எலிடோன் பால் மா..!

 


 


இந்தப் பெயரே புதுமையாக இருக்கின்றது..!  எனது தாயார் வீட்டிற்கு முன்னாலுள்ள ஒரு அக்காவை நான் “எலியக்கா“ என்றே அழைப்பதுண்டு..! நேற்றுவரை ஏன்..? அவ்வாறு அவரை அழைக்கின்றீர்கள் என  யாரும் கேட்கவில்லை. நானும் அறியவில்லை..!

சொல்வதைச் சொல்லும் கிளிப்பிள்ளை போலவே நாம் வளர்ந்துள்ளோம்..! உறவும், ஊரும், நட்பும் சொல்வதை அப்படியே கேட்டு நடக்கின்றோம். சிலரே, மிகவும் விழிப்பாக ஒவ்வொரு விடயத்தையும் அலசி ஆராய்ந்த பின்னர் பயன்படுத்துவார்கள். நான் இது நாள் வரை பெற்றோர் சொல்லித்தந்ததைக் கேள்வி கேட்கவில்லை. ஆனால் இன்று அப்படியான ஒரு சூழல் வந்தது..! எனது  புதிய வீட்டிற்கு கம்பி வேலைகளைத் தலைமையேற்றுச் செய்த எனது உறவினர் ஒருவர் இறந்து, இன்று ஒருவருடம் முடிந்து, அவருடைய ஆண்டுத்திவசம் வந்தது. என்னை அழைத்திருந்தார்கள்.  ஊரையும், உறவையும் மதித்துச் சென்றேன். நகரின் முக்கிய தலைகள் சிலவற்றையும்  அங்கே கண்டு கதைத்தேன். என்னைவிடச்சின்னவர்களான அவர்களுக்கு என்னை அறிமுகப்படுத்தினேன். அது மாத்திரமன்றி, என்னால் ஊருக்குப் பெருமை என்று ஒருவர் சொல்ல, மனதிற்குள் ஒரு இனம்புரியாத சந்தோசமும் வந்தது..! உண்மைக்கும், உழைப்பிற்கும் இறைவன் தந்த ஊதியமாக எடுத்துக்கொண்டு, மனம் மகிழ்ந்தேன்.

பின்னர் அங்கிருந்த உறவினர்களோடு, கதைத்து சிறு நேரத்தை சமூகத்திற்காகக்கொடுத்துவிட்டு, மதிய உணவை வயிறுபுடைக்க உண்டுவிட்டு, அம்மாவிடமும், சகோதரரின் குடும்பத்தினரிடமும் விடைபெற்று, கணவனை இழந்த அந்த எலியக்காவிடம் விடைபெறச் செல்ல, மேலும் சில அயல் உறவுகள் அங்கே இருந்தன. அவர்களையும் விசாரித்து விடைபெற, ஒருவர் என்னிடம் ”ஏன் அந்த அக்காவை “எலியக்கா” என்கின்றீர்கள்..?” எனக்கேட்டார். எனக்கும் ஒன்றும் தெரியவில்லை. பல விடயங்களைப் புரியாமலே மனப்பாடம் பண்ணி, பழக்கப்பட்ட சமூகத்திலுள்ள ஒருவன் நானும்..!

எல்லோரும் சொல்கின்றார்கள் என்பதால் நானும் அவ்வாறு அழைக்கின்றேன். இன்று நேற்று அல்ல..!  எனக்கு விபரம் தெரிந்த காலத்தில் இருந்தே..! இன்னும் சொல்வதென்றால், அந்த அக்கா திருமணம் செய்ய முன்னரிருந்தே அவ்வாறுதான்  அழைக்கின்றேன்.

காரணம் தெரியவில்லை..! அவாவிடமும் கேட்டார்..! அவருக்கு வயது அதிகம் என்பதாலும், உடல் உபாதைகளாலும், சிரித்துக்கொண்டே இருந்தார்..!  பதில் சொல்லவில்லை..! இதற்கு பதில் சொல்லத் தெரியவில்லை போலும்..!

பின்னர் வீடு வந்து, பல காரியங்களை முடித்த பின்னர், அம்மாவிற்குப் போன் பண்ணிக்காரணம் கேட்டேன்.

அவர் ” அந்தக்காலத்தில் குழந்தைகளுக்கான பால் மா ஒன்றை  ”எலிடோன்” என்று சொல்வார்களாம். சின்னவயதில் அந்தப்பால் மாவை அவர், விரும்பிக்குடிப்பதால் அந்தப்பெயரின் முதல் இரண்டு எழுத்தான “எலி..“ வந்துவிட்டது..!” என்றார்.  அதன் பிறகு அவரை, ஊரில் எலித்தங்கை, எலியக்கா, எலியன்ரி, எலிமாமி, எலிச்சித்தி, எலிப்பாட்டி என்று பலவிதமாக உறவுச் சமூகத்தால் அழைக்கப்பட்டுவருகின்றார்..!

“பட்டங்கள்” படித்தால் மட்டும் கிடைப்பதில்லை..! இப்படியான செயலும், செயற்பாடுகளும் வழங்கும்..! மரணம் வரை அதனை கொண்டும் வருகின்றன..!

 

ஆ.கே.கோகிலன்

07-10-2023.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நம்பிக்கையீனம்..!