பேசும் இயற்கை..!
பல நாட்களாக எனது சுவாமிப்படங்களுக்கு ஒரே மாதிரியான பூக்களே
கிடைக்கின்றன..! ஏன்..? எனத்தொடர்ந்து அவதானிக்கும்போது
ஒரு விடயம் புரிந்தது. இப்போது நடக்கும் வாழ்க்கையும்
ஒரே மாதிரியாகவே போய்கொண்டிருக்கின்றது..! இனிப்பும் இல்லை..! உறைப்பும் இல்லை..!
இன்று அலுவலகம் போகும் போதும், சலிப்புடனே சென்றேன். நான்
எவ்வளவோ நல்லதை, நிறுவனத்திற்குச் செய்யலாம் என்றால், எல்லாம் மாறித்தலைகீழாகவே நடக்கின்றது. இன்று, பயிற்சிப் பயிலுனர்களின் சேவையை நீடிக்கும்
கடிதத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று அலுவகலம் வந்தால் போன், இன்ரெநெட் ஒன்றும்
வேலைசெய்யவில்லை. ரெலிக்கோம் தலைமையகத்திற்கும், யாழ் முகாமையாளரான தம்பி முறையான ஒருவருக்கும்
சொன்னேன். சிறிது நேரத்திற்குள் வந்தார்கள்..! பிரச்சனை தீரவில்லை. பின்னர் 11.00 மணிக்கு
சிரேஷ்ட முகாமையாளர் கூட்டம் ஜூம்செயலி மூலம் நடந்தது. அதில் என்னால் சரியாக இணைந்து
கேட்கவும், எனது நிலையைக்கூறவும் முடியவில்லை. இன்றைக்கு என்று, பார்த்து, டிஜி என்னைக்கேட்டுள்ளார்.
ஆனால், இணையப்பிரச்சனையால் தெளிவாகப் பதில்சொல்ல முடியவில்லை. அட்மின் அறையிலுள்ள கணினியில்
இருந்து சிறிது நேரம் கேட்டேன். இருந்தாலும் வேறுபிரச்சனைகள் தொடர்பான கலந்துரையாடல்
சென்றதால், கதைக்க முடியவில்லை. இதற்கு முதலே லாப் தொடர்பான பல பிரச்சனைகள் எழுந்தன..!
அவற்றைத் தீர்க்கவே போதும் போதும் என்றாகிவிட்டது. எல்லாவற்றையும் ஒருவாறு சமாளித்து, முடிக்கலாம் என்றால்
ஊழியர் உதவி தொடர்பாகவும் பிரச்சனைகள் வந்தன.
நானே இடம்மாற்றம் பெற்றுச்செல்லத் தயாராக இருக்கும் போது, என்னைவிடச் சின்னவர்கள்
பயப்படுவது கவலையாக உள்ளது..! யாரையும் வற்புறுத்தி இடமாற்றம் செய்வதால் அரசிற்கு எந்தப்
பலனும் வந்துவிடப்போவதில்லை. அரசை ஏமாற்றுவதாலும், யாரும் சாதித்துவிடவும் போவதில்லை..!
தத்தமது கடமைகளை உணர்ந்து செயற்பட்டால், இறுதியில் மனநிறைவாவது மிஞ்சும்.
பின்னர் வீடுவந்து, பழுத்த வாலைக்குலை ஒன்றை வெட்டிவைத்துவிட்டு,
3 கறுவாக்கண்டுகளையும் வெவ்வேறு இடங்களில் நட்டு, தண்ணீரும் விட்டேன். மழை காலம் என்றாலும்
வெயில் வாட்டுகின்றது. இவற்றை எல்லாம் அவதானிக்கும்போது
இயற்கை ஏதோ ஒன்றைப்பற்றிப் பேசுகின்றது..! அது “நடப்பதை ஏற்று நட..!” அதுவே எனக்கான
பாதை என்கின்றது..!
ஆ.கெ.கோகிலன்
11-10-2023.
கருத்துகள்
கருத்துரையிடுக