காயங்கள் தரும் நம்பிக்கை..!

 



உலகப் போக்கில்  எல்லா தொழிலிலும் வியாபார எண்ணங்களை நுழைப்பதால், சந்தேகம் எங்கும் வியாபித்தே வருகின்றது..! எவரையும், எப்பொருட்களையும் நம்ப முடியாத அளவிற்கு காலம், மாறிவிட்டது. பணத்திற்கு மதிப்பு அளிப்பதால் மனித தன்மைகளும், அசூரநிலைக்குச் செல்கின்றன..! யாருடனும் அன்பாக பழகப்பயம்  வருகின்றது.

மக்களுக்கு சேவைசெய்யும் தொழிலில் இருப்பவர்களே தொழிலறம் அற்று செயற்படுவது வேதனைக்கு உரியது. பணம் தேவை தான். அதற்காக, உறவுகளையும், நட்புக்களையும் உதறும் நவீன நுன்சமூகங்கள் மீது வெறுப்பும், வேதனையும் கொப்பளிக்கின்றது. எமது நாட்டில் மாத்திரம் தான் இப்படி நடக்கின்றது  என்பது அல்ல..! உலகின் பெரும்பாலான நாடுகளே இவ்வாறு தான் இருக்கின்றது.

நாலு பேர் நல்லாக இருப்பதால், நாட்டிலுள்ள அனைவரும் நல்லாக இருப்பதாகக்காட்டிக்கொள்ளவே அருகே இருக்கும் பெரிய நாடுகளே விரும்புகின்றன..!

சந்திரனையும், சூரியனையும் ஆராயும் எண்ணம் கொண்டவர்கள் முதலில் தம்மையும், தமது நாட்டிலுள்ள அடிமட்ட மனிதர்களையும் முதலில் ஆராய வேண்டும். முன்னேற்றம் என்பது படம் காட்டுவதில் அல்ல..! நாட்டிலுள்ள ஒவ்வொரு மனிதர்களும் நிறைவாகவும், நிம்மதியாகவும் வாழ்வதற்கு வேண்டிய அடிப்படைகளை அமைப்பதே ஆளுமைமிக்க அரசின் எண்ணமாக இருக்க வேண்டும். ஆனால் எங்கும் தற்போது இருக்கும் நிலைகள் வேதனையளிப்பதாகவே இருக்கின்றன..!

பொறுப்புணர்ச்சி, நம்பிகையைக் காத்தல் எல்லாம் குறைந்துவரும் இந்தக்காலத்தில், எமது தேவைகளையும் குறைக்கப்பழக வேண்டும். எடுத்ததற்கெல்லாம் வைத்தியரிடம் ஓடும் பழக்கங்கள் குறைய வேண்டும். இறைவன், இயற்கை மீது நம்பிக்கை கொள்ளவேண்டும். ஆனால் மாசுபடுத்தப்பட்ட அறிவால், தவறாக நடக்கும் பெரியவர்களிடமும் அவதானமாக இருக்க வேண்டும்.

55ஐ நெருங்கும் நான் வைத்தியரிடம் போக அஞ்சுகின்றேன். தற்போது என்னால், வயதிற்கு ஏற்றது போல் செயற்படமுடிகின்றது.  வீட்டில் இருக்கும் வேலைகளைச் செய்வதால் சின்னச்சின்ன காயங்கள் பல ஏற்படும். சிலவேளை அவை வலியைத் தரும். சில நாட்களில் அவை காணாமல் போய்விடும்..! நேற்று, பின்னால் வளர்ந்து நின்ற ஒருவகைப் பன்னத்தாவரத்தின் இலையை  பிடுங்கும்போது அது உள்ளங்கையை வெட்டிவிட்டது. இரத்தம் வழிந்தது..! அத்துடன் செய்த வேலையை முடித்துக்கொண்டேன். தொடர்ந்து வேலை செய்ய, முடியவில்லை. பின்னர் ஒய்வு தான் எடுத்தேன். உடலில் சீனி கூடவாக இருந்தால் இரத்தம் உறையாது என்றும், நோய் பெருக்கும் என்றும் சொல்வார்கள்..! நானும் எனது காயத்தில் சோதித்துப் பார்த்தேன். சிறிது நேரத்தில் இரத்தம் வடிவது நின்றது..!  சில மணிநேரத்தில் காயமும்  மாறி, வலி குறைந்து, உள்ளங்கைத்தோல் பொருந்தத் தொடங்கியது..! நானே முடிவெடுத்துக்கொண்டேன்  உடல் இயற்கை அருளால் சரியாகவே இருக்கின்றது..! தேவையில்லாமல் சோதனைகள் என்ற பேரில் சிக்கலுக்குள் மாட்டாமல், தவிர்ப்பதே நல்லது.

காயங்கள் வருவது கவலைப்படுத்தவல்ல..! உடல் ஆரோக்கியமாக இருக்கின்றதா என்பதை உணர்த்த..!  சின்ன சின்ன விடயங்களைப் பெரிதுபடுத்தி, பெரிய மருத்துவ வியாபார மாய வலைக்குள் மாட்டினால், அவ்வளவு தான்.

எந்த மருத்துவமும் மனிதனை 1000 ஆண்டுகள் வாழ வைக்காது. அப்படி வாழவேண்டும் என்றால், நல்லதை செய்து, வள்ளுவர் போல் ஆயிரம் ஆண்டுகள் தாண்டிக் கூட வாழ முடியும்..!

 


ஆ.கெ.கோகிலன்

24-09-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

நம்பிக்கையீனம்..!

இயற்கை தந்த வலி..!