தள்ளி உட்காருங்கோ..!

 


இன்று காலையே யாழ் போவதா அல்லது அடுத்த கிழமை போவதா என குழம்ப வேண்டிய சூழ்நிலை வந்தது..! இருந்தாலும் ஒருவாறு போவதாக முடிவு செய்து, அதற்கேற்ப செயற்பட்டேன். ஏறக்குறைய மாலை 2.45இற்கு வெளிக்கிட்டு அலுவலகத்தை விட்டுவெளியேறினேன். கடந்த கிழமை சரியாக மாலை 2.45 அடிக்கும் வரை காத்திருந்து, பிங்கர்பிறிண்ட் மெசினில் கைவைத்துத் திரும்ப, பஸ் போய்விட்டது..! பின்னர் ஏறக்குறைய முக்கால் மணித்தியாலம் காத்திருந்து பஸ் பிடித்து வீடுபோய் சேர இரவு 9.00 மணியாகிவிட்டது..!

அதனால் இம்முறை 2.40இற்கே பிங்கரை வைத்துவிட்டு, பஸ் தரிப்பிடம் வந்தால், பஸ்ஸைக்காணவில்லை. ஏறக்குறைய 3.00மணிக்கு கிட்டவாக அந்த சின்ன பஸ் வந்தது. ஆனால் உள்ளே ஏறமுடியாத அளவு கூட்டம்.  ஒரு ஹோல்ட் வரை தொங்கிக்கொண்டு வந்து, அடுத்த ஹோல்டில் கூட்டத்திற்குள் நெரிபட்டு ஏறினேன். பஸ் மொரவேவ தாண்டியதும் ஒரு பெண் இறங்க, அந்த இடத்தில் இருக்கச்சென்றேன். அருகில் இன்னொரு பெண் இருந்தார். அவர் “என்னைத் தள்ளியிருங்கள்..” என்றார்.   எனக்கு என்ன சொல்வதென்றே விளங்கவில்லை..? நான் எங்கே தள்ளியிருப்பது..! மற்றைய பக்கம் நிலைக்குத்தான ஒரு இரும்புக்குழாய் தான் இருந்தது. அது யாரும் விழாமல் இருக்கவும், பஸ்ஸின் கட்டமைப்பு குலையாமல் இருக்கவும் வைக்கப்பட்டுள்ளது. எனக்கு இயல்பாகவே பெரிய அகலமான நெஞ்சு உண்டு. ஒரு சீட்டின் முக்கால் வாசியைப் பிடித்துவிடுவேன். அதனால் தான், கரையிலுள்ள சீற்றில் கூட இருப்பது வழக்கம். அரைவாசி நெஞ்சும், அரைவாசிப் பின்பகுதியும் சீற்றுக்கு வெளியே இருக்கும். இதனால் இருப்பவர்களுக்கு கொஞ்சம் இடைஞ்சல் குறைவு. அதேவேளை நடத்துனர் மற்றும் நின்று வருபவர்கள் கஷ்டப்படுவார்கள்.

இம்முறையும் கொஞ்ச நேரம் அந்த கம்பிக்கு மேலாக முதுகை வைத்திருந்தேன். அந்தப்பெண் சொன்னதில் இருந்து, அந்த இடத்தை விட்டு எழவேண்டும் என்றே தோன்றியது. யாரும் தவறாக நினைக்கக்கூடாது என்பதற்காகப் பொறுத்திருந்தேன்.

நல்லவேளை ஒரு பௌத்தகுரு வந்தார்..! நானே எழுந்து அந்த இடத்தைக்கொடுக்க முனைய இன்னொரு பெண் எழுந்து, தனது இடத்தைக்கொடுத்தார். அந்தப்பெண்ணிற்கு நான், எனது இடத்தைக்கொடுத்தேன். இருவரது பிரச்சனையும் தீர்ந்தது..!

 

போன கிழமையும், ஒரு 45 வயது மதிக்கத்தக்க பெண் எனக்குப்பின்னால் வந்து, என்னைத் தள்ளிக்கொண்டு இருந்தார்..! அதுமாத்திரமன்றி, தள்ளிப்போங்க..! தள்ளிப்போங்க..! என்று கத்திக்கொண்டும் இருந்தார். எனக்குச் சங்கடமாகப்போய்விட்டது.  இருந்தாலும் பொறுக்க முடியாமல், இவ்வாறு கத்தினேன்..! ”இடமில்லாமல் எங்கே தள்ளிப்போவது..! எட்டிப்பாருங்கோ..! ”முன்னுக்கு எல்லாம் ஆட்கள் நிற்கின்றார்கள்..” என்று ஆத்திரத்தில் கத்தினேன்.

இந்த எண்ணங்கள் மறைய, நிஜத்திற்கு வந்தேன். கொஞ்ச நேரம் நின்றுவர, சில சீற்றுக்கள் கிடைத்தன.  இரண்டு சீற்கள் மாறி உட்கார்ந்து, எனது வசதிக்கு ஏற்ப பயணிக்க முடிந்தது. அப்போது, நின்றுவந்த சிலருக்கு அவர்களது பைகளை வாங்கி, மடியில் வைத்து உதவினேன்.

ஒருவாறாக இரவு 7.30இற்கு யாழ் வந்து, பின்னர் எனது பைக்கை எடுத்துக்கொண்டு வீடு வர இரவு 8.00ஐத்தாண்டிவிட்டது.

பிள்ளைகள் படித்துக்கொண்டிருந்தார்கள்..! மனைவி சமைத்துக்கொண்டிருந்தார்..! நான் உடுப்புக்கள் தோய்து, குளித்து, பின்னர் சாப்பிட்டு, இதனை எழுதுகின்றேன்.

மகள்கள் படிப்பதால், நாம் அவர்களுக்கு வேலை கொடுப்பதில்லை. தற்போது அவர்களுக்கு வீட்டு வேலைகள் செய்வது என்றால் பஞ்சியாகவுள்ளது..! நன்றாப் படித்தால், நல்ல வேலைகளில் அமரலாம். இல்லை என்றால், முதலாளியாகவோ அல்லது கூலித்தொழிலாளியாகவோ மாறலாம்..!

கல்வியே, கஷ்டத்தில் இருப்பவர்களைக் கரையேற்றும் ஓடம்..!

 

ஆ.கெ.கோகிலன்

30-08-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நம்பிக்கையீனம்..!