54ஆவது பிறந்த நாள்..!

 



54 வயது முடிந்து 55 இற்குள் காலடி எடுத்து வைக்கின்றேன். ஆம். நேற்றுடன் 54  வயது போய்விட்டது. ஓய்வுக்கான வயதை எட்டிப்பிடித்துவிட்டேன். முன்பு 55 வயதோடு, அரச ஊழியர்கள் ஓய்வுபெறவேண்டும். இப்போது, விஞ்ஞான துறையில் ஏற்பட்ட வளர்ச்சி மனித ஆயுளை நீட்டியுள்ளதோ தெரியவில்லை..! 60 வயது வரை  வேலைசெய்ய அரசு அனுமதிக்கின்றது. ஊழியர்களும், அதற்கு ஏற்ப தாமும் அந்த வயதுவரை வேலைசெய்யாவிட்டால் தமது ஆரோக்கியத்திற்கு கேடு என்பது போல, நினைத்து, இழுத்துப்பிடித்துக்கொண்டு வேலை செய்கின்றார்கள். நானும் அவ்வாறான நிலையில் தான் இருக்கின்றேன். காலம் ஏதாவது திட்டம் வைத்துள்ளதா என்பது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. போற விதத்தில் போகட்டும். நடப்பதை ஏற்பதற்கும், அதைத் தாண்டிப் போவதற்கும் பழகவேண்டியது தான். அடம் பிடிப்பதால் சில அமையலாம். ஆனால் நடக்கக்கூடாது என்று இருக்கும் ஒரு விடயம் நடக்கும் என்ற சாத்தியம் எனக்கு இல்லை. இறைவன் அப்படியான பாதையிலே என்னைக்கூட்டி வந்துள்ளார்...! ஆனால் எதிர்பார்க்காத பல விடயங்கள் நடந்தும் இருக்கின்றன.

இவ்வாறான நிலைப்பாட்டில் எனது வாழ்க்கை இருக்க, நேற்றுக்காலை  விழித்ததும் ஒரு நன்றியை இறைவனுக்குச் சொன்னேன். 55ஐப் பார்க்க வைத்ததற்கு..!

எழும்பி வெளியே வர, மூத்த மகள், வாழ்த்தினாள். அதனைத் தொடர்ந்து இளைய மகளும், மனைவியும் வாழ்த்தினர். தாயாரும் பல தடவை வாழ்த்த தொலைபேசியை எடுத்துள்ளார். நான் கவனிக்கவில்லை. அலுவலகம் சென்றதும், அவரது வாழ்த்தை ஏற்றுக்கொண்டு, அவருக்கு எனது நன்றியைத் தெரிவித்தேன். எனது ஊழியர்களும் அவ்வாறே பல விதத்தில் வாழ்த்தினார்கள். பதிலாக நான் என்னத்தைச் செய்ய..? பொருளாதார இறுக்கச் சூழலில் ஆடம்பரச்செலவுகளைத் தவிர்க்க நினைப்பது வழக்கம். இருந்தாலும் இவ்வாறான நிகழ்வுக்கு, சிறிய அளவிலாவது ஏதாவது செய்து கூட உள்ளவர்களை மகிழ்விக்க நினைப்பவன் நான். அந்த வகையில் சில தின்பண்டங்களை அலுவலக ஊழியர்களுக்கு வழங்கிவிட்டு, வரும்போது, வீட்டிற்கும் சிற்றூண்டி வங்கிவந்தேன். அதனை மனைவி, பிள்ளைகளுக்கும், அயல்வீடுகளுக்கும், அம்மா மற்றும் தம்பி குடும்பத்தினருக்கும் கொடுத்துவிட்டு, வரும்போது, நல்லூர் முருகனையும் பார்த்து வந்தோம். நாம் கோவில் போகும்போது கோயில்நடை சாத்தும் நேரம் வந்துவிட்டது. இருந்தாலும் இறுதித் தீபாராதனையை பார்த்துக்கொண்டு திரும்பினோம். கோயில்வீதியில் இருந்த உறவுகள், நட்புக்கள் போன்றவர்களைக் கண்டு, கதைத்ததுடன், வீதிக்கடைகளில் நேரத்தைப்போக்கி, ஜஸ்கிறீம், சுண்டல், கடலை, தும்புமுட்டாஸ் போன்றவற்றை வாங்கியுண்டு மகிழ்ந்ததுடன், சில உபயோகமான பொருட்களையும் வாங்கினோம். ஏறக்குறைய மணி 10 தாண்டிய பின்னர் வீடு வந்தோம். 5 பேரும் காரில் சென்றதால், காரை முழுமையாகப் பயன்படுத்திய திருப்தி எனக்கு இருந்தது.  பிள்ளைகளுக்கு ஒரு வாக்குக்கொடுத்தேன். பிறந்த நாள், ஒரு சைவ நாளில் வருவதால், அடுத்து வரும்மச்ச நாளில் மச்சச்சாப்பாடு வாங்கித்தருவதாக..!.  இன்று மாலை வேலையால் வந்ததும் தண்ணீர் பாய்ச்ச, சில தேனிக்கள் உடலில் கடிக்க வெறுத்துப்போனேன்..! புளியைப்போட்டு, தடவிவிட்டேன். அத்துடன் ஒரு தகரமும் கையைவெட்டி காயப்படுத்தியது..! பரவாயில்லை. வேலையில் இருந்து வரும்போது விபத்து நடந்து சேதமும், வலியும் அதிகமாக இருந்தால் எப்படியிருக்கும்..? அதைவிட இது பரவாயில்லைத் தான்..! தாங்கமுடியும்..! ஒருவாறு, இவற்றைச் சமாளித்து, வாக்களித்தது போல் மனைவி, பிள்ளைகளை அழைத்துக்கொண்டு, வடலி என்ற ஒரு ரெஸ்ரொறன்டிற்குச் சென்று வயிறு நிறைய உண்டு மகிழ்ந்தோம்.

சொன்னவார்த்தையைக் காப்பாற்றிய சந்தோசம் எனக்கு இருந்தது. பிள்ளைகளுக்கும், ஒரு புதிய அனுபவமாக இந்த உணவு முறை அமைந்திருக்கலாம். மனைவியின், ஒரு வேளை உணவு சமைக்கும் வேலையைக் குறைத்த திருப்தியும், கூட எனக்கு இருந்தது. நாம் இருப்பதால், சிலருக்காவது நன்மை கிடைத்தால், அந்த வாழ்க்கை பயனுடையது. இது தான் தற்போதைய எனது மன எண்ணம்.

 

ஆ.கெ.கோகிலன்

06-09-2023.  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!