மரண பீதி..!
நேற்று ஈஸ்ரேலிற்கும் பாலஸ்தீன ஹமாஸ் போராளிகளுக்குமான உக்கிரமான
போர் தொடங்கி, உலகெங்கும் பீதியை கிளப்பி வருகின்றது. இரு பகுதிகளிலும் அதிக மரணங்கள்
பதிவாகியுள்ளன..! இன்னும் உக்கிரமாகப் போர் நடைபெறுவதால் உண்மையான இறப்பு எண்ணிக்கைகளைக்
கூறுவது கடினம்.
இது இவ்வாறு இருக்க, உக்கிரேன்-ரஷ்யா யுத்தமும் நீண்டுகொண்டே
செல்கின்றது..! மேற்குலக நாடுகள் மறைமுகமாக உக்கிரேனுக்கு உதவி செய்வதாகக் கூறி ரஷ்யாவுடன்
சண்டை போடுகின்றது. ரஷ்யாவிற்கும் இது புரிந்து
தான் இருக்கின்றது..! இந்தியாவும், மேற்குலக நாடுகளுக்கு ஆதரவாக செயற்படுவதால், நிச்சயம்
சீனா எதிரான நிலைப்பாட்டை தான் எடுக்கும்.
உலகில் பெரும்பாலான கிறிஸ்தவ நாடுகளும், யுத
நாடுகளும் ஒரு பக்கம் வர, மீதமுள்ள முஸ்லீம் நாடுகள் விரும்பியோ அல்லது விரும்பாமலோ
ரஷ்யா மற்றும் சீனாவுடன் கூட்டுச்சேரவேண்டிய சூழல் தோன்றுகின்றது..! இதனால் 3வது உலகப்போர்
வந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை..!
இப்படியாக உலக அரசியல் சூழல் யுத்தமேகங்களால் மூடியிருக்க, அண்மையில்
எமது உறவுகள் மூன்று பேர் இறந்துவிட்டார்கள்..!
அவர்கள் மூவரையும் இன்று ஒரே சுடலையில் அடக்கம் செய்யவேண்டிய சூழல்..! முதலில் மிகவும் கிட்டிய உறவினரின் மரணவீட்டிற்குப்
போவதாக நானும், மனைவியும் வெளிக்கிட்டுச் சென்று மரணக்கிரிகைகளில் கலந்துகொண்டதுடன்
மனைவி வீடு திரும்ப, நான் மூன்றையும் ஒருவாறு
பார்த்தும், சுடலைவரை சென்றும், சில மணி நேரத்தைச் சுடலையில் ஞானத்தைத்தேடிக் கதைத்தும்
பொழுதைப் பயனாக்கினேன்..! உறவுகளின் மரணவீடுகளைத் தவிர்க்க முடியாது. எமது வழமையான
கடமைகளைப் போல் அவற்றைச் செய்துமுடிக்க வேண்டும். நாம் கடமையாகக் கருதவில்லை என்றால்,
எமக்கு நடக்கும் போதும், ஒருவரும் அதனைக்கடமையாகக் கருதமாட்டார்கள். வாழ்க்கையே கொடுப்பதும்,
பெறுவதும் தான்..!
சிறுவயதில் பெற்றோர்கள் நமக்கு கொடுத்தார்கள்..! அவர்கள்
முதியவர்கள் ஆனதும் நாம் அவர்களுக்கு கொடுக்கின்றோம்..! அதேபோல் சின்ன வயதில் நாம்
பலரிடம் வாங்கினோம். வளர்ந்தபின் அவர்களுக்கு திருப்பிக் கொடுக்கின்றோம். கணக்கியல் பாடம் என்றால், வாழ்க்கை எனலாம்..! அங்கும் கொடுக்கல், வாங்கல் தான்..! அதனால் தான்
வாழ்க்கைக்கு இப்படியொரு வரையறையை வைத்தேன்..! நான் மாத்திரமல்ல..! என்னுடன் வேலைசெய்து ஓய்வுபெற்ற ஒரு கணக்கியல்துறை விரிவுரையாளர் கூட அப்படித்தான் சொல்வார்..!
ஆ.கெ.கோகிலன்
08-10-2023.
கருத்துகள்
கருத்துரையிடுக