புதிய நாள்.. மகிழ்வான செய்தி..!

 


 

இன்று முதல்  அடுத்த ஞாயிறு வரை எமது மாணவர்களுக்கு இடைத்தவணை விடுதலை  (Mid Semester Vacation) விடப்பட்டுள்ளது. ஏற்கனவே படித்து, முடித்தமாணவர்களுக்கு பட்டமளிப்பு (18th Convocation) இந்த வாரக்கடைசியில் நடைபெற இருக்கின்றது..! ஊழியர்கள் அது தொடர்பான வேலைகளில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டுள்ளனர்..! ஏனையவர்கள் ஒப்படை, இடைத்தவணைப்பரீட்சை, விடைதாள் திருத்தல், அது தொடர்பான இறுதிப்புள்ளிகளைத் தீர்மானித்தல், போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபட்டுக்கொண்டுள்ளனர்.

இவ்வாறு எல்லோரும், சுறு சுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்க, யாழ்ப்பாண மாவட்டத்தில் கண்நோய் தொற்றும் அதிகரித்துக்கொண்டு வரும் இந்த சூழலில், எமது ஊழியர்களும் மாணவர்களும் இதனால் பாதிக்கப்பட்டு அவதியுறுகின்ற வேளை, பருவமழை வரத்தொடங்கியுள்ளது..!

 அத்துடன் நேற்று முதல் நவராத்திரிப்பூஜையும் தொடங்கியுள்ளது. நேற்றைய பூஜை எமது நிறுவன நலன்புரிச்சங்கத்தினால் (Jaffna ATI Staff Welfare Society -JATISWS) நடாத்தப்பட்டது. என்னால், ஆசையிருந்தும், தூரம் காரணமாகப் போகமுடியவில்லை.  நேற்றுப்போக முதலில் நினைத்தேன். பின்னர், நேற்றுக்காலை வந்த கடும்மழையால் முடிவை மாற்றிவிட்டேன். நேற்றுடன் பணிப்பாளர் சேவையில் இணைந்து சரியாக ஆறுவருடங்களைப் பூர்த்திசெய்துவிட்டேன்..!  இருந்தாலும் இந்த ஆறுவருடத்தில் என்ன சாதனை செய்தேன்..? எனசிந்திக்கும் போது பொதுவாகச் சொல்லிக்கொள்ள ஒன்றும் இருக்கவில்லை. எல்லாம் அப்படி அப்படியே இருந்தன..! மாற்றங்கள் பெரிய அளவில் தென்படவில்லை.  அலுவலகக்காணிப்பிரச்சனை அவ்வாறே இருந்தது..!  சிற்றூண்டிச்சாலை பிரச்சனை இழுபட்டுக்கொண்டே வருகின்றது..! இடப்பிரச்சனையைத் தீர்க்க, கட்டடம் கட்ட முயன்று, “தற்போது வருமா..?” என்ற நிலையில் இருக்கின்றது..! சில கற்கைநெறிகளை “நடாத்த முடியுமா..?” என்ற கேள்விகளும் எழுகின்றன..!

தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் போட்டிக்கு வந்துள்ளன..! அதிக பணத்தைக் கறந்து, உலக தரமான கல்வியை வழங்குவதாகச் சொல்கின்றார்கள்..! மாணவர்களும், தற்போதைய பெற்றோரும் அதையே நம்புகின்றார்கள்..! கல்வியே வியாபாரப் பண்டமாகவும், தொழிற்சந்தைக்கு செல்ல உதவும் நுழைவுச்சீட்டாகவும் கருதப்படுவதால், பெரும்பாலானோர்  அந்தத்திசையிலேயே பயணிக்கின்றார்கள்..!

இந்த  அபாயகரமான சூழலில் நாமும் மாட்டிக்கொண்டோம்..!  இருந்தாலும், முயன்று முன்னேறுவதற்கு, உதவ எமது நிறுவனத்தையும், எம்மையும் நம்மிப் பல வசதி வாய்ப்புக்கள் குறைந்த மாணவர்கள்  வந்துள்ளார்கள்..! அவர்களை மேலே தூக்குவதே எமக்குத் தரப்பட்டுள்ள  தலையாய கடமை.  அப்படியான மாணவர்களில் கணக்கியல் துறை மாணவர்கள் மட்டும், இன்றைக்கு இரண்டாம் நாள் பூஜை செய்ய வந்திருந்தார்கள்..! எல்லோரும் அழகாக, கலாசார உடைகளில் வந்து எம்மை  அசத்தினார்கள்..!

