மற்றவர்களின் விருப்பம்..!

 

 



சிறுவயதில் இருந்து எனது இயல்புகள் வித்தியாசமானவை.  பொதுவாக எல்லாக்கலைகளையும், பார்த்து அதைப்போல் செய்வது எனக்குப் பிடிக்கும்..!  எனக்கு சமைக்க, தைக்க, மற்றும் பூமாலை கோர்க்க எனப்பல பெண்களின் வேலை தெரியும். பெண்கள் பாடசாலையில் படித்ததால், வந்த இயல்பா  என்று தெரியவில்லை.  இன்றுவரை தொடர்கின்றது. 

பெண்கள் பாடசாலையில் ஆண்கள் நீண்ட காலம் படிக்க முடியாது. என்னையும் மூன்றாம் வகுப்பிற்குப் பின்னர் அனுமதிக்கவில்லை.  அதன் பிறகு கலவன் பாடசாலைகளிலே இறுதிவரை படித்துள்ளேன். அது ஒரு நடுநிலையான மனநிலையைச் சின்ன வயதிலே தந்துவிட்டது. நான் ஆண், பெண் இருவரையும் சமநிலையில் வைத்துப் பார்ப்பதே வழக்கம். அது தான் எனக்கு, பெண் பிள்ளைகள் கிடைக்கவும் காரணமாக அமைந்திருக்கலாம். இயற்கையின் விருப்பமாகவும் இருக்கலாம்.

எனது உயர்ந்த, அகண்ட, கருமையான தேகம் பொதுவாகப் பலரைப் பயப்படுத்தும். சின்னவயதில் அதனைச் சாதகமாகப் பயன்படுத்தி, தேவையற்ற விடயங்களிலும் ஈடுபட்டுள்ளேன். காலம் தந்த பாடம், பின்னர் எல்லாம்  மாறிவிட்டது..!  எல்லோரும் விரும்பக்கூடிய வகையில் தவறுகள் செய்யாமல், அதிகம் பழகி பிரச்சனைகளுக்குப் போகாமல், தேவையற்ற பணக்கொடுக்கல், வாங்கல்களில் ஈடுபடாமல் இருக்கப் பார்த்துக்கொண்டதால், பணிப்பாளராக வரக்கூடியதாக இருந்தது.  இவை அனைத்தும் எனது உண்மையான குணமா என்பது தெரியாது. ஆனால், என்னை நானே திருத்திக்கொண்டதாக நினைக்கின்றேன். உண்மையான இயல்புகள், இன்னும் பலரைக் காயப்படுத்தக்கூடியது. அதனை அழிக்கவோ அல்லது அகற்றவோ நீண்டகாலமாக முனைகின்றேன். ஆனால் முற்றாக முடியவில்லை.

எனக்கு 50 வயது தாண்டியும் அரும்பு மீசையே (Moustache) இருக்கின்றது..! சிந்தனையும் இளமையாகவே இருக்கின்றது..!  வயதுக்கு ஏற்ப, என்னைமாற்றுவதற்கு உடல், உள ரீதியில் தொடர்ந்து முயற்சிக்கின்றேன்.  பல முறை மீசையை முற்றாக எடுக்க நினைப்பதுண்டு..! ஆனால் பிள்ளைகளுக்கு அந்த அரும்பு மீசை தான் பிடிக்கும்..!  தற்போது  அரும்பு மீசையில் பல நரைகளும் வந்துவிட்டது. பிள்ளைகளின் விருப்பத்திற்காக அதனை எடுக்க முடியாமல் இருக்கும் நிலையில், இன்று ஒரு கனவு..! அதில் ” யாரென்று தெரியவில்லை..! கிழவனான பின்னர் கூட  ஏன் இன்னும் சின்னப்பெடியன் மாதிரி அரும்பு மீசையுடன் இருக்கின்றீர்கள்..! அதனை  மழித்துவிட்டால், ஒரு மரியாதை கிடைக்கும் என்று யாரோ முகம் நினைவிற்கு வராத பெரிய மனிதர் ஒருவர் சொன்னார்..!” நானும் சரி, அவ்வாறே வழிப்போம் என்று மகளிடம் சொல்ல, அவள் “வேண்டாம் அப்பா..! மீசையில்லாமல் உங்களைப் பார்க்க சகிக்க முடியாது..! தயவு செய்து எடுக்கவேண்டாம்” என்றாள்..! பிறகு என்ன..? மகள்கள் சொல்வதே எனது வேதவாக்கு..!

 

ஆ.கெ.கோகிலன்

08-10-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

நம்பிக்கையீனம்..!

இயற்கை தந்த வலி..!