ஈர்ப்பு அறுதல்..!
சுகுமார் தனது மனைவி ராகினி மற்றும் அவர்களது மூன்று பிள்ளைகளுடன்
”காஸ் மாண்ட்” என்ற ஒரு மலைப்பிரதேசத்தில் சில நாட்களை மகிழ்ச்சியாகக் கழிக்கவென்று
சென்றார்கள்.
போகும்போது வழியில் ஒரு விபத்தைப் பார்த்ததும் பிள்ளைகளில்
ஒருவர் தந்தையிடம் ஏன் இப்படி எல்லாம் நடக்கின்றது என்று கேட்டாள்..? இதற்குப் பதில்
சொல்வது கடினம், நாம், எமக்குத் தரப்பட்ட கடமைகளைச் சிறப்பாகச் செய்தாலே போதும். அவ்வளவு
தான்..! மீதி எல்லாம், இந்தப் பிரபஞ்சத்தில் புதிர் மாதிரித் தான்..! சில சமயம் நாம்
தொட்டதெல்லாம் வெற்றியாக மாறும். சில சமயம் எதிர்மாறாக நடக்கும். இவற்றைப்பற்றி சரியாகத்
தெரிந்தவர், இந்த பூமியின் தன்மைகளை முற்றாக உணர்ந்தவர் என்று யாரும் இருக்க முடியாது.
இயற்கையும் அதனை அனுமதிக்காது. அப்படி ஒருவர் இருந்தால், அவர் தான் இந்தப் பூமியின்
அல்லது எல்லாவற்றையும் அடக்கிய இந்தப் பிரபஞ்சத்தின் முதலாளி அல்லது கடவுள் அல்லது முகாமையாளர்
எனச்சொல்ல முடியும்.
மனைவி ராகினி ஏன் தேவையில்லாமல் இப்படிக்கதைத்துக்கொண்டு
இருக்கின்றீர்கள்..? நாம் இந்தப்பூமியில் வாழ்வது கொஞ்சக்காலம் தான். அதனைச் சந்தோசமாகக்
கொண்டாட வேண்டுமே தவிர, ஒவ்வொன்றிற்கும் காரண
காரியங்களை அறிவதால், நாம் ஒன்றும் ஞானியாகவோ அல்லது பல்கலைக்கழக பட்டங்கள் பெறவோ போறதில்லை.
அப்படியிருக்க “ஏன் இப்படி கதைக்கின்றியள்..?” எனக்கேட்டாள்.
இன்று “ஒக்சி” என்ற ரெஸ்ரோரன்டில் காலைச்சாப்பாட்டை எடுத்துவிட்டு,
அனைவரும் “டினாசீர்” என்ற நீர்வீழ்ச்சிக்குப் போய் நன்றாக குளித்து, படமெடுத்து மகிழ
வேண்டும். அதன் பிறகு மதிய உணவை, நாம் தங்கும் “சிக்கிமா“ ஹொட்டலில் எடுப்போம். குறைந்தது,
இந்தப் பிரதேசத்தில் இரண்டு நாட்களாவது செலவு செய்தால் தான், மனம் மகிழ்வு அடைவதுடன்
இனிவரும் ஏனைய ஆறு மாதங்களுக்குமான ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும் என்று தனது பொறுப்புணர்ச்சியை
வெளிப்படுத்தினார் சுகுமார்.
போகும்போது திடீரென
காரின் ரயர்கள் ரோட்டில் படாத ஒரு உணர்வு சுகுமாருக்கு ஏற்பட்டது..! பின்னர் யாருக்கும் சொல்லாமல், காரை நிறுத்திவிட்டுப்பார்த்தான்.
எல்லாம் சரியாகத்தான் இருந்தது. டயர் ரோட்டுடன் தொடுகையிலே இருந்தது.
தொடர்ந்து வெளிக்கிட, இன்னோரு மகன் கேட்டான் “ ஏன் அப்பா
காரை நிறுத்தினீர்கள் என்று..? ” ஒன்று மில்லை..! “டயரில் காற்று குறைந்துள்ளதா..?” எனப்பார்த்தேன்
என்று சொல்லி அந்த விடயத்தைக் கடந்தார் சுகுமார்.
பின்னர் அவர்களின் திட்டப்படி காலை உணவை “ஒக்சி” ரெஸ்ரோரன்ட்டில்
எடுத்தார்கள். அனைவருக்கும் அந்தச்சாப்பாடு பிடித்திருந்தது..!