இந்தச் சூழலில்  ஒரு மாணவி, “யாரோ கைச்சங்கிலியைத் தவறவிட்டுள்ளார்..!” என்று என்னிடம்  கைச்சங்கிலியைத் தந்தார்..! அவரது பெயர், வகுப்பு, சேர்விலக்கம் என்பவற்றை எடுத்துக்கொண்டு, அவருக்கு நன்றி சொல்லியதுடன், அவரது குணத்தைப் பாராட்டி அனுப்பி வைத்தேன். அத்துடன், கொஞ்ச நாள் வைத்துப் பார்ப்பேன்..! ஒருவரும் வரவில்லை என்றால் அதனை உமக்கே தருவேன் என்று சொல்ல, சிரித்துக்கொண்டு, எனக்கு வேண்டாம், ATIஇற்குப் பயன்படுத்துங்கோ  சேர் என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்..! பின்னர் ஒரு பேப்பரால் அதனைச்சுற்றி,  தேவையான தகவல்களையும் அதில் குறித்து, செலோரேப்பால் (sellotape) சுற்றி ஒட்டி எனது தனிப்பட்ட அலுமாரியில் (Alumari) வைத்துப்பூட்டினேன்.  வைத்த இடத்தை மறக்கக்கூடாது என்பதற்காக ஒரு நினைவு படுத்தலையும் குறித்துக்கொண்டேன்..!

இதே மாதிரிச் சூழல் சில வருடங்களுக்கு முன்னர் வந்தது..! ஏறக்குறைய ஒரு வருடத்திற்குப் பிறகு,  தொலைத்த  நகையைத் தேடி ஒருவர் வர, சரியான  விசாரணைகள் ஊடாக அவரையும் நகையையும் உறுதிப்படுத்தி, அந்நபரிடம் அதனை ஒப்படைத்தேன்..!  

அதேபோல்,  இந்தமுறை எப்ப வரப்போகின்றார்களோ..? என எண்ணியபடி அடுத்தவேலைக்குச் செல்ல, இன்னோர் பெண் தனது நகையைக்காணவில்லை என்று வந்தார்..!

இன்று, ஒரு துறையைச் சார்ந்தவர்களே சமூகமளித்திருந்தார்கள்..! இருந்தாலும், ஒருவர் எடுத்துக்கொண்டுவந்து தந்துள்ளார்..! இன்னோருவர் தொலைத்துள்ளார்..! வகுப்புகளுக்குள் தொடர்பாடல்கள் குறைந்துவிட்டனவோ..? 

மாணவர்களுக்கு இடையேயான தொடர்பாடல்களை, போன்கள் நிரப்பியுள்ளன போலும்..! 

பராவாயில்லை..! பிள்ளைகள் தவறுகள் செய்யவில்லை. சரியான முறையிலே செயற்பட்டுள்ளார்கள்..!

நகைகேட்டு வந்தவரிடம் போதிய விசாரணைகளை மேற்கொண்டு, தெளிவாக அவருடைய நகை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, அவரிடம் கொடுத்ததுடன்,  இந்தக்கஷ்டமான காலத்தில் கீழே கிடந்த நகையை தனது பைக்குள் போடாமல், கொண்டுவந்து தந்த பிள்ளையை பாராட்டி நன்றி சொல்லும்படி, அவருடைய விபரங்களைக் கொடுத்து அனுப்பினேன்.

இன்று, பணிப்பாளராக அடுத்த  புதிய வருடத்திற்குள் காலடி எடுத்து வைத்ததால், பல நல்ல விடயங்கள் இயல்பாக நடந்தன..!  அதில் குறிப்பிடக்கூடிய விடயம் காணிப்பிரச்சனை தொடர்பான நீதிமன்ற வழக்கு முடிவுக்கு வந்தது..!   அந்தக்காணிக்குள் குறையாக இருக்கும் கட்டிடங்களைத் திருத்தி, நாம் எமது மாணவர்களுக்காகப் பயன்படுத்தலாம்.  அத்துடன் சாத்தியப்படுமாயின்  இடைநிறுத்தப்பட்ட புதிய கட்டடத்திற்கான வேலைகளைத் தொடர முயற்சிக்கலாம்..!

இவ்வாறான மகிழ்ச்சிச் செய்திகளுடன், முதலாம் வருடக் கணக்கியல் துறை மாணவர்களின் மதிய துர்க்கா பூஜை சிறப்பாக நடந்து, “பஞ்சாமிர்தம், வடை, அவல், சுண்டல், சக்கரைப்பொங்கல்..!” என பிரசாதத்தை எமக்கு அளித்தார்கள்.

தற்போதைய மாணவர்கள் என்னைப்பொறுத்தவரை இளவயதுக் குழந்தைகள்..!  தெய்வங்களுக்கு ஒப்பானவர்கள்..!  அவர்களின்  எமக்கான படையல், இறைவனே இறங்கி வந்து, எமக்கு அளித்தது போன்று மனமகிழ்ந்தேன்..!

 

ஆ.கெ.கோகிலன்

16-10-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

நம்பிக்கையீனம்..!

இயற்கை தந்த வலி..!