காலநிலை மாற்றம்..!

 


 

நேற்றுவரை கடும் வெய்யிலால் பயிர்கள் எல்லாம் வாடிக்காணப்பட்டது. ஒவ்வொரு நாளும் வேலையால் வீடுவரும் போது கண்டு காலிகளைக் காண கவலையாக இருக்கும். அவை எல்லாம் வாடி வதங்கி இருந்தன. புற்கள் எல்லாம் காய்ந்து சருகாக காற்றில் பறந்தன. ஈரலிப்பு இல்லாத மண்துகள்கள் எங்கும் பறந்து எல்லாவற்றையும் அழுக்காக்கி வைத்திருந்தன.  பல வாழைமரங்கள் காய்ந்தும், முறிந்தும், அழுகியும் விழுந்தன. இவை எல்லாவற்றையும் பார்க்க கவலையாக இருக்கும். என்னால் முடிந்தளவு தண்ணீரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதியாகப் பாய்ச்சினேன்.  ஒரு பகுதிக்குப் பாய்ச்ச, மற்றப்பகுதி எல்லாம் காய்ந்து நொந்து இருக்கும். என்ன செய்வது இயற்கை  மனம் வைத்தால் தான் இதற்கு தீர்வு உண்டு. இல்லை என்றால் ஒன்றும் செய்ய முடியாது. அத்துடன் நாட்டில் ஏற்பட்ட பொருளாதாரக்கஷ்டம்,  பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை வாசிகளைக் கூட்டிவிட்டது..! குறிப்பாக மின்கட்டணமும் மிக அதிகரித்துள்ளது. ஒவ்வொரு நாளும் மோட்டர் போட்டுத் தண்ணீர் இறைப்பதால் மின்கட்டணமும் அதிகம் செலுத்தவேண்டி வந்தது. இலாப நட்ட கணக்குப் பார்த்தால், தண்ணீர் இறைப்பதைவிட சும்மா இருப்பது இலாபத்தைத் தரவல்லது. செலவை குறைப்பது. ஆனால் முயற்சி, ஆரோக்கியம், பசுமை போன்ற காரணிகளுக்காக, இலாபத்தைப் பார்க்காமல் செயற்பட, மனம் ஊக்குவித்தது.

இப்படியான சூழலில் மனிதர்களும் விலங்குகள் போல் செயற்பட்டார்கள். அதிக வெய்யிலால், மூளை கலங்கி, மனக்குழப்பங்களில் அலைந்தார்கள்..! ஏனைய விலங்குகள் கூட வெப்பத்தால் வெந்து, ஏனையவற்றுடன் மல்லுக்குச் சென்றன. வெப்பத்தால் பல உடல் உள நோய்களும் வந்தன..! இயற்கை மக்களையும், விலங்குகளையும் உண்டு இல்லை என்ற அளவுக்கு ஒரு கைபார்த்து வந்தது..!  

என்று முடியும் இந்த வெப்ப காலம் என்று எண்ணும்போது, நேற்றுப் பின்னிரவு அதாவது இன்று அதிகாலை நல்ல மழைபெய்து சூழலை குளிர்வித்தது..! மனங்கள் கொஞ்சம் மகிழ்ந்தன.  பயிர்களும் பார்க்க பசுமையாக இருந்தது.

அலுவலகத்தில் கூட பல முரண்பாடுகள் இருந்தாலும், விட்டுக்கொடுத்து, தமது வேலையைச் சரியாகச் செய்ய பலர் தயாராவது நிம்மதியைத் தந்தது. கோடை முடிந்து மாரி தொடங்கும் காலநிலைமாற்றம், மனங்களில் மாற்றங்களைக் கொண்டுவந்தது ஆச்சரியமே..!

தொடர்ந்தால் சந்தோசம் நிலவும். இல்லையேல் சங்கடங்கள் தொடரும்..!

 

ஆ.கெ.கோகிலன்

18-09-2023.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

நம்பிக்கையீனம்..!

இயற்கை தந்த வலி..!