இப்படி இடையில் கடைகளில் சாப்பிடுவது சுவையாக இருந்தாலும்
ஆரோக்கியத்திற்கு அவை கெடுதலாகவும் அமையலாம் என ராகினி சொன்னாள்.
மீண்டும் பயணத்தைத் தொடர்ந்து ஒருவாறு, ஏறக்குறைய 10 மணியளவில், குறிப்பிட்ட “டினாசீர்” என்ற அந்தப் புகழ்வாய்ந்த நீர்வீழ்ச்சிக்கு வந்துவிட்டார்கள்..!
நிறைய மக்கள் அங்கே மகிழ்வுடன் பல நிகழ்வுகளில் ஈடுபட்டார்கள்..! சுகுமாரும் காரைச் சரியான
பாக்கிங் இடத்தில் நிறுத்திவிட்டு, மாற்று உடைகளையும் எடுத்துக்கொண்டு அனைவரும் டினாசீர் நோக்கி, நடந்தார்கள். கார்விட்ட
இடத்திற்கும் நீர்வீழ்ச்சிக்கும் இடையே ஏறக்குறைய ஒரு கிலோ மீற்றர் தூரம், ஒழுங்கற்ற பாதையில்
செல்லவேண்டும்.
சுகுமாரின் மனைவி சிற்றூண்டிகளையும் சில உடுப்புக்களையும்
எடுத்துவர, பிள்ளைகள் ஒவ்வொருவரும் தமது உடுப்பு பைகளைச் சுமந்து வந்தார்கள். சுகுமார்
ஏனைய பொருட்களைக் கொண்டு நடந்தார். நடக்கும் போதும் சுகுமாருக்கு ஏதோ பறப்பது போன்ற ஒரு எண்ணம் எழுந்தது..! மற்றவர்களைப்
பார்த்தான்..! அனைவரும் சாதாரணமாக நடப்பது போலவே இருந்தார்கள்.
ஒருவாறு, நீர் விழும் பகுதிக்கு கிட்ட வந்தார்கள். அங்கும் பல இடங்களில் மக்கள் பலவாறாக இருந்தார்கள்..! சில பகுதிகளில் இளைஞர்கள் மலையில் இருந்து
நீருடன் சமச்சீராக குதித்தார்கள்..! பார்க்க ஆனந்தமாக இருந்தது. சுகுமாரின் மூத்த மகனும்
அப்பா நானும் போய் குதிக்கப்போகின்றேன்..! ஆசையாக இருக்கின்றது..! எனது வயதை ஒத்தவர்களைப்
பாருங்கள்..! என்று கைகாட்டினான். சுகுமார், வேண்டாம் நாம், குறித்த ஒரு இடத்தைக்காட்டி
அது ஆபத்து அற்றது என்றும் அதிகமானோர் அங்கே தான் நிற்கின்றார்கள். நாமும் அங்கே போவோம்
என்றார். ராகினி “அவனை விடுங்கோ..!” இவ்வளவு வளர்ந்திட்டான்..! மகள் மாதிரி வளர்க்கப்
பார்க்கின்றியள்..! என்றுசொல்லி, நீ போய் குதித்து மகிழ்..! நாங்கள் இங்கிருந்து போட்டோ
எடுக்கின்றோம் என்றவாறு, மூத்த மகனை தாம் நின்ற பகுதியில் இருந்து ஏறக்குறைய 200 மீற்றர்
தூரமுள்ள உயர்வான பகுதிக்கு, அங்கே ஏறும் இளைஞர்களுடன் இவனையும் ஏற அனுமதித்துவிட்டு,
நின்ற இடத்தில் இருந்து, பார்த்துக்கொண்டு இருந்தார்கள்..!
சுகுமார் ஒரு பொறுப்புள்ள தந்தை. தானும் தனது குடும்பமும்
என்று வாழ்பவன். ராகினியும் அவ்வாறே..! இருவரும் காதலித்து திருமணம் புரிந்தவர்கள்.
தமது பிள்ளைகள் மேல் அதீக பற்று வைத்துள்ளார்கள். பிள்ளைகளும் பெற்றோரின் விருப்பிற்கு
ஏற்ப திறமையாகவும், நன்றாகப்படிக்கக்கூடிய, நல்ல ஒழுக்கமுள்ள பிள்ளைகளாகவே வளர்கின்றார்கள்..!
இப்போது, சுகுமார் மகனைப் பார்க்க, அவன் அந்த உச்சியில் இருந்து
குதிக்க முயல்கின்றான். சில நிமிடங்களில் மகன் குதிக்க, ஒரு “விநோத நிகழ்வு..!”
