மறுபிறப்பு..!

 


நான், சின்ன வயதில் மதித்தும், பார்த்தும், அசைப்பட்ட எனது மாமாவின் மகன்,  எனது திருமணத்திற்குப் பிறகு குறிப்பாக  முதலாவது மகள் பிறந்த சில வருடங்களில் இறந்துவிட்டார்..!

அவர் மூன்று மொழிகளிலும் அதிக புலமை வாய்ந்தவர்..! சின்ன வயதிலேயே ஆங்கில அகராதியைக் கரைத்துக்குடித்து, என்ன கேட்டாலும் அதுபற்றிச் சொல்லக்கூடிய அதீத திறமையுடன் இருந்தார்..! அவரது தாயும், தந்தையும் உயர்பதவிகளில் இருப்பதால் அது சாத்தியமானதா..? அல்லது அவருக்கு இறைவனின் கொடையா..? எனக்குத்தெரியாது. அவரது அந்த ஆற்றல் மீது, அதிக பொறாமை, எனக்கு இயல்பாகவே அந்த வயதில் வந்துவிட்டது..!

ஆன்மீகக் கதைகளை மூன்று மொழிகளிலும் கூறி என்னைக் கடுப்பேற்றுவார்..! அப்போது என்னால் ஒரு மொழியில் கூட ஒரு கதையை ஒழுங்காகச் சொல்ல முடியாது.

 

இலங்கையின் தலைநகரிலுள்ள மிகப்பெரிய பாடசாலைகளில் படித்ததால் அது சாத்தியப்பட்டதா..?

இல்லை மாமா மற்றும் மாமியின் அக்கறையால் வந்ததா..? இல்லை இயல்பாகவே தன்னை வளர்த்துக்கொண்டாரா என்பது எனக்கு இன்னமும் புரியவில்லை..!

 

இவ்வளவு திறமையான மச்சான், என்னைவிட ஆறு வயது குறைந்தவர்..! கொஞ்சக்காலம், வெளிநாடு ஒன்றில் வசித்து வந்தார். அதன்பின்னர் அவரது செயற்பாடுகள், அனைத்தும் மாறி சாதாரணமாக, என்னால் செய்யக்கூடிய விடயங்களைக் கூட, அவரால் செய்யமுடியாமல் தவித்தார். அவரது நிலையறிந்து, அதன் பின்னர்,  மச்சானைத் தம்பியாக்கிக்கொண்டேன்..! எப்படி இருக்க வேண்டியவன் இப்படி இருக்கின்றானே என வருந்தின நாட்களும் உண்டு..!  ஒரு காலத்தில் அவனைப் பார்த்துப் பொறாமைப்பட்ட நான், பின்னர் அவனைப் பார்த்து, அதிக வேதனைப்பட்டேன்.  சிறுவயதில், ஏற்பட்ட முரண்பாட்டில், அவனுக்குப் பலமாக அடித்ததை நினைத்து, எனக்குள் அழுதுகொண்டேன்.  எனக்கு, விவேகானந்தர், இராமனுஜம், பாரதியார் வரிசையில் வரவேண்டியன், ஒன்றுமே சாதிக்காமல் அவர்களது வயதில் மறைந்தது, இன்றுவரை தொடர் கவலையாகவே இருக்கின்றது..! ஒரு விதத்தில் அது தான், இயற்கையின் சரியான முடிவு என்றும் தோன்றுகின்றது..!

அவன் மறைந்து, சில வருடங்களின்  கழித்து இரண்டாவது மகள் பிறந்தார்..!

அவளின் செயற்பாடுகள், எனக்கு மறைந்த மச்சானையே நினைவிற்குக் கொண்டுவருகின்றன..!

இந்தப்பிரபஞ்சத்தில் இருந்து எதுவும் வெளியே செல்ல முடியாது..! எதுவும் உள்ளே வரமுடியாது..! அனைத்துப் படைப்புக்களும் இங்கு இருப்பவைகளை வைத்தே, இயற்கை செய்கின்றது..! உயிர்களும், அதனை உருவாக்கக் காரணமான மூலங்களும் இங்கேயே உள்ளன..! எல்லாம் எம்முடனேயே உள்ளது..! ஆக நிலை மட்டுமே மாறுகின்றது..! 

இறப்பு, இழப்பு என்ற ஒன்று பூமியைப் பொறுத்தமட்டில் இல்லை..! அதனுள்ளே இருப்பவர்களைப் பொறுத்த மட்டில்,  அவ்வாறு தோற்றலாம்..!

உயிர்களின் உருவாக்கங்களிலும், இயற்கை இவ்வாறான ஆச்சரியங்களைச் செய்துவிடும். இதற்கு சில காரணங்களும் இருக்கும். எம்மால் அவற்றை, இப்போது புரிய முடியாமல் போனாலும் இயற்கைக்கும், இறைவனுக்கும் அது புரியும்..! “ஏன் அவ்வாறு நடந்தது..?” என்பதற்கான பதிலும் தெரிந்தே இருக்கும்.  நமக்கு, அது புரியும் போது, இயற்கை எம்மை, அந்தப்புரிதலுடன் பயணிக்க அனுமதிக்குமா என்பதும் தெரியாது..!

ஆட்டுவிப்பவர்கள் அவர்கள்..! ஆடுபவர்கள் நாம்..!  இதனால் தான், “உலகமே நாடகமேடை..” என்கின்றோம்..!

 

ஆ.கெ.கோகிலன்

08-10-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

நம்பிக்கையீனம்..!

இயற்கை தந்த வலி..!