தாயின் மனநிலை..!
ஒரு குடும்பத்தில் தாய், தந்தை மற்றும் இரண்டு பெண் பிள்ளைகள்
என மிகச்சந்தோசமாக இருந்தார்கள். தந்தையார் எல்லா விடயத்தையும் தாயிடமே விட்டுவிட்டார்..!
தாய் செய்யும் ஒவ்வொரு காரியங்களுக்கும் உதவியாக இருப்பதே, அவரின் கடமையாக இருக்கின்றது..!
அதே நேரம் பிள்ளைகளையும், தத்தமது கால்களில் நிற்பதற்கு, எப்பவுமே தன்னம்பிக்கையான
சம்பவங்களையும், கதைகளையும் சொல்லி, அவர்களின் மனங்களை திடப்படுத்துவார்..!
இருவரின் இவ்வாறான கவனிப்பால் பிள்ளைகள் நன்றாக வளர்ந்தார்கள்.
நல்ல பதவி நிலைக்கும் வந்தார்கள்..! அதற்கு ஏற்ப தங்களுக்குரிய வாழ்க்கையையும், அதற்கேற்ற
துணையையும் தெரிய முயன்றார்கள்..! தந்தை அதற்குப் பெரும் உறுதுணையாகவே இருந்தார்..!
தாயாரும் உறுதுணையாக இருப்பது போல் தான் இருந்தார்..!
இருபெண்களும் தமக்குப்பிடித்த வாழ்க்கைத்துணையுடன் வீட்டிற்கு
வந்தார்கள். தந்தையார் அவர்களைப் பாராட்டி, அந்த மருமக்களுடனும் அன்பாகப் பழகினார்..!
முயன்றும், தாயாரால் அவர்களுடன் அன்பாகப் பழக முடியவில்லை.
சிறுவயதில் இருந்தே, தனது கணவரை விட பிள்ளைகளே தன்கூட இருப்பார்கள் என்று நினைத்தவர்,
தற்போது பிள்ளைகள் தங்கள் வழியில் செல்வதை நினைக்க, அவரது உள்மனதால் ஏற்க முடியவில்லை..! இதனை
தவிர்க்க, மறக்க நினைத்தார்..! முடியவில்லை.
அவருக்கு நித்திரையும் வரவில்லை.
பிள்ளைகளுக்காகவும், தனது தாய் மற்றும் தந்தைக்காகவும் தனது
வாழ்க்கையைத் தியாகம் பண்ணி, எவ்வளவோ நல்ல விடயங்களை இவர்களுக்குப் பண்ணினேன். தன்னை
ஒரு பொருட்டாக பிள்ளைகளும், கணவரும், புதிதாக வந்த மாப்பிள்ளைகளும் கவனிக்கவில்லை என்ற
ஆத்திரத்தில், வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தார். பின்னர், தான் என்ன பிழை செய்தேன்..?
என்ற கேள்வியால், சுதாகரித்துக்கொண்டு, பிழை செய்தவர்களுக்கு தான் தண்டனை கொடுக்க வேண்டும்
என எண்ணிக்கொண்டார்..! தனது 70 வருட வாழ்க்கையை அவர்களுக்காக அர்ப்பணிக்க, எல்லோரும்
தன்னை ஒரு முட்டாளாக நினைத்துவிட்டார்களே என வேதனைப்பட்டார்..! இவர்களை எப்படியாவது பழிவாங்க நினைத்தார்..! இதுவரை அன்பின் உருவமாக
இருந்த தாய், குடும்பத்தவர்களின் துரோகத்தாலும், தன்னை மதிக்காமல் இருப்பதாலும், அவர்களைப்
பழிவாங்க ஒரு விருந்துக்கு, எல்லோரையும் அழைத்தார். எல்லோருடனும் அன்பாகப் பழகி, தான்
செய்த உணவுகளை பரிமாறினார். பிள்ளைகளும் வழமைபோல் தாய் தரும் உணவுகளை உண்டுகொண்டு,
தமது பம்பலில் இருந்தார்கள்..! கணவரும் கூடச் சிரித்துக்கொண்டு அவர்களுடன் கலந்து மகிழ்ந்தார்.
இவற்றைப் பார்த்துப் பொறுக்க முடியாமல், தாயார், தான் வாங்கிய விஷத்தை ஒரு ஊசியில்
ஏற்றி, முதலில் கணவருக்கும், பின்னர் பிள்ளைகளுக்கும், அதன் பின்னர் மருமக்களுக்கும்
ஏற்றிவிட்டு, தனது அறைக்குச் சென்று, பெரு மூச்சுடன், இன்றைக்கு நிம்மதியாக நித்திரை
கொள்ளப்போகின்றேன் என படுக்கையில் விழுந்தார்..!
கணவரும், பிள்ளைகளும் மற்றும் மருமக்களும் ஒன்றொன்றாக விழுந்து மயங்கினார்கள்.
நாட்கள் நகர்ந்தன..! விழுந்தவர்கள் எழவில்லை..! படுக்கையில்
விழுந்த தாயார் மனநல மருத்துவ மனையில் அடைக்கப்பட்டு, சிகிச்சை அவருக்கு அளிக்கப்படுகின்றது..!
செய்த தியாகங்களுக்குப் போதிய மதிப்பு கிடைக்காதபோதும், எதிர்பார்ப்பு
ஏமாற்றமாகும்போதும் ஏற்படும் மனக்குழப்பம், ஒரு தாயையே குடும்பத்தை அழிக்கும் பாவியாக்கி, தனிமையுடன் மீதிக்காலத்தை கழிக்கும் சூழலில் சிக்கிக்கொண்டார்..!
இவற்றையெல்லாம் நித்திரையில்
பார்த்தவள் “அம்மா..!” என்று அலறியபடி எழுந்தாள்..! பொறுமையில்லாமல், தாய்க்கும், எனக்கும் ஓடிவந்து பார்த்த
அந்தக் கனவு பற்றி மகளே கூறினாள்..! நாமும் அதனைக் கேட்டு மௌனமாகக் கடந்துசென்றோம்.
மேலும் மகளுக்கு விபூதி பூசிக்கொண்டு நித்திரைக்குப் போ என்றேன்..!
ஆ.கே.கோகிலன்
08-10-2023.
கருத்துகள்
கருத்துரையிடுக