அங்கே நடக்கின்றது. ஆம்..! அனைவரும் பதைபதைக்கின்றார்கள்..! இவர்களும் நகர முற்பட “நீண்ட தூரம்
பறக்கக் கூடியதாக சூழல் இருக்கின்றது..!” பல மாதிரியான ஆச்சரிய சத்தங்கள் அங்கே கேட்கின்றன..!
குதித்த மகன், நீருக்குள் விழ முடியாமல் அந்தரத்தில் பறக்கின்றார்..!
குழப்பம்..! கூச்சல்..! காயம்..! ஆச்சரியம்..!
எல்லோரும் பதறியதைப்போல் ராகினியும் பதற, சுகுமார் வரும்
வழியில் உணர்ந்த சில விடயங்களை நினைக்கின்றார்..!
ஏதோ ஒரு இயற்கை அனர்த்தமாகத் தான் இது இருக்க வேண்டும். வெள்ளம், சுனாமி, பூமிநடுக்கம்,
மேகவெடிப்பு, நில நடுக்கம், மண்சரிவு என்பது போல் “ஈர்ப்பு அறுதல்..!” என்ற ஒரு நிகழ்வாகத்தான் இது இருக்க வேண்டும் என்று, தீர்மானித்து, உடனடிச் செய்திகளைப் போனில் பார்க்கின்றான். அவன்
நினைத்தது சரி..! “காஸ் மண்ட்” பகுதி முழுவதற்கும்
சில மணிகள் புவி ஈர்ப்பு இருக்காது என்பதாக விஞ்ஞானிகளின் அறிவிப்பு செய்தியாக வந்திருந்தது..!
இவ்வாறான நிகழ்வுகள் 5000 வருடங்களுக்கு ஒரு முறை வரலாம்
என்று சொல்லப்படுகின்றது. இது தொடர்பான முற்றான ஆய்வுகள் இன்னும் கிடைக்கவில்லை என்றாலும்,
பூமியும், சூழவுள்ள கோள்களின் ஈர்ப்பு விசைகளாலும்
தோன்றும் பூச்சிய விசைப்பகுதியாக அந்தப்பகுதி, குறைந்தது இரு மணிநேரங்களுக்கு இருக்கும்..! இந்த சமயத்தில் எல்லோரும் மிக அவதானமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் எதுவும் நடக்கலாம்,
என விபரிக்கப்பட்டு இருந்தது.
இந்தச் செய்தியை அறிந்ததும், மனைவிக்கும் அங்குள்ளவர்களுக்கும்
சொல்லி, மகன் இருந்த பகுதிக்குச் செல்ல, அவன் நீருக்குள் விழுவதும் சரியாக இருந்தது.
சற்று தொலைவில் பாறைகளில் விழுந்து இருந்தால் காயங்கள் ஏற்பட்டிருக்கும்..! ஈர்ப்பு
அறுந்த நிலை என்றாலும், பாரிய பாதிப்பு ஏற்படாது என்று அசட்டையாக இருக்க முடியாது.
பின்னர் எல்லோரும் ஒருவாறு ஒன்று சேர்ந்து, “சிக்கிமா” ஹோட்டலுக்கு
போகாமல், உடனே வீடுநோக்கி புறப்பட்டார்கள்..! ஏனென்றால் ஈர்ப்பு அற்ற நிலை இடையிடையே
ஏற்படும் என்றும், சில நாட்களுக்கு அது தொடரலாம் என்றும் அறிவிப்புக்கள் வெளிவந்துகொண்டிருப்பதால்,
முதலில் உயிர்களைக்காப்பதே எமது கடமை என்பதற்கு இணங்க, மகிழ்ச்சிக்கு இடைவேளை வைத்துவிட்டு, வீட்டிற்குச்
சென்றார்கள். நீர்வீழ்ச்சியில் பறந்த அனுபவத்தை,
ராகினிக்கு மகன் சொல்ல, தந்தை காரை ஓட்டிக்கொண்டு கேட்க, இதுவும் ஒரு பாடமாக மகனுக்கு
இருக்கும் என்ற ஒரு பெருமை, நம்பிக்கையாக அவர் முகத்தில் தெரிந்தது..!
வாழ்க்கை, பல புதுமையான நிகழ்வுகளைத் தரவல்லது..! அதுவரை உயிருடன்
இருந்தால் தான், அவற்றைப் பார்க்க முடியும்..! ராகினியும், பிள்ளைகளும், பறந்ததை நினைக்க,
சுகுமாரின் காரும் வீடுநோக்கிப் பறந்தது.
ஆ.கெ.கோகிலன்
24-08-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக