சர்பத்..!

 



சின்ன வயதில் நான் இருக்கும் போது சுன்னாகம் அல்லது யாழ்ப்பாணம் போனால் ஒரு சர்பத் குடித்தால் தான், ஒரு திருப்தி கிடைக்கும்..!  இந்தியாவில் இருந்த காலத்திலும் அது தொடர்ந்தது. அங்கே, அதனை ரோஸ் மில்க் என்பார்கள். ஏறக்குறைய எங்களுடைய சர்பத் தான் அந்த ரோஸ் மில்க்.

கோடை காலத்தில் சர்பத் வியாபாரம் கொடிகட்டிப் பறக்கும்.

தற்போது மாரிகாலம் தொடங்கினாலும் கோடைகாலம் போல் வெய்யில் வாட்டுவதால் மக்களின் கூட்டம் சர்பத் கடைகளில் அதிகமாக இருக்கின்றது.

நேற்று நானும், மனைவியும் சாவகச்சேரியால் வரும்போது, வெய்யில் தாகத்திற்கு சர்பத் பருகினோம். அதனைப் பிள்ளைகளுக்கும் சொன்னோம். இன்று மனைவியின் பிறந்த நாள். வழமைபோல், கேக்கையும், ரோல்ஸையும் உண்டு, அயலுக்கும் உறவுக்கும் கொடுக்க வெளிக்கிட, மூத்தவள் சர்பத் வேண்டும் என்று கேட்க, வேண்டாவெறுப்பாக இருந்த இளையவளையும், கூட்டிக்கொண்டு, உறவுகள் வீட்டிற்கும், வரும்போது சாப்பாட்டையும் வாங்கிக்கொண்டு, சர்பத்தையும் வாங்கி அருந்தினோம். இரவாக இருந்தாலும் இனிமையாக இருந்தது. 50 வயதுக்கு மேல் இனிப்புக்களைத் தின்பது, உடலுக்கு கேடு என்று நினைத்தாலும் சூழல் கொஞ்சமாவது உண்ணச்சொல்கின்றது.  ஆசையில் உண்பதும், பின்னர் அவதிப்படுவதும் வழமையான போதிலும், முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை என்ற வருத்தம் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கின்றது.

இன்றைய அலுவலகச் சூழலும் சூட்டைக் கூட்டுவதாகவே இருந்தது. காலையில் ஏறிய சூடு, இரவு சர்பத்துடனே கொஞ்சம் இறங்கியது.

வேலையையும், வீட்டையும் தனித்தனியாகக் கையாளவே எனக்கு விருப்பம். ஆனால் தற்காலச் சூழல் இரண்டையும் சேர்த்து, மூளையைக் கசக்குகின்றது..!  தெளிவற்ற எண்ணங்களும், சிந்தனைகளும்  எமது நியாயமான பாதைகளில் இருந்து எம்மை விலத்திவிட வாய்ப்புண்டு. கவனமாக இருப்பதுடன், கடவுளின் அனுக்கிரகமும் இணைந்தால் தான் நிம்மதியாக வரும் நாட்களைத்  தாண்ட முடியும்.

ஆ.கெ.கோகிலன்

15-09-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

நம்பிக்கையீனம்..!

இயற்கை தந்த வலி..!