொல்லி, இம்முறை என்னால் மாற்றம் செய்யமுடியாது என்று சொல்லியதுடன், நான், யார் யாரை கூட்டிச்செல்ல  இருந்தேனோ அவர்கள் பற்றியும், ஏன் அவர்களைக் கூட்டிச்செல்கின்றேன் என்பது பற்றியும் சொன்னேன். அவர்களும் அதனை ஏற்றுக்கொண்டு, தமது கஷ்டத்தைக்காட்டி உதவியாக அந்த ஊழியர்களிடம் கேட்க, அவர்களே விட்டுக்கொடுத்து, குறித்த பெண் ஊழியர்கள், என்னுடன் வர உதவினார்கள். பின்னர் விட்டுக்கொடுத்த ஆண்கள், தமது மோட்டார் வண்டியில் வந்து அந்நிகழ்வில் கலந்துகொண்டார்கள்.

நானும் திட்டமிட்ட வகையில் எமது ஆண், பெண் ஊழியர்களுடன் சரியான நேரத்திற்கு சென்றிருந்தோம். ஆனால் சடங்குகள் சிறிது தாமதமாகியதால் சில மணிகள் காக்கவேண்டி வந்துவிட்டது. இருந்தாலும், மதியச்சாப்பாடு எமது பாரம்பரியச் சாப்பாட்டை ஒத்து இருந்ததால் நிறைவாகச் சாப்பிட்டு, பாயாசமும் அருந்தி, எமது ஊழியர்,  தந்த மரக்கன்றுடன் அலுவலகம் திரும்பினோம்.

காரில் வரும்போது,  இப்போதைய பிள்ளைகளின் மனநிலைகளையும், தற்கொலை எண்ணங்களையும், வாழ்க்கையின் நோக்கம், கடமை என்பது தொடர்பாக அலசியபடியே வந்தோம்.

நாளை நாம் இருப்போமா என்பது தெரியாமலே எவ்வளவு சிக்கல்களையும், துன்பங்களையும் மற்றவர்களுக்கு ஏற்படுத்துகின்றோம் என்ற எண்ணம் பலருக்கு வராமல் போவதற்கு, மாயை எவ்வளவு பெரிய வலையை எம்மேல் போட்டுள்ளது..!

மற்றவர்களின் வாழ்வியலைப் பார்த்தே எமது தனித்தன்மையான வாழ்வியலைத் தொலைத்து நிம்மதியின்றித் தவித்து, மற்றவர்களையும் துன்பத்திற்குள் தள்ளிவிடுகின்றோம்.

வியாபாரமாக்கப்பட்ட வாழ்வியல் அணுகுமுறைகளில் மனிதனால் மேற்கொள்ளப்பட்டவைகள் பாரிய ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படாமல் நடைமுறைப்படுத்துவதால் உலகே சோதனைக்கூடமாக மாறிவருவதை எத்தனைபேர் அறிவார்களோ தெரியாது..! எமக்குரிய சந்தோசத்தை, நாம் யாரிடமும் பெறமுடியாது. அது எமக்கு உள்ளேயே இருக்கின்றது. நாம் தான் அதனைக்கண்டுபிடித்து நிறைவாக இருக்கப் பழகவேண்டும்.

எனது மகள் அடிக்கடி கேட்பாள் “ எல்லா அப்பாக்களும் பிள்ளைகளை  வகுப்புக்களுக்கு கூட்டிவருவதை கடமையாகவும் சந்தோசமாகவும் செய்யும்போது, உங்களுக்குச் சங்கடமாக இல்லையா..? உங்களுக்கு எங்கள்  மீது அன்பு இல்லையா..? மற்றவர்கள் போல் வேலையில் இடையில் லீவு எடுத்து வரமுடியாதா..? உங்களுக்கு நான் நன்றாகப் படிக்கத்தேவையில்லையா..? இந்தச் சமூகத்திலுள்ள இருக்கும் கொடூரமான முகங்களை  அறியவில்லையா..?

தமது பயனுள்ள நேரம், விரயமாவதை விரும்புகின்றீர்களா..? இவ்வாறாகப் பல ஆயிரம் கேள்விகளைக் கேட்கின்றாள்..!

நான் சொல்லும் ஒரே பதில், “ உமது வாழ்க்கை, உமது கையில் தான்..!”  அதற்கான அனைத்தையும் நீர் செய்தால் தான் அதில் சிறப்பு இருக்கும். அதற்குள் நான் வந்தால், உமது சிறப்பில் பங்கு எனக்கும் இருக்கும். அப்படியான பங்குபோடலில் எனக்கு விருப்பமில்லை. அதுமாத்திரமன்றி, உம்முடன் கூட வர இயற்கை என்னை எவ்வளவு காலத்திற்கு அனுமதிக்கும்..?

ஆகவே உமது வாழ்க்கையை நீரே திட்டமிட்டு, உம்மால் இயன்ற முயற்சியைப் போட்டு, நிறைவான நிம்மதியான, வாழ்க்கையை இயற்கை வேண்டும், கடமைகளை ஆற்றியபடி வாழ முனைந்தால் போதும். அது தான் எனது சந்தோசம்.

