கணவர் புலம்பல்..!
நான் பல மரணவீடுகளுக்குப் போயுள்ளேன். ஆனால் அங்கே அழுபவர்கள்
அதிகம் பெண்கள் தான். இன்றும் வேலைக்கு போகாமல் லீவு எடுத்து எமக்குச் சொந்தமான ஒரு
பெண் மருத்துவரின் மரண வீட்டிற்குச் சென்றேன்.
அங்கே பல ஆண்கள், அதுவும் இளைஞர்கள் அழுதுகொண்டிருந்தார்கள்..! அப்போது தான்,
புரிந்தது அந்த இறந்த பெண் மருத்துவர் எவ்வளது தூரம் அன்பாக இருந்துள்ளார் என்பது..!
எனது மனைவியின் ஊரைச் சேர்ந்தவரும், உறவினருமான அவர், நாம்
திருகோணமலையில் இருந்த காலத்தில் எமது வீட்டிற்கும் வந்துள்ளார். நாமும் அவர்கள் வீட்டிற்குச்
சென்றுள்ளோம். இருந்தாலும் நான் அவர்களுடன் அதிகம் பழகவில்லை. ஒரு சிரிப்புடன் அல்லது
புன்முறுவலுடன் நகர்ந்து செல்வதே வழமை. அந்த
மருத்துவர் சில சமயம் சிரித்துக்கொண்டு கதைத்தாலும் நானும் வெட்கப்பட்டு விலத்திவிடுவேன்.
பொதுவாக மருத்துவர்கள் என்றால் எனக்குக் கொஞ்சம் அலர்ஜி..! என்னைச் சுற்றி உறவினர்களில்
பல மருத்துவர்கள் இருந்தாலும் எனது காலமான மருத்துவரான மாமியையும், எனது மருத்துவ நண்பரையும்
தவிர வேறுமருத்துவர்களுடன் பழகுவதே குறைவு என்று தான் சொல்ல வேண்டும். அது, மருத்துவமனைகள்
போகாமல் இருப்பதற்கு ஒரு காரணம்.
பொதுவாக மருத்துவ நண்பரும் என்னைப் பார்த்துவிட்டு உனக்கு
ஒரு வருத்தமும் வராது என்பார்..! அத்துடன் சரி..! மருத்துவர்களை அணுகுவதுமில்லை..!
அணுகவிடுவதுமில்லை..!
இன்றைய மரணவீட்டில் பல மருத்துவர்கள் இருந்தார்கள். அவர்களை நான் அவ்வளவாகக் கண்டுக்கவில்லை. எனக்கு
மருத்துவமும், அதன் பின்னாலுள்ள மருத்துவ வியாபாரத்திலும் அதிக பயமுண்டு..!
தூரத்தில் இருந்தபடியே மரணவீட்டு நிகழ்வுகளை அவதானித்தேன்.
அந்த இறந்த பெண் மருத்துவர், ஒரு உண்மையான மருத்துவராக இருந்துள்ளார்
என்பதை ஊரே அழுததை வைத்து மேலும் உறுதிப்படுத்திக்கொண்டேன். அவரது இரு வளர்ந்த ஆண் பிள்ளைகளும், கணவரும் நினைத்து நினைத்து அழுதார்கள்..! 64 வயது வரை வாழ்ந்தாலே போதும் என்று நினைப்பவன்
நான். ஆனால் இறந்தவருக்கு வயது 68 இருக்கும். இருந்தாலும் இன்றைய காலத்தில் சதமடிப்பவர்கள்
பலர் இருக்க, படுத்த படுக்கையிலே பல காலம் நோயுடன் தவிப்பவர்கள் பலர் இருக்க, ஆரோக்கியமாக இருந்த மருத்துவர் மறைந்தது,
உண்மையில் கவலை தான்.
கிரிகைகள் முடிந்து, இரங்கல் உரைகளுடன் ஆறுதிருமுகனின் சிறப்பு
இரங்கல் உரையும் இருந்தது. “அவர் என்ன சொன்னார்..?” என்பதை கவனிக்கக்கூடிய தூரத்தில்
நான் இருக்கவில்லை. இயற்கையின் சேவையையும்
தேவையையும் தன்னால் இயன்றவரை உணர்த்தியிருப்பார் என நம்புகின்றேன்.
செத்தவீடு என்றால் பறைமேளமும், பாண்ட் வாத்தியமும் இன்றைய
காலத்தில் தவிர்க்க முடியாதவை. அத்துடன் வெடிகளும் சேர்க்கவேண்டியவை. இந்த மரணவீட்டு வீதி ஊர்வலத்தில் வாத்தியங்கள் தவிர்க்கப்பட்டன.
