அடிமை வளர்ப்பு..!
இந்தியா என்றால் எங்கள் தாய் நாடு..! தனியத் தமிழர்களுக்கு
மாத்திரமல்ல, சிங்களவர்களுக்கும் தான்..! அதனால் தாய் நாட்டின் மீது எமக்கு என்றும்
மதிப்பும் மரியாதையும் உண்டு.
ஆனால் இந்திய நாட்டை ஆள்பவர்கள் இன்னும் தமது மக்களையே அடிமைகளாகவும்,
ஏழைகளாகவும் வைத்துக்கொண்டு, சந்திராயன், ஆதித்தியா என்று வளர்ந்த நாடுகள் போல் பெருமை
பேசுவது அழகல்ல..! முதலில் இந்தியாவில் இருக்கும்
பணம் அனைவருக்கும் பொருத்தமான வகையில் பங்கிடப்படவேண்டும். நியாயமான சம்பளம் ஒரு அடிமட்ட
ஊழியனுக்கு கிடைக்க வேண்டும். அதிக பணம் வைத்திருப்பவனுக்கு அதிக வரி அறவிடவேண்டும். திறமைகளுக்கு முன்னுரிமை கொடுத்து, சீனா போன்ற சமதர்ம
நாடுகளை போல் மேலே வரவேண்டும். விளையாட்டுக்களில் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் பெரிய
இடைவெளி உள்ளது..! ஒரு நாட்டின் பலம் என்பது
ஒரு சாதாரன நாட்டுப்பிரஜையின் பலத்துடன் ஒப்பிடும்போது, இந்தியா இன்னும் நீண்ட தூரம்
பயணிக்க வேண்டிய சூழலிலே உள்ளது. அப்படிப் பார்க்கையில் இலங்கை எவ்வளவோ பரவாயில்லை.
அண்மையில், இலங்கை அகதிமுகாமில் எடுக்கப்பட்ட, ஒரு வீடியோவை
(Vlog) பார்க்கும்போது அதிலுள்ள இலங்கை அகதிகள் எவ்வளவு படித்தாலும் தமக்கு இந்திய
அரசு குடியுரிமை தராது என்றும், அரச வேலைகளில் சேரமுடியாது என்றும் குறிப்பாக நீட்
(NEET - National
Eligibility cum Entrance Test) போன்ற பரீட்சைகளில் பங்குபற்றி மருத்துவம்
போன்ற துறைகளில் பயில முடியாது என்றும் தெரிவித்து, என் மனதை வேதனைக்குள் தள்ளினார்கள்.
நான் கூட இந்திய அகதி முகாமில் இருந்து, படித்து, அதன் பின்னர்
தான் இலங்கை வந்து, தற்போது ஒரு அரச கல்வி நிறுவனத்தின் தலைவராக இருக்கும் போது, என்னைவிட
எத்தனையோ திறமைசாலிகள் சும்மா அகதிமுகாம்களில் தேங்காய் உரிக்கும் வேலைசெய்வதும், பெயின்ரர்களாக
இருப்பதும், கூலி வேலைகள் செய்வதும் என்று, இலங்கை அகதிகளைக் கீழே வைத்திருப்பது, இந்தியா
ஒருபோதும் வல்லரசாக வருவதற்கான வாய்ப்புக்களை உருவாக்கவில்லை என்று தான் நான் உணர்ந்துள்ளேன்.
இந்தியர்கள் உணர்ந்துள்ளார்களா தெரியவில்லை..?
வளர்ச்சியடைந்த நாடுகளே, தமது நாடுகளுக்கு அகதிகளாக வந்தவர்களை
ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் (10 வருடங்களுக்கு) இருந்தால், குடியுரிமை வழங்கி,
அவர்களையும், அவர்களது திறமைகளையும், சேவைகளையும் நாட்டிற்குப் பயன்படுத்தும்போது,
இந்தியா அவ்வாறான பார்வை இல்லாமல் இருப்பதே கவலையானதும், வேதனையானதுமான விடயமாகவுள்ளது. தற்போது நடைபெறுகின்ற ஆசிய விளையாட்டில் கூடச்சீனாவை
முந்த முடியாமல் இந்தியா இருக்கின்றது..!
எவ்வளவோ நல்ல, திறமையான மனிதர்கள் இந்தியாவில் இருந்தும்,
சரியான பார்வையற்ற மனிதர்களிடமே ஆட்சி, அதிகாரங்கள் அமைவது வேதனையளிக்கின்றது.
அகதிகளை அரவணைக்க முடியவில்லை என்றால் அவர்களை கூண்டோடு தாய்நாட்டிற்கு
அனுப்புவது சாலச்சிறந்தது. அங்கு இருந்துகொண்டு,
உயிரைப்பிடித்து வாழும் அற்ப மனிதர்களாக இருப்பதைவிட, இங்கு வந்து வீர மனிதர்களாக செத்தாலும்
பரவாயில்லை.
எமது இலங்கை நாட்டு
மக்களின் நலன்களை விடுவோம். முதலில் அந்த நாட்டில் தோன்றிய
அனைத்து மக்களையும் சமமாக நோக்கும் பக்குவத்தை, அனைத்து நிலையிலும் ஏற்படுத்தட்டும்.
