இணைய உதவிக்கூட்டம்..!
கொரோனா வந்ததும் முழு உலகமும் முடங்கியது..! தகவல் தொழில்நுட்பத்துறை
இதனை சரியான முறையில் பயன்படுத்தி புதிய வாழ்வியல் முறையைக் கண்டுபிடித்தது..! அதுவரை
அலுவலம் சென்று வந்தவர்கள், வீட்டிலிருந்தே வேலைசெய்யும் வாய்ப்பும் வந்தது..! இலங்கையில் கூட பல நிறுவனங்கள் இந்த முறைக்கு மாறினார்கள்..!
நாமும் மாறினோம்..! மாணவர்கள் வீடுகளில் இருந்தே படித்தார்கள்..! இப்படியான தகவல் தொழில்நுட்ப
சேவைகளுக்காக, பெரும்தொகைப் பணத்தை, செயலி தயாரிக்கும் மென்பொருள் நிறுவனங்கள் கோரின..!
இது மாத்திரமன்றி, கொரோனாவிற்கான மருந்துகள், சிகிச்சைகள்
எனவும் பெரும்தொகைப்பணத்தை மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் கோரின..! கொஞ்ச நாட்களில்
உலகின் பொருளாதாரங்களில் பாரிய ஏற்றத்தாழ்வுகள் வந்துவிட்டன..! பல நாடுகள் பொருளாதாரத்தில்
வீழ்ந்து இன்றுவரை தவித்துவருகின்றன..! அந்தவகையில் எமது நாடும் மாட்டிக்கொண்டது..!
தற்போது கொரோனாக்
காலம் கடந்தாலும், பொருளாதாரச்சிக்கல் தொடர்கின்றது. மக்களின் வாழ்க்கைத்தரம் கீழ்
இறங்கியுள்ளது. கொரோனாவிற்கு முன்னுள்ள சூழலுக்குப் போவது கடினமாகவே இருக்கின்றது.
சில நிறுவனங்கள் முயன்றாலும், முற்றாக வெற்றிபெற முடியவில்லை.
இவ்வாறான நிலையில் பொறியியல் துறைகளைக்கொண்ட மூன்று நிறுவனங்களின்
பிரச்சனைகளைத் தீர்க்கும் பொறுப்பை என்னிடம் தந்து, இணைய உதவியுடன் இம்மூன்று நிறுவனங்களின் பிரச்சனைகளைக் கண்டறிந்து,
தீர்க்க உதவும்படி பணிப்பாளர் நாயகத்தால் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இரண்டு அல்லது மூன்று மாதங்கள் ஒருவாறு தாக்குப்பிடித்து
சில விடயங்களைத் தீர்க்க முயன்றாலும், நிதி நிலமையும், ஊழியர் மனநிலைகளும் வேதனை அளிப்பதுடன் தீர்வை நோக்கி
நகர்த்துவதைத் தாமதப்படுத்துகின்றன..!
யாரும், அரசை மதிக்கும் நிலையில் தற்போது இல்லை. அரசு போடும்
திட்டங்களைக் குறையே கூறுகின்றார்கள். அது முற்றாகத் தவறும் அல்ல..! இருந்தாலும் அரசைக்குறை
கூறிக்கொண்டு எமக்குரிய கடமைகளைச் செய்யாது விட்டால் ஏற்படும் பாதிப்பும், நம்மை வந்தடையும்..!
அரசு வீழ்கின்றது என்றால் நாமும் விழுகின்றோம் என்பது தான் அர்த்தம்..! நாட்டையும், அரசையும் பாதிக்கும் செயல்களில் இறங்குவது,
எமக்கு நாமே தீவைப்பதைப் போன்றது..!
இன்று, பொறியியல் தொழில்நுட்பம் மற்றும் சேவைகளுக்கான இணைய
உதவிக்கூட்டம் நடைபெறும்போது, நான் பயன்படுத்திய இலவச ஜூம் செயலி போதிய வசதியைத் தரவில்லை.
மூன்றுமுறை தடங்கலைச்சந்தித்தே ஒருவாறு கூட்டத்தின் முடிவைப் பெறக்கூடியதாக இருந்தது.
இது அனைத்து அங்கத்தவர்களுக்கும் அசௌகரியமாக
இருந்திருக்கும். என்ன செய்வது..? வளமான நாட்டு நிறுவனங்கள் போல் செயற்பட நினைப்பது,
தற்போது சாத்தியப்படக்கூடியது அல்ல..!
நோய் இருந்த காலத்தில், அறிமுகப்படுத்தப்பட்ட விடயங்கள்,
தற்போது முழு வியாபாரமாக்கப்பட்ட நிலையில், பாரிய பொருளாதாரத்தை செலவழிக்கவேண்டிய சூழல்,
அரசிற்கு ஏற்படுகின்றது..!
இலவசமாகத் தந்து, பழக்கப்படுத்தும் விடயங்கள், பின்னர் பணத்தை
இழக்கும் போதையான விடயங்களாக மாறுவது வேதனையளிக்கின்றது. மக்கள் விழிப்பாக இருந்து,
தமக்குப் பொருத்தமான விடயங்களில் மட்டும் ஈடுபடவேண்டும். தேவையற்ற நவீனத்தை நினைப்பது
கூட, தவறான சூழ்நிலைக்குள் கொண்டுசென்றுவிடும்
அபாயம், உலகெங்கும் உண்டு..!
ஆ.கெ.கோகிலன்
07-10-2023.
கருத்துகள்
கருத்துரையிடுக