குளவிக் கொடுக்கு..!
wasp sting
குளவிகள் அல்லது தேனிக்கள் போன்றவற்றில் ஏதோவொன்று கொட்டியதால்
உடல் ஒரு மாதிரி சோர்வாக இருந்தது. தற்போது மாணவர்களுக்கு புது அனுமதியுடன், பதிவும்
நடைபெறுவதால், அலுவலகத்தில் வேலை அதிகம். அத்துடன் ஊழியர்கள் பற்றாக்குறை இன்னும் அதிகமாக இருப்பதாலும்,
அடிக்கடி முடிவுகளில் மாற்றங்கள் வருவதாலும், வேலைகள் முடிவதாக இல்லை. ஒவ்வொரு நேரமும்
ஒவ்வொரு வித வேலைகள் வந்துகொண்டிருக்கும்.
இப்படியான சூழலில் இன்று பொறியியல் துறைப் பாடங்களுக்கு வருகைதரு விரிவுரையாளர்களை
நியமிக்க வேண்டிய நிலையில் நேர்முகப்பரீட்சையை
வைத்தோம். அதற்கு முதலே கையில் சற்றுவலி அதிகமாக
இருந்ததால், ஊழியர்களுடன் கதைத்தேன். அவர்கள் சொன்னார்கள்..” குளவியின் கொடுக்கை எடுத்துவிட்டால்
வலி குறையும் என்று..” எனது கண்ணுக்கு குளவியே
தெரியவில்லை. பிறகு எப்படிக் கொடுக்குத் தெரிவது என்றேன்..? ஊழியரில் ஒருவர், உடனேயே வீக்கத்தை அழுத்தி, அதில்
வெள்ளையாக வரும் பகுதியில் இருந்து கொடுக்கைப் பிய்த்து எடுத்தார். பின்னர் அந்த இடத்தில்
ஸ்பிறிட்போட்டு விட்டேன். வீக்கம் சிறிது சிறிதாக
குறைவது புரிந்தது..! மாலை இன்னொரு ஊழியர்
சொன்னார் ”மண்ணெண்ணை போட்டுத்தடவினால் இவை காணாமல் போய்விடும் என்று..!” நான் இன்னமும்
அதனை முயற்சி செய்து பார்க்கவில்லை. எல்லாவற்றிற்கும் வைத்தியசாலைக்குப் போவது நல்லது
அல்ல..! எளிமையான வழிமுறைகளில் தீர்வு கிடைக்கவில்லை என்றால் போகலாம். இல்லை என்றால்,
தேவையில்லாத சிக்கல்களையும் முகம்கொடுக்க வேண்டிவரும். காய்ச்சலுக்கு என்று சென்ற சிறுமியின் கை அகற்றப்பட்ட
நிகழ்வு மிகவேதனையாக இருந்தது. அந்தச் சிறுமியின் தாயார் என்னிடம் படித்தவர்..! வங்கியில்
வேலை செய்பவர். என்னுடைய வங்கி வேலைகளை உடனேயே முடித்துதந்து உதவுபவர். அவரது தந்தையாரும்
எனக்குத் தெரிந்தவரே..! சுன்னாகத்தில் பெரிய அளவில் புடவைவியாபாம் செய்பவர்.
காலம், காய்ச்சலூடாகக் கையை கொண்டுசென்றுவிட்டது. யாரில்
பிழை கண்டுபிடித்து என்ன செய்ய..? அந்தக்குழந்தை கையில்லாமல் இருப்பதை நினைக்க முடியவில்லை.
மனைவி சொன்னார், “மிகவும் அழகான, நாட்டியம் ஆடக்கூடிய குழந்தை. எல்லோருக்கும், கை என்பது எவ்வளவு முக்கியம்..?”
எல்லோரும் பொறுப்புணர்வோடு இருக்க வேண்டும். இல்லை என்றால்
இவ்வாறான பாதிப்புக்கள் ஏற்படும் போது, மக்கள் உணர்வுகளுடன் செய்யும் விளைவுகளைத் தாங்க
முடியாது. வைத்தியர் மீது சமூகம் எவ்வளவு மதிப்பை வைத்துள்ளதோ அதேயளவு
அவதூறுகளையும் சந்திக்க வேண்டிய சூழல் அவர்களுக்கு வருவதையும் கவனிக்க வேண்டும்.
ஆ.கெ.கோகிலன்
07-09-2023.
கருத்துகள்
கருத்துரையிடுக