ஆனால் வழமைபோல் வெடிகள் இருந்தன. அத்துடன் வைரமுத்துவின் “ஜென்மம் நிறைந்தது சென்றவர்
வாழ்க..” எனத்தொடங்கும் சமகால மரணகீதத்துடன் சுடலை செல்லும் வரை பூக்கள் தூவி, ஓரளவிற்கு
அமைதியாகச்சென்றது பார்க்கவும், கேட்கவும் நன்றாக இருந்தது..!
சில மரபுகளை மாற்றும்போது, சில தொழில்கள் முடங்குவதையும்,
அதனை நம்பி வாழும் குடும்பங்கள் தவிப்பதை அறிந்தாலும், புதுமைகள் காலத்தின் தேவை என்றே
பார்க்கத்தோன்றுகின்றது. எனது மனைவியின் தந்தை மரணத்திலும் பறைமேளம் மற்றும் பாண்ட் தவிர்க்கப்பட்டன. அது கொரோனாக்காலம் என்பதால் மரணகீதம் மாத்திரம்
வீதிவழியே ஒலிக்கவிடப்பட்டது.
இறுதியாகச் சுடலையில், பெருமைமிக்க வாழ்வு வாழ்ந்த அந்த இறந்த
மருத்துரான பெண்ணின் ஆபரணங்கள் அகற்றிய காட்சி,
அவர் நன்றாக வாழ்ந்துள்ளார் என்பதை அவர் அணிந்திருந்த நகைகள் நமக்கு காட்டின..! அவற்றை
அகற்ற இருநபர்கள் உதவினார்கள்..! அவ்வளவு நகைகள்..! திருடர்கள் கண் பட்டால் ஆபத்துத்தான்..!
அதன் பின்னர் வாய்க்கு அரிசியைப்போட்டு கொள்ளிப்பானையைச் சுமந்து, இறுதிக்கிரிகைகள்
நடந்தன.
அந்த சமயத்தில் நெஞ்சான் கட்டை வைப்பதற்கு, “மச்சான்“ முறையான நபரையே கேட்டுக்கொண்டார்கள். அது தான் முறையா என்பது
எனக்குத் தெரியாது. யாரோ மச்சான் முறையானவர் நெஞ்சான் கட்டையை வைத்தார். அவ்வாறாக
அனைத்தும் நன்றாகவே நடந்தன. பிள்ளைகளும், உறவுகளும் கதற, எதிர்பாராமல் ஒரு பெண்ணும்
அந்த இடத்தில் வந்து அழுதார்..! இவரால் உதவி
பெற்றவரா அல்லது உறவினரா என்பது தெரியவில்லை. ஆனால் அது வித்தியாசமாக இருந்தது..! இறுதியாகக்
கணவர் சொல்லிச்சொல்லி அழுதது என்னையும் கலங்கடித்துவிட்டது. “இரவு ஒரு மணி என்றாலும், எழுப்பிச்சாப்பாடு தருவியே..இனி
யார் தருவார்..? இருபிள்ளைகளையும் யார் கவனிப்பார்..? நீதான் இறைவனாய் இருந்து எம்மைக்காத்து அருளு தாயீ..!”
என்று கணவரின் கலக்கம் எனது கண்களிலும் கண்ணீரை வரவழைத்துவிட்டது..!
பொதுவாக அழுவதைக் காட்ட ஆண்கள் விரும்ப மாட்டார்கள்..! இருந்தாலும்
சில இழப்புக்கள் பாறைகளையும் நொருக்கிவிடும் என்பதற்கு இக்காட்சி ஒரு சாட்சி..!
இங்கு இந்தக்கணவன் மனைவி இருவரும் இரண்டாம் தாரம் திருமணம்
செய்தவர்கள்..! முதல் திருமண வாழ்க்கையில் துணைகள் தவறியதால், மற்றைய குடும்ப அங்கத்தவர்களின்
தூண்டலால் இணைந்த தம்பதிகள் இவர்கள்..! இறுதிவரை உண்மையாக இருந்து ஒருவர் விடைபெற மற்றவர்
விழிநீர் சொரியப் பார்ப்பது புதுமையான வேதனையாக இருந்தது..!
சரியான ஜோடி பிரிந்தால் ஏற்படும் வேதனையை, இன்னொரு கோணத்தில்
பார்க்கக்கிடைத்ததற்கு இயற்கைக்கு நன்றி கூறி, சிறிய என்னால் முடிந்த ஒரு சேவையுடன் வீடுவந்து,
வழமைக்கு மாறினேன்.
ஆ.கெ.கோகிலன்
03-10-2023.
கருத்துகள்
கருத்துரையிடுக