நித்தம் ஒரு வானம்..!

 


 


ஒவ்வொரு நித்திரையும் ஒவ்வொரு மரணம் தான்..! அதே போல் ஒவ்வொரு விழியலும், ஒரு விடியல் தான்..!   ஒவ்வொரு நாளும் நாம் பார்க்கும் வானம் வேறு வேறு தான்..!  இவ்வாறு தான் உலகவாழ்க்கையே இருக்கின்றது. ஒருவன் அழுகின்றான்..! ஒருவன் சிரிக்கின்றான்..! இரண்டுபேரையும் பார்த்தவன் அழுவதா சிரிப்பா என்று தெரியமால் அலைகின்றான். இவற்றை எல்லாம் பார்த்து படைத்தவன் ரசிக்கின்றான். உலகே நாடக மேடை..! சாகப்போகின்றோம் என்று தெரிந்தும் நன்றாக வாழுவது போல் மாபெரும் நடிகர்களாக நடிக்கின்றோம். நன்றாக நடிப்பவர் சமூகத்தில் மதிக்கப்படலாம். நடிக்க விரும்பாதவர், சமூகத்தால் மிதிக்கப்படலாம். இப்படித்தான் இருக்க உலகே பழக்கப்படுத்தப்பட்டுள்ளது..! பழக்கப்படுத்தியவர்கள் தமது நலனுக்காகச் செய்த விடயங்கள், அவர்களையும் அழித்து, உலகையும் அழித்துக்கொண்டு வருகின்றது என்பதைப் புரியாமல் மாயைக்கு மாட்டி மனித வாழ்கையே விலங்குகளை விட வேதனை மிக்கதாக மாறுவதைப் பார்க்க எமது அறிவு அல்லது புகுத்தப்பட்ட அறிவு சரியானதா என்ற கேள்வி எழுகின்றது..?

இந்தப்படத்தைப் பார்க்கும் போது பல எண்ணங்கள் எனக்குத் தோன்றின..!  அந்தத் தலைப்பிற்கே இயக்குனரைப் பாராட்ட வேண்டும்.

வளர்ந்து வரும் நடிகர்களில் அசோக்செல்வனும் கவனிக்கப்பட வேண்டியவர்..!  வேறுபட்ட கதைக்களங்களில் பயணிப்பது அவரையும் படத்தையும் ரசிக்க வைக்கின்றது. அந்த வகையில் இந்தப்படம் பல பரிமாணங்களில் நடிக்க, அவருக்கு முழுத்தீனியே கொடுத்துள்ளது. அவரும் சிறப்பாகச் செய்துள்ளார்.

இயற்கை பற்றிய நிஜப்புரிதல் தராத அறிவால் வளர்க்கப்பட்ட ஒருவனின் வாழ்க்கைப்போராட்டங்களும்,  அதனூடாக இயற்கை பற்றிய புரிதலை அடைவதே கதை..!

ஆனால் அந்தக்கதைக்குள் ஒரே நாயகனையும்,  நாயகிகளாகப் பல பெண்களை வைத்துப் பல காதல் கதைகள் பின்னப்பட்டு, இறுதியில் அவை ஒன்றாக இணைக்கப்பட்டு, ஒரு புதிய காதலுடன் படம் முடிகின்றது.

நாயகனுக்கு  ஒரு இயல்பு உண்டு..!  அது, ஒரு கதையை வாசிக்கும் போது, அதன் முக்கிய பாத்திரமாகவே மாறிவிடுவார்..! இவ்வாறாக இரு சிறுகதைகள், படத்திற்குள் வருகின்றன. அவை முடிவின்றி இருக்கின்றன. முடிவைத்தேடிய பயணத்தில், தனக்கான வாழ்க்கைத் துணையைக் கண்டறிவதாகக் கதை முடிகின்றது.

ரிது வர்மா(Ritu Varma), அபர்ணா பாலமுரளி(Aparna Balamurali), ஈஷா றெப்பா (Eesha Rebba), சிவாத்மிகா ராஜசேகர் (Shivathmika Rajasekar),  ஸ்சிவதா (Sshivada) எனப்பல நாயகிகள்  கதையில்  நிஜ, நிழல் பாத்திரங்களாக வருவது ஒரு புதுமையான வெளிப்படுத்தலாக இருந்தன..! ஆனால் பலருக்கு சிலசமயம் புரிதலில் சிக்கல் இருந்திருக்கலாம். என்னைப்பொறுத்தவரை,  பாத்திரங்கள் சிறப்பாகப் படைக்கப்பட்டுள்ளன.

நடிகை அபிராமி, நடிகர் ஜீவா போன்றவர்களும் கதையில் முக்கிய பாத்திரங்களாக சில காட்சிகளில் வருகின்றார்கள்.

எத்தனையோ கோடி ஆண்டுகளாக இருக்கும், உலகில் சில ஆயிரம் வருடங்களுக்கான தடயங்களே கிடைக்கின்றன. ஒரு விடயத்தில் மட்டும் இயற்கை முடிவோடு இருக்கின்றது..! அது எந்த விஞ்ஞானத்தாலும் அழியாமை என்பதை ஏற்படுத்த முடியாது என்பது தான்..! 

வியாபார உலகில் விஞ்ஞானம் என்பது ஒரு வித பொருளாதார ஏற்றத்திற்கு மட்டுமே உதவும் ஆயுதம்..! நிஜ விஞ்ஞானத்திற்கான ஆய்வைச் செய்ய தொடங்கியவர்,  தொடர்ந்து இருக்க இயற்கை அனுமதிப்பதில்லை..! மாற்றம் வரும்போது, அனைத்தும் மாறிவிடும். நிஜம் நகர்ந்துவிடும்..!  

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாழ்க்கை..! நித்தம் ஒரு வானம்..! மாற்றம் என்பதே நிலையானது..! நிலையானது என்பதை மனிதனால் வரையறுக்க முடியாது. அதற்கான அனுமதியை இயற்கை இன்னும் மனிதனுக்கு வழங்கவில்லை.

இந்தத்திரைப்படத்தைப் பார்க்கும் போது, பிரபஞ்சமும், எனது வாழ்க்கையும் பல இடங்களில் தெளிவுபட்டன.

அனைத்து தொழில்நுட்பங்களும், அனைவரின் நடிப்பும், இசையும், இயக்கமும் தரமாக இருந்தது. ரா. கார்த்திக்கின்  (Ra. Karthik) அறிமுக இயக்கம் எனக்குப் பிடித்திருந்தது. பல காட்சிகளில் என்னை ஒன்றிக்க வைத்தது..!

 


ஆ.கெ.கோகிலன்

29-09-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

நம்பிக்கையீனம்..!

இயற்கை தந்த வலி..!