உயர்தரத்தில் சிறந்த பெறுபேறு எடுப்பதாலோ, பல்கலைக்கழகம் போவதாலோ அல்லது நல்ல சம்பளத்துடன் வேலைசெய்வதாலோ அல்லது உலகம் சுற்றிப் பார்த்து, ரசித்து மற்றவர்களையும் போறாமைப்பட வைத்து வாழ்வதாலோ அல்ல..! நீரும், ஊரும், உலகமும் பாதிப்பில்லாமல், இயற்கையுடன் இணைந்த நிறைவான வாழ்க்கை வாழ்வதையே, நான் விரும்புகின்றேன்.

சின்னச்சின்ன விடயங்களுக்கு வேதனைப்படும் மகளுக்கு சொல்வது, எவ்வளவு கஷ்டங்கள் வருகின்றதோ அதனைத் தாங்கித் தாண்டிச் செல்லவேண்டும். இயலுமென்றால் அதனை நமது பலமாக மாற்ற வேண்டும். கஷ்டங்கள் தரும் அனுபவங்களை எந்தப்பல்கலைக்கழகத்திலும் படிக்க முடியாது. ஆனால்  அவை வாழ்க்கைக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும்.

யார் எம்மைப்பற்றி என்ன சொன்னாலும், பதிலளிக்கும்போது மிக அமைதியாகவும், சரியான பதிலை அளிக்கவேண்டும். மாறாகக் கோபப்படுத்தி, வேதனைப்படுத்தினால், அதனை ஒரு காதில் வாங்கி, மற்றக்காதால் கடந்துபோக விடவேண்டும். அதனைத் தடுத்து, மூளைக்கு எடுத்து எதிர்வினைகள் ஆற்றுவது, மற்றவர்கள் சொன்னதை ஏற்றுக்கொண்டதற்கு சமம்..!

 இதற்கு குருவும், சிஷ்யனும் ஒரு கமண்டலத்தைக் காவிச்சென்ற எனது அப்பா சொன்ன கதையை அவளுக்குச் சொன்னேன். குறித்தவோர் பயணத்தின்போது குரு, சிஷ்யனிடம் தனது கமண்டலத்தைக் கொடுத்து, “ அதனைக் கொண்டுவரும்படி” கூறினார். சிஷ்யனும் அவ்வாறே   கொண்டுவந்தார். இடையில் குரு சிஷ்யனிடம் “இது யாருடைய கமண்டலம்..?” என்று சிஷ்யனிடம் அந்த கமண்டலத்தைக் காட்டிக்கேட்டார்.  அதற்கு சிஷ்யன் “உங்களுடையது..” என்றான்.

இவ்வாறு சென்றுகொண்டு இருக்கும்போது குரு “ என்னிடம் பல கமண்டலங்கள் இருக்கின்றன..! இதனை உனக்குத் தருகின்றேன். நீயே வைத்துக்கொள்..!” எனச்சொல்லியவாறு நடையைத் தொடர்ந்தார். சிஷ்யனும் மகிழ்வுடன் அதனை ஏற்றுத் தொடர்ந்து தூக்கி வந்தான்.  மீண்டும் குரு சிரித்துக்கொண்டே  சிஷ்யா  “ இது யாருடைய கமண்டலம்..?“ என்றார்.  எந்தவோர் தயக்கமோ அல்லது சங்கடமோ இன்றி “இது என்னுடையது..!” என்றான்.

தொடர்ந்து நடந்தபடியே குரு “ அதனைத் தா.. நான் கொண்டுவாறேன்..” என்றார். தொடர்ந்து நடந்துகொண்டே குரு மீண்டும் கேட்டார்  “தன்னிடமுள்ள கமண்டலத்தைக் காட்டி இது யாருடையது..?”  தயக்கமின்றி  சிஷ்யன் சொன்னான் “இது என்னுடையது என்று..!”

குரு கொண்டுவந்த கமண்டலம், தற்போதும் குரு கையில் இருந்தாலும் இது குருவினுடையது அல்ல..! சிஷ்யனுடையது..! ஏனென்றால், ஒரு கட்டத்தில் குரு அவனிடம் நீயே வைத்துக்கொள் என்று சொல்ல, அவனும் ஏற்றுக்கொண்டதால், குருவின் கமண்டலம்  சிஷ்யனுடையதாகிவிட்டது..!

யாராவது எம்மைத் தாக்கி ஏதாவது கதைத்தால் பதிலுக்கு நீங்களும் கதைத்தால், அவர் சொன்னதை ஏற்றுக்கொண்டதற்குச் சமம்..! மாறாக பதிலே சொல்லாமல் விட்டால் அவருடைய சொல் அவருக்கே சொந்தம். ஏற்றுக்கொண்டால், அது உங்களுக்குச் சொந்தமாகிவிடும்.

வாழ்க்கைப்பயணத்தில் எம்முடன் பலர் வருகின்றார்கள். பலர் நல்லதைத் தருகின்றார்கள். ஏற்றுக்கொள்கின்றோம். மகிழ்கின்றோம். சிலர் கெட்டதைத் தருகின்றார்கள். அதனை ஏற்காது விடுகின்றோம். தொடர்ந்து மகிழ்ச்சியாகவே செல்வோம். தவிர்த்து, மாறி  நல்லதை விடுத்து, கெட்டதை எடுப்போம் என்றால் துன்பத்தில் தவித்தே பயணிப்போம்..! வாழ்க்கைப் பயணத்தைப் புரிந்து கடப்போம். நிறைவை, நிம்மதியூடாக அடைவோம்.

 

ஆ.கெ.கோகிலன்

21-09-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!