சினம்

 



நடிகர் அருண்குமார் என்ற அருண் விஜய் நடித்த திரைப்படம் சினம். தற்போதுள்ள முன்னனி நடிகர்களுடன் இருக்கவேண்டியவர் காலம் அவரை கனகாலம் கவனிக்காமல் மறைத்துவிட்டது..! 1995இல் நடிப்பில் இறங்கியவர் ஏறக்குறைய 15 வருடங்களுக்குப் பிறகே ஒரு இடத்தை பிடித்துள்ளார். தற்போது, இவர் தெரிவு செய்யும் படங்கள் ரசிக்கக்கூடியவையாக இருக்கின்றன.  ஜி.என்.ஆர். குமாரவேலனின் சினமும்

ரசிக்கவும், உணர்வுகளைத் தூண்டவும் கூடிய ஒரு கதைக்களம் தான்.

காதல் திருமணம் செய்து, மனைவி குழந்தையுடன் தனியே வசித்துவருகின்றார் ஹீரோ.  கண்டிப்பும் நேர்மையும் கொண்ட பொலிஸ் அதிகாரியாக இருக்கும் ஹீரோ, வழமைபோல் பிழைகளைத் தட்டிக்கேட்கின்றார்..! இந்த சமயத்தில் அவரது மேலதிகாரியின் வெறுப்புக்கு உள்ளாகி, கோபம் கொண்டு அவரைத் தாக்கி, வேலையில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுகின்றார்.

இதற்கு முன்னர், மனைவியின் தங்கையினது நிச்சயதார்த்த நிகழ்வுக்குச் சென்று, மனைவிக்கும், அவரது குடும்பத்திற்குமான நீண்டகாலப் பிரிவுத்துயரை நீக்க முயல, சூழல் செய்த சதியால், ஹீரோவின் மனைவி, காடையர்களின் காமப்பசிக்கு தீனியாகியதுடன், உயிரையும் இழக்க, வெகுண்டு எழுந்த ஹீரோ, வில்லத்தனம் செய்த காமப்பிசாசுகளை அடித்துக்கொன்று, இவ்வாறான செயல்களைத் தடுக்க அனைவரும் சினம் கொள்ள வேண்டும் என்ற தத்துவத்தை விதைத்துப் படத்தை முடித்து வைக்கின்றார்..! கெட்டவர்கள், கொட்டம்போட அமைதியாக விலகிப்போகும் நல்லவர்களே காரணம் என்றும், தட்டிக்கேட்கவும், கெட்டவர்களை விலத்தி வைக்கவும் மக்கள் பழகவேண்டும் என்றும், பெண்களைக் காப்பதே உண்மையான ஆண்களுக்கு அழகு என்றும் படம் சொல்கின்றது.


பல்லக் லால்வானி (Pallak Lalwani ) என்பவர் நாயகியாக நடித்துள்ளார். நாயகன், நாயகி, அவர்களது குழந்தை என மூன்று பேரும் கதை சொல்லும்  பழக்கத்தைக்கொண்டவர்கள்..! அவர்களின் கதைகளுடன், படத்தின் கதையும், தொடர்புபட்டுச்செல்வது ஒரு புதுமை..! இசை மற்றும் தொழில்நுட்பங்கள் பரவாயில்லை. ஹரிதாஸ் என்ற ஒரு சிறந்த படத்தைக்கொடுத்த இயக்குனர், இதனை இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாம் என்பது எனது எண்ணம். பல காட்சிகள், பல படங்களை நினைவுபடுத்துகின்றன..! இயக்குனரால் அதனைத் தவிர்க்க முடியவில்லை என்பது எனக்குக் குறையாகத் தெரிகின்றது.

 


ஆ.கெ.கோகிலன்

25-09-2023.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நம்பிக்கையீனம்..!