கொடியிறக்கம்..!

 



கொரோனாவுடன் சேர்ந்து பல செத்தவீடுகளும் வந்ததால் கோவில் போவது அரிதாகியிருந்தது. எனக்கு மட்டும் அல்ல. குடும்ப நபர்களே அப்படித்தான் இருந்தார்கள். அண்மையில் மகளின் சாமத்தியவீட்டோடு, திரும்ப கோவில் குளங்களுக்கு போக மனம் விரும்பியது. இது எனக்கு மட்டும் அல்ல..! எனது குடும்ப உறுப்பினர்களுக்கும் தான்.

மனமாற்றங்கள் காலத்திற்கு ஏற்ப ஏற்படுகின்றதோ தெரியவில்லை. கடும் வெயிலும், வறட்சியும் மக்கள் மனங்களில் கலக்கத்தை ஏற்படுத்தி, இறைநம்பிக்கையை அதிகரிக்கின்றது போலும்..! நானும் பொதுவாக மதவழிபடுத்துனர்களை வெறுப்பதுண்டு..! அதற்கு பல காரணங்கள் உண்டு. சமய வரலாற்றையும், மதங்களின் ஆதிக்கங்களையும், சமூக ஏற்றத்தாழ்வுகளையும் அவதானித்தபோது, எனக்கு மதம் பெரிதாகத் தெரியவில்லை. மனிதம் பெரிதாகத் தெரிந்தது..! ஒருவர், இது தான் கடவுள் என்பதையும், கடவுளுக்கு கிட்டவாக தான் இருப்பதாகவும் கூறுவதை, என்னால் ஏற்க முடியவில்லை. இயற்கையின் குழந்தைகள் நாம் அனைவருமே..! அப்படி ஒருவர் கடவுளுக்கு கிட்ட இருப்பராயின், அவர் மற்றவர்களைவிட ஏதோ ஆற்றல் படைத்தவராக இருக்கவேண்டும். அப்படியானவர்களை நான் கடவுளுக்கு கிட்டவாகப் பார்க்கவில்லை. அவர்கள், அன்புக்கும், அரவணைப்புக்கும் உரியவர்களாக, மனிதத்தை நேசிப்பவர்களாக, யாரையும் ஏமாற்றாமல், இயன்றவரை மற்றவர்களுக்கு நன்மை செய்து, வாழ்கின்றார்கள்.  என்னைப்பொறுத்தவரை அவர்களைக் கடவுளாகவே பார்க்கின்றேன்.  ஆனால் கடவுளுக்கு கிட்ட இருப்பவர்கள் என்று சொல்பவர்களுக்கு கிட்ட கடவுளே இருப்பாரோ தெரியவில்லை..! அவ்வளவு ஏமாற்றும், சுத்தலும், கொண்டு மக்கள் முன் நடிக்கின்றார்கள்..!

இந்த மனபோக்கில் நானிருக்க, மனைவி, பிள்ளைகள் கோவிலுக்குப் போகக்கேட்டார்கள். அவர்கள் பொதுவாக ஒன்றும் கேட்பதில்லை. அதனால் தவிர்க்க முடியவில்லை. நேற்று இரவு சூடான பணம், அருந்தியதால் வயிற்றில் சிறு குழப்பம் இருந்தது. அத்துடன் நித்திரைக்குறைவால், இன்று, நித்திரை கொள்ளவேண்டும் போல் இருந்தது. இந்தநிலையில், இவர்களின் கோரிக்கையை நிராகரிக்காமல், நிறைவுசெய்ய முனைந்தேன். அதன் பிரகாரம் தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலய தீர்த்தத்திருவிழா நாளின் இரவில் கொடியிறக்க நிகழ்வுக்குச் சென்றோம். மாமியார் கூட எம்முடன் வந்திருந்தார்..! மாமனாரின் மறைவுக்குப் பின்னர் வெளியே வருவது மிகக்குறைவு. இருந்தாலும் துர்க்கை அம்மன் மீதுள்ள பற்று, அவரையும் இழுத்தது. மனைவியும் துர்க்கையின் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டவர். நான் சிறுவயதில் இருந்தே கோவிலுக்குப் போவதே புக்கைக்காகத் தான்..! ஓரளவு விபரம் வந்தவுடன் போவதைக் குறைத்துக்கொண்டேன். பின்னர், வாலிய வயதில் போவது நிஜத் துர்க்கைகளைப் பார்க்கவே..! தூரத்தில் நின்று பார்த்து, ரசித்து பின்னர் மனத்தையும் குழப்பிக்கொண்டு வீடுவருவதே வழமை..! உண்மையில் சாமி கும்பிடப்போகவேண்டும் என்றால் எனக்கு ஒருவரும்  கோவிலில் இருக்கக் கூடாது.  ஜயர் கூடத்தேவையில்லை. நானும் சாமியும் போதும்..! என்னுடைய பக்தி அவ்வளவு தான்.  உண்மையாகவும், நேர்மையாகவும் இருக்க அதிகம் முயற்சி செய்வேன். தோற்றால், இறைவன் உதவவில்லை என்று அவர்மீதே கோபித்துக்கொள்வேன். இந்தக்கோட்பாடு பலருக்குப் பிடிக்காது. ஆனால் பலரின் கோட்பாடு எனக்குப் பிடிக்காது..! கோவில் பெரில் நாம் வாழவும், சாப்பிடவும் கற்றுத் தருவதாகவே எனக்குப்படுகின்றது..! ஒருவேளை, நாம் படைப்பதை இறைவன் சாப்பிட்டால், அதன் பிறகு “படைப்பார்களா..?” என்பதே எனது கேள்வி..! கடவுளைச் சாட்டி வாழ்வது எமது மரபு என்பது ஆய்வுக்குரியது. இடையில் யோரோ இவ்வாறு திரித்துவிட்டார்கள். அதைவிடுத்து, அனைத்து உயிர்களும் கடவுளே என்பதைப் புரிந்து அனைவரிடமும் அன்பைப் பரப்ப முயலவேண்டும். முடியாவிட்டால் மௌனமாகவேனும் இருக்கப் பழகவேண்டும்.

எனக்குக் கோவில் போனதில் பலன் கிடைத்தது. யாரோ ஒரு அன்பர் பிரசாதம் தந்தார்..! அவர் எனக்கு மட்டும் தரவில்லை குடும்பத்தினர் அனைவருக்கும் தந்தார். மேலும் பலருக்கும் கொடுத்தார். நன்றி, போதும்..!, இறைவனின் அருள் கிடைத்தது. நானும் எனது குடும்பத்தினருக்கு ஜஸ்கிறீம், மற்றும் சுண்டல் போன்றவற்றை வாங்கிக்கொடுத்து, யாசிகளையும் சிறிது கவனித்து, வீடு கூட்டிவந்தேன்.

துர்க்கையின் அருளால் அனைவரும் நிம்மதியாக வீடு சேர்ந்தோம்.  சில நண்பர்களையும் கண்டு கதைத்தோம். மாலைப்பொழுது, அருளோடு கழிந்தது.

மனமும் நிறைவாக இருந்தது.

 

ஆ.கெ.கோகிலன்

29-08-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நம்பிக்கையீனம்..!