மன்னிப்பு..!

 


 


இதனை நான் நீண்டகாலம் என் வாழ்வில் பயன்படுத்தியுள்ளேன். பல கெடுதல்கள் செய்தவர்களை, மன்னித்து,  அவர்கள் செய்த அநாகரிகச் செயல்களை மறக்கவும் முனைந்துள்ளேன்..! பலர் இதனை எனது பலவீனம் எனக்கருதினாலும், நான் இதனை எனது பலமாகவே மாற்றிவந்துள்ளேன். எனது வாழ்க்கைப் பயணத்தை அவதானித்தால், யாரையும் எனக்குப் போட்டியாகவோ அல்லது எதிரியாகவோ கருதுவது கிடையாது. இறைவன், இப்படியான நபர்கள் ஊடாக என்னைச் சோதிப்பதாக நினைத்துக்கொள்வேன். இதனால் என்னுடன், எதிராக நின்றவர்கள் காலப்போக்கில் என்னுடன் இணைந்து செயற்படுவார்கள். இது நாள் வரை இப்படியான அனுகுமுறையில் சென்றதால், சிலர் தாம் செய்வது சரி என்ற எண்ணத்தில் மேலும் மேலும் தேவையில்லாத விடயங்களில் தலையிட்டு, பிரச்சனைகளை  மேலும் சிக்கலுக்குள் தள்ளியுள்ளனர். காலமும், சூழ்நிலைகளும் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. தாமாகவே வலைகளில் சிக்கி, தாமாகவே அவதிப்படுபவர்களைக் காணும் போது மிகக்கவலையாகவே இருக்கின்றது. 

இன்று நிலைமைகள் மாறி, பல முரண்பாடுகள் சேர்ந்து, சிலருக்கு எதிராகத்  திரண்டுவரும்போது என்னால் ஒன்றும் செய்யமுடியாது..! தவறான பாதையில் வீறுநடைபோட்டால், முடிவு பாதகமாகும்போது யாரிடமும் கோபிக்க முடியாது. தமது தலையில் தாமே மண்ணையள்ளிப் போட்டதாகவே கருதமுடியும். நான் தவறுகளுக்கு என்றும் துணைபோக மாட்டேன். மேலிடங்களில் இருந்து வரும் விதிகளையும், நடைமுறைகளையும், அறிவுறுத்தல்களையும் கேட்டுநடப்பதே எனது கடமை. அதனை மாத்திரம் சரியாகச் செய்யவேண்டும் என்று நினைப்பேன். மேலுள்ளவர்களே தவறு செய்யும் பட்சத்தில், எனக்கு எது நியாயமாகப் படுகின்றதோ அதனைச் செய்துவிட்டுப்போவேன். எது வந்தாலும், அதனை முகம்கொடுத்து, தாண்ட முயற்சிப்பேன்.

இன்று, பல துறைகளைச்சேர்ந்தவர்கள், ஒருவர் மேல் பல குற்றச்சாட்டுக்களை  வைத்து, அவருக்கு தண்டனை வழங்கவேண்டும். அவருக்கு தகுந்த எச்சரிக்கைக்கடிதத்தைக் கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தாமதித்தால், தாம் தமது கடமைகளைச் செய்யமுடியாது என்று, எழுத்துமூலமாகவே தந்துள்ளார்கள். பல நாள், என்னால் காப்பாற்றப்பட்டாலும், இனி அதுமுடியாமல் போவது தவிர்க்க இயலாததே..!

ஒவ்வொரு மனிதரும், எமக்கு செய்யும் நன்மைகளை மறக்காமல் இருக்கவும், எல்லோரையும் எப்போதும் வேண்டும் என்ற எண்ணத்தில் பழகவும் வேண்டும். ஒரு சிலரின் நட்புக்காக, பலரை, சரி பிழை தெரியாமல்  எதிர்த்தால் விளைவுகள் இப்படித்தான் இருக்க முடியும். யாராலும் காப்பாற்ற முடியாது. வாழ்வே  முறைசாராப் பள்ளிக்கூடம் தான்..! தொடர்ந்து படித்து, சரியான திசையில் பயணிக்க முயல்வோம்.

 

ஆ.கெ.கோகிலன்

13-09-2023. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நம்பிக்கையீனம்..!