பிரதம விருந்துனர்..!


 


ஒரு குறித்த இடத்தில் இருந்து, தொலைபேசி அழைப்பு பல முறை வந்துள்ளது. நான் வேலைப் பிராக்கில் கவனிக்கவில்லை. குறிப்பாக  லீவு நாட்களில், தெரியாத எண்களில் இருந்து அழைப்பு வந்தால், அவற்றை எடுப்பது மிகக்குறைவு.  அவை பொதுவாக அலுவலகம் சார்ந்தவையாகவே இருக்கும். சில சமயம், வீட்டில் செய்யும் வேலைகளுக்கு அவை இடையூறாக இருக்கும். போதிய நேரம் இருந்தால், அவ்வாறான அழைப்புக்களை ஏற்பதுண்டு.

அவ்வாறாக ஒரு அழைப்பு..!  அது, எனது தாயாரின் வீட்டுக்கு அருகிலுள்ள ஒரு சனசமூக நிலையத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட சிறுவர்தின நிகழ்வுக்கு பிரதம விருந்துனராக வரச்சம்மதம் கேட்டார்கள்..!

இன்னும் சில வாரங்களில் இடமாற்றங்கள் வந்தால், பின்னர் ஊரில் இருக்கும் வாய்ப்பு குறைந்துவிடும் என்ற எண்ணத்தில் சம்மதித்துவிட்டேன்.

என்னை அழைத்தவரும் எனக்குத் தம்பி முறையான ஒரு உறவினர் தான். நிராகரிக்க எந்தக்காரணமும் இல்லை. பின்னர் அதற்கான தயார்படுத்தல்களைச் செய்து, அவற்றை இலத்திரனியல் பதிப்பாக மாற்றி, எனது கையடக்க அலைபேசியில் அடைத்துவிட்டேன்.

மாலை, குறித்த நேரத்தில் நிகழ்வுகள் தொடங்கும் போது தான் தெரிந்தன இன்று யாரைநோக்கிப் பேசுவது என்று..! அனைத்தும் சிறு மழலைகள்..! ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள்.  அவர்களுக்கு என்ன ஆலோசனைகளை வழங்குவது..? ஒருவாறு சமாளித்து, நிகழ்வுகளை தொடக்கி, எனது பேச்சு வர, பெற்றோர்களையும், முதியோர்களையும் வாழ்த்தி, அவர்களுக்கு முதியோர் தின வாழ்த்துக்கள் சொல்லி, பெற்றோர்களுக்கு பிள்ளை வளர்ப்பது தொடர்பாகவும், வியாபாரக்கல்வி முறை தொடர்பாகவும் சொல்லி, விரும்பிப்படிக்க விடுமாறு கேட்டுக்கொண்டு, வீட்டுக்கு அருகிலுள்ள  அயல்பாடசாலைகளைப் பயன்படுத்தக் கேட்டுக்கொண்டேன்.

மழலை ஆசிரியர் தொழிலே மிகவும் கஷ்டமான தொழில்..! அதனைச் சரியாகச் செய்தால், ஒரு பிள்ளை எந்த உச்சத்திற்கும் போக முடியும் என்று சொல்லி, ஆசிரியர்களையும், மாணவர்களையும் வாழ்த்தி, அந்த ஊர் ஆலயம் என்னையும் வாழ வைக்கக்காரணமானது  என்று சொல்லி, அந்த இறைவனது ஆசியையும் வேண்டி விடைபெற்றுக்கொண்டேன்.

பேச்சு முடிந்ததும் சிலர் பேச்சு நல்லாக இருந்தது என்றார்கள். சிலர் மௌனமாக இருந்தார்கள்.  பேச்சு நன்றாக இருந்தால் என்ன..? இல்லாவிட்டால் என்ன..? சொன்ன விடயம் உண்மையானது. கேட்டு நடந்தால் நிச்சயம், அவர்களது வாழ்க்கை செழிக்கும் என்பது என் எண்ணம்.

மேலும் குழந்தைகளுக்கு பரிசில்கள் வழங்கி, படமெடுத்து விடைபெற்றேன். இங்குள்ள, எமது மக்கள் வெளிநாடுகளுக்குச் சென்று, பணம் சம்பாதித்து, ஊருக்கு உதவுவதைப் பார்க்க மனதிற்கு மிக நிறைவாக இருந்தது. அவர்களுக்கும், தனிபட்ட ரீதியில் கைகுலுக்கிப் பாராட்டி மகிழ்ந்தேன்.  நல்ல மனிதர்களைப் பார்க்கும்போது, இறைவனுக்கு நன்றி சொல்லத்தோன்றுகின்றது. இதுவரை காலமும் ஊர் மதிக்கக்கூடிய வகையில் நான் இருக்கவில்லை..! ஏறக்குறைய 55ஐ நெருங்கவே, அது நடக்கின்றது. 40 வயதுவரை  முறைசார்ந்து படித்தாலும், அதன் பிறகுள்ள அனுபவப்படிப்பு, நன்றாக என்னைப் பதப்படுத்தியுள்ளது என நம்புகின்றேன். எப்படியென்றாலும் மரணம் வரை முறைசாராது படித்தே ஆகவேண்டும். சிலர் தொடர்ந்து படித்துப் பட்டங்களாக அடிக்கிக்கொள்ளலாம்..! சிலர் தாமே, புத்தகங்களாக மாறிக்கொள்ளலாம்..!

 

ஆ.கெ.கோகிலன்

01-10-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நம்பிக்கையீனம்..!