55 தாண்டியாயிற்று..!

 


சில நிகழ்வுகள் ஏன் நடக்கின்றன என்பது புரியாது..! ஆனால் நடக்க வேண்டியது நடந்து தான் ஆகும். அது தான் பிரபஞ்ச நியதி.

இன்று நான் நினைக்காமலே பல விடயங்கள் என்னைத் திக்குமுக்காட வைத்துவிட்டன..! ஒவ்வொரு வகுப்பு மாணவர்களும் என்னுடைய பிறந்த நாளைத் தன்னுடைய பிறந்த நாள் போல் கொண்டாடினார்கள்..!

தங்களால் இயன்ற பரிசில்கள் கூடத் தந்துள்ளார்கள்..! இதற்கு நான் என்ன கைமாறு செய்வது என்றே புரியவில்லை. ஆனால் ஒரு நல்ல பணிப்பாளராக இருக்க வேண்டும் என்றும், எடுக்கும் பாடங்களை என்னால் இயன்றவரை சிறப்பாகக் கற்பிக்க வேண்டும் என்றும்  முயலுவேன்.

55 வருடங்கள் என்பது விறுவிறுவென ஓடிவிட்டன..! அரசின் பழைய கொள்கைப்படி நான் இன்றுடன் வீட்டில் தான் நிற்கவேண்டும். ஆனால் கால மாற்றங்களும் நவீனங்களும் ஓய்வைத் தள்ளிப்போட்டுள்ளன. நானும் அந்த வகையில் தான் பயணிக்க வேண்டிய சூழலில் இருக்கின்றேன்.

இந்தியாவில் இன்று ஆசிரியர் தினம். கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் அதனைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றார்கள். நமது நாட்டில் அது ஒட்டோபர் 6 ஆம் திகதி வருகின்றது.  நாமும் அதனைக் கொண்டாட வேண்டும்.

கல்வியே மனிதனுக்கு நாகரீகத்தைக் கற்றுத்தந்துள்ளது. விலங்காக இருந்த, மனிதனை இறைவனுக்கு நிகராகவும், மேன்மை பொருந்தியவனாகவும், எல்லா உயிர்களையும் கட்டுப்படுத்தி வழிநடத்த தகுதி வாய்ந்தவனாகவும் மாற்றுவதற்கு, இயற்கை கல்வியைக்கொடுக்கவே  அனுமதித்துள்ளது..! அறிவு சார் செயற்பாடுகள் ஊடாகவே  விலங்குத் தன்மை கொண்ட மனிதனை நல்ல மனிதனாக மாற்ற வேண்டும். சமூகத்திற்கு பயனுள்ள மனிதர்களை உருவாக்குவதன்  மூலமே கல்வி நிறுவனங்கள் வெற்றி பெறுகின்றன.

நல்ல நேர்மையான ஒழுக்கமான மனிதர்களைக் கொண்ட சமூகமோ அல்லது நாடோ நிச்சயம்  அழிவடைந்து போக வாய்ப்பு இல்லை என்பதை நான் நூறு சதவீதம் நம்புகின்றேன்.  அப்படி அழிந்தால், அது தான் இயற்கையின் முடிவாக இருக்குமே தவிர,

அறிவின் குறைபாடாக இருக்காது. மாறாக தவறான அறிவுகளூடாக ஏற்படும் அழிவுகள், இயற்கையைப் பாதித்தாலும், இயற்கை தன்னை மீளமைத்துக்கொள்ளும் வல்லமையைத் தானே கொண்டுள்ளது..! பிரபஞ்சத்தின்  இறுதிக்கால எல்லை வரை அது தொடர்ந்து இருக்கும். ஆசைகளாலும், ஆணவத்தாலும் ஏற்படும் அழிவுகள், அந்த அற்ப அறிவிலிகளையும் அவர்களைச் சேர்ந்தவர்களையும் பாதிக்குமே தவிர, இயற்கையுடன் பிணைந்தவர்களை அதனால் அசைக்க முடியாது.

இதனை உணர, காலத்தோடு பயணிக்க வேண்டும். அப்போது தான் நிஜத்தின் பலம் புரியும். அதுவரை போலிகளின் ஆட்டம் தொடரும்.

1996இல்  தொழில்நுட்பக்கல்லூரியுடன் இருக்கும் போது  உயர் கணக்கியல் டிப்ளோமா படிப்பிக்க வந்து, பின்னர் உயர்தொழில்நுட்பவியல் நிறுவனம் உதயமாகியபோது, அதனுடன் இணைந்த கணக்கியல் கற்கைநெறி,  இன்று 25 வருடங்களைத் தாண்டி போய்கொண்டிருக்கின்றது. அதுமாத்திரமல்லாமல் எம்மைப்போன்றவர்கள் இந்நிறுவனத்தில் நிரந்தரப் பணியாளராக மாறவும்,  வாய்ப்பைத் தந்துள்ளது..!

இன்று எனது 55 ஆவது வயதுப் பிறந்த தினத்தை இந்நிறுவனத்தில் சிறப்பாகக் கொண்டாடவும், இது வழியமைத்துத் தந்துள்ளது..! நான் இங்கு, எந்தத்திட்டமும் போடவில்லை. மனதிற்குப் பட்டதைச் சொல்வதும், சரியானதைச் செய்வதும் மாத்திரமே எனது கடமையாக கொண்டிருந்தேன். இனியும்  அவ்வாறே இருப்பேன். நான் மாறுவதற்கு ஒன்றுமில்லை.

“எது நடந்தாலும் நன்மைக்கே..! தீதும் நன்றும் பிறர் தர வரா..!”

நாம் வினையை விதைத்தால் அதனை ஒரு நாள் அறுவடை செய்ய வேண்டி வரும் என்பதை மறந்தாலும் இயற்கை மறக்காது..! அந்தப்பாடத்தை, இயற்கை எமக்குப் புகட்டியே தீரும்..!

நிம்மதியான, நிறைவான வாழ்விற்கு, இயற்கை துணையிருந்தால் போதும். அனைத்தும் சுபம்..!

 

ஆ.கெ.கோகிலன்

05-09-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!