அது நடந்தால், இந்தியா வல்லரசாகும் சாத்தியம் உண்டு. இல்லை என்றால் எத்தனை சந்திராயனை
வானில் அனுப்பினாலும் பயனில்லை. மக்கள் வறுமையில் வாடி, அரசு தரும் பிச்சை பணத்திற்கு
வீதியில் நிற்க, ஒரு குறைந்த வீதத்தினரின் வீம்புக்காக, அப்பாவி மனிதர்களின் வயிற்றில்
அடிப்பது என்பது எவ்வளவு கொடுமையானது..? இதனை உணர்ந்தால் தான் இந்தியா வல்லரசு ஆவது
பற்றிச் சிந்திக்க முடியும்.
ஒரு வீட்டில், ஏழ்மையிருக்க, அவ்வீட்டிலுள்ள ஒருவன், மற்றவர்களைப் பற்றிக்கவலைப்படாமல், பெரிய ஆயுதம் வாங்கி, ஏற்கனவே நல்ல வசதியாக இருக்கும் உறுப்பினர்கள் கொண்ட குடும்பத்திலுள்ளவர்களோடு
போராடுவது என்பது எவ்வளவு முட்டாள் தனமோ அதேயளவு முட்டாள் தனம் தற்போதைய ஆட்சியாளர்களிடம்
இருப்பதை அவதானிக்க முடிகின்றது..! முதலில்,
எல்லோரும் ஒன்றாக இணைந்து முன்னேறுங்கள். நாட்டிற்கு
வரும் வருமானத்தைச் சரியாக பங்குபோடுங்கள். பதுக்காதீர்கள். நாட்டிலுள்ள எல்லோரும்
வளர வேண்டும். அப்போது தான் நாடு வளரும்..! இப்படியான எண்ணத்துடன் இருந்த பல மனிதர்களில்
இன்று
மறைந்த எம்.எஸ்.சுவாமிநாதன் என்பவர் பற்றி அறிந்தேன்.
அவரது நாட்டிற்கான சேவைகள் பற்றியும், அவரது மூன்று பெண்
பிள்ளைகள் பற்றியும், குறிப்பாக WHO இல் உயர்பதவியில் பணிபுரியும் டொக்டர் சௌமியா பற்றியும்,
இரண்டாவது உலகப்போர் நடந்த ஏறக்குறைய 1945 காலப் பகுதியில், பெரும் பஞ்சத்தால் இந்தியர்கள்
பலர் பாதிக்கப்பட்டதால், இனி இந்தியாவில் பஞ்சமே வரக்கூடாது என்று பாடுபட்டு கோதுமை
மற்றும் அரிசி உற்பத்தியில் பசுமைப்புரட்சி
செய்து, நாட்டைமேலே கொண்டுவந்த நல்ல மனிதர் மறைந்த இன்றைய நன்நாளில், எனக்கு இதனை எழுதத்தோன்றியது..!
தனது சொத்துக்களில் குறிப்பாக 2000 ஏக்கர்களில் மூன்றில்
ஒன்றை ஆன்மீக மடங்களுக்கு தானமாக வழங்கிவிட்டார் இந்த வேளாண்மை விஞ்ஞானி சுவாமிநாதன்..! 98 வயதை நீண்ட
ஆயுளாக இறைவன் அவருக்குக் கொடுத்ததே, அவரது சேவையை மதிக்கத்தான்..! ஒரு நாளும் மருத்துவமனை
சென்றது கிடையாது என்று அவரைப்பற்றிச் சொல்கின்றார்கள்..! பல பட்டங்களுடன், முனைவர்,
மற்றும் முனைவருக்கு பின்னர் கிடைக்கும் பட்டத்தையும், இந்தியாவின் அனைத்து உயர்விருதுகளையும்
பெற்றவர். அவரது ஆத்மா சாந்தியடையவும், சொர்க்கத்தில் இருக்கும் முன்னாள் கல்வியாளர்,
மற்றும் சமுதாய சேவகராகவும் இருந்த அவரது காதல் மனைவி மீனாவுடன், இனி அருவ வாழ்க்கை
தொடரட்டும் என இறைவனை வேண்டி இதனை முடிக்கின்றேன்.
படிக்கும் வயதில் சிந்தனைகள் சிதறியதால், முதல் தரத்திலே
முன்னேற முடியாது போனாலும், பிந்தி வந்த உயர்படிப்பு அனுமதி என்னை மீண்டும் கல்வியில்
கொண்டுவந்து, இன்று இலங்கையில் இந்த இடத்தில் நிறுத்தியுள்ளது. இதற்கான உதவியில் இந்தியாவை
நான் என்றும் மறக்க முடியாது. பேசினாலும், ஏசினாலும் எனக்கும் இந்தியா தாய் நாடு தான்..!
பல மொழிகளுக்கு ஆதிமொழி தமிழ்மொழி போல் ஆசியாவில் பலருக்கு
இந்தியா ஒரு தாய்நாடு தான்..!
ஆ.கெ.கோகிலன்
28-09-2023.
கருத்துகள்
கருத்துரையிடுக