கண் நோய்..!
கடும் வெப்பம் நிலவிய எமது பிரதேசத்தில் தற்போது தான் மழை
பெய்கின்றது. இந்தக்காலகட்டத்தில் பலருக்கு
கண் சிவந்தும், அதற்குள் இருந்து, நீர் வழிந்தும், வெள்ளைநிற களி நிரம்பியும் இருப்பதைப் பார்க்க எனக்கு மிகக்கடினமாக இருக்கும். இருந்தாலும், சிலர்
நோயின் தாக்கம் மற்றும் பரவல் பற்றிய அறிவு இல்லாமல் உலாவுவதையும் ஆட்களுடன் கதைப்பதையும்
காணும் போது கவலையாக இருக்கும்.
அவ்வாறான நபர்கள் எமது அலுவலகத்திலும் இருந்தார்கள்..! சிலருக்கு,
பொறுக்க முடியாமல் நானே வாய் திறந்து, நோயை
மாற்றிவிட்டு வாருங்கள் என்று சொல்லியுள்ளேன்..!
சில நேரம், நோய் இருந்தாலும் வேலைக்கு லீவு எடுக்க மனம் இல்லாமல் இருப்பவர்களும்
உண்டு..! ஆனாலும், அப்படியான நபர்களின் அதீத அரச வீசுவாசம், சில நாட்களில் அலுவலகத்தையே
மூடவைக்கும் என்பது பற்றிய அறிவு இருந்தால், ”எவ்வாறு நடக்க வேண்டும்..?” என்ற தெளிவு
கிடைக்கும்.
இதே நிலமை வீட்டிலும் இருக்கின்றது. எனது மாமியார், அடிக்கடி
மருத்துவமனை செய்து உடலைப் பரிசோதிப்பதும், கண்ணைப் பரிசோதிப்பதும் நடந்துவருகின்றது.
அதனைக்குறையாகச் சொல்ல முடியாது..! அவரவர்களுக்கு வந்தால் தான் அதைப்பற்றிச் சொல்ல
முடியும்.
ஆனால் அடிக்கடி மருத்துவமனைகளுக்குப் போவதென்றால் மிகக் கவனமாக
இருக்க வேண்டும். நோய் தொற்றுகள் அதிகம் ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு. கடுமையான, வைத்தியரின்
உதவி தேவை என்றால் மாத்திரம் மருத்துவமனை செல்ல வேண்டும். எடுத்ததுக்கெல்லாம் மருத்துவமனை
சென்றால், நோய்யும் மாறாது..! செலவும் வந்துகொண்டே இருக்கும்..! உண்மையான சூழலைப் புரிந்து, தேவைக்கேற்ப மருத்துவமனை
செல்லலாம்.
நேற்று, அலுவலகத்திலும், எனது வீட்டிலும் ஒருவர் கண் நோயால்
அவதிப்பட்டார்கள். இன்று வீட்டில் மனைவி, பிள்ளை என நோய் பரவத்தொடங்கிவிட்டது..! எனது வளவு பெரிது என்பதாலும், பல வீடுகள் இருப்பதாலும்
இன்னும் எனக்கும் இன்னொரு மகளுக்கும் வரவில்லை. ஆனால் நாளை என்ன நடக்கும் என்று சொல்ல
முடியாது.
இன்று மனைவியையும், இரண்டாவது மகளையும் பாடசாலைக்கு அனுப்பவில்லை.
மதியமும், இரவும் கடைச் சாப்பாடே..! ஓய்வு எடுக்கச் சொல்லியுள்ளேன். இயன்றவரை கட்டுப்படுத்த, குளிர் கண்ணாடிகளை அணியச்சொல்லியுள்ளேன்.
இதனால் அவர்களைப் பார்க்கும் போது எமக்கு கஷ்டம் இருக்காது.
சுத்தமாகக்கண்ணைக் கழுவி, ஓய்வும் எடுத்து, ஆரோக்கியமான உணவையும்
எடுத்தால், எமது உடலே அந்நோய்கிருமிகளை அழித்து, மீண்டும் சிலநாட்களிலே பழைய நிலைக்குக்
கொண்டுவரும். சின்ன வயதில் இருந்தே பல முறை
எனக்கு கண்நோய் வந்துள்ளது.
வெய்யிலுக்குள் திரியக்கூடாது. அகோரமாக இருக்கும். எரிச்சல்
கூடும்.
இந்தச் சூழலில் எனக்கு சில நாட்கள் கொழும்பில் வேலை வந்துள்ளது.
எமது மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா மற்றும் அடுத்துவரும் 5 வருடங்களுக்கான தந்ரோபாயத்திட்டம்
தொடர்பான கலந்துரையாடல் என முக்கிய வேலைகள் இருக்கின்றன.
இதுவரை இரண்டிலும் கலந்துகொள்ளவே திட்டமிட்டுள்ளேன்.
ஆனால் நாளை என்கையில் இல்லை..! திட்டம்
மட்டுமே வைத்துள்ளேன்..! பார்ப்போம் இயற்கையின் திட்டம் என்ன என்பதை..?
ஆ.கெ.கோகிலன்
18-10-2023.
கருத்துகள்
கருத்துரையிடுக