பொம்மை நேசம்..!

 

 


சங்கர் சிறுவயதில் இருந்தே பல நல்ல குணங்களைக் கொண்டவன்..! யாரையும் புண்படுத்துவதில் துளியும் விருப்பம் இல்லாதவன். தானுண்டு, தன்வேலையுண்டு என்று வாழ்பவன். பொழுதுகளை வீணடிக்காது ஏதாவது ஆக்கங்கள் செய்யத்துடிப்பவன். அவ்வாறே, பல ஆக்கங்களையும் செய்து வைத்துள்ளான்..!

காலங்கள் உருண்டோடின..! சங்கர்,  அவனது 25 வயதைத் தாண்டும்  நிலையில், ஒரு பஸ் தரிப்பிடத்தில் ஒரு பெண்ணைக்கண்டான்..! அவள், அவனது இதயத்தில் போய் நேரடியாகக் குடியேறிவிட்டாள்..! அவனால் அதனைத் தடுக்க முடியவில்லை.

சில நாட்கள் அந்தப்பெண்ணுக்குப் பின்னால் திரிந்தாலும். தனது காதலைச் சொல்லச் சங்கடப்பட்டு, சொல்லாமலே வந்துவிட்டான். காலங்கள் சென்றன..!

சங்கர் அந்தப்பெண்ணைப் பார்க்கச் சென்றான் அவளைக் காணவில்லை..! சங்கருக்கு அவளை மறக்க முடியவில்லை. சில நாட்கள் ஏதோ ஒன்றைப் பறிகொடுத்தது போல் இருந்தான். பின்னர், தன்னைச் சுதாகரித்து, அதிலிருந்து மீண்டு,  தனது கைவண்ணத்தைப் பயன்படுத்தி, சிலிக்கனில் அவளை ஒத்த ஒரு தோற்றம் கொண்ட ஒரு பொம்மையை உருவாக்கி,  அந்தப்பொம்மை மேல் அலாதியான பிரியத்தை வைத்திருந்தான்..! காலம் போகப் போக அவனது பெற்றோர் மறைய, பொம்மை மேலுள்ள நேசத்தை அவனால் விடமுடியாது போய்விட்டது..! அவனைப் பலர் திருமணம் செய்யக் கேட்டார்கள். அவனுக்கு அதில் ஆர்வம் வரவில்லை. அந்தப்பொம்மையுடன் காலம் கழிக்கத் தொடங்கினான்.

ஏறக்குறைய 30 வயதை தாண்டும்போது, எங்கே சென்றாலும் கூடவே அந்தப்பொம்மையையும் தூக்கிக்கொண்டு செல்வான்..! மக்களை அவனை விநோதமாகப் பார்த்தார்கள். அவன் அப்படிப்பார்ப்பதைப் பொருட்படுத்துவதே இல்லை. தனக்குப் பிடித்த மாதிரியே  அந்தப்பொம்மையையும் தூக்கிக்கொண்டு திரிந்தான்..!

இந்தக்காலகட்டத்தில், அவனையும் பொம்மையையும்  பார்த்த வக்சலாவிற்கு ஒரு மாதிரியிருந்தது..! அந்தப்பொம்மையின் தோற்றம் ஏறக்குறைய தன்னைப்போல இருப்பதைப் பார்த்து சற்று அதிர்ச்சியடைந்தாள். யார் அவன்..? ஏன் எனது உருவம் தாங்கிய பொம்மையுடன் அலைகின்றான்..? யாராவது பார்த்தால் தன்னைப்பற்றி என்ன நினைப்பார்கள்..! என்ற சிந்தனை அவளுக்கு மேலோங்க,

பொம்மையைக்கவனிக்காத அருகேயுள்ள அவளின் கணவன் என்ன “என்ன அங்கே பிராக்குப் பார்க்கின்றாய்.. !” என கடிந்தபடி அவளைத் தன்னுடன் அழைத்துச்சென்றான்..!

போகும் போதும் வக்சலாவிற்கு..“ தனது உருவ பொம்மையே எண்ணத்தில் நிறைந்து இருந்தது..! கணவனின் வார்த்தைக்கு மதிப்பளித்தாலும் கணவனின் செயல்களில் வெறுப்புற்றிருந்த அவளின் ரணமான மனதிற்கு, தனது உருவ பொம்மையுடன் ஒருவன் திரிவதைக் காண சற்றுப்பரிதாபமாக இருந்தது..!

வக்சலா திருமணம் செய்து ஏறக்குறைய 7 வருடங்களுக்கு மேல் இருக்கும். சின்ன வயதிலே, அதுவும் படிக்கும் காலத்திலே பெற்றோர்கள் அவளுக்குத் திருமணத்தை முடித்துவிட்டார்கள். கணவன் ஆரம்பத்தில் அவளை விருப்பத்துடன் நடத்தினாலும் நாட்கள் நகர, அவளின் அழகில் ஒரு வித பயம் அவனுக்கு வரத்தொடங்கியது. மேலும் அவர்களுக்கு குழந்தை இன்னும் கிடைக்காமையாலும், அவனுக்கு மனைவிமேல் சற்றுக்கோபமும் இருந்தது..! அவளிடமே குறையிருப்பது போல் பேசுவதும்,  அவனது உறவுகளின் பேச்சைக்கேட்டு நடப்பதும், அவளுக்கு கடும் மனவருத்தத்ததை  அளிதாலும் குடும்பங்களின் கௌரவத்திற்காக ஒன்றும் கதைப்பதில்லை. அவளைப்பொறுத்தவரை மனைவியாக கணவனுக்கு எந்த குறையும் வைக்காமலே நடந்துகொண்டாள். ஆனால் அவள் கணவன், அவளை  ஆரம்பத்தில் கவனித்த அளவிற்கு தற்போது இல்லை என்பதில் அவளுக்கு வருத்தம் அதிகம்.

இவ்வாறு நாட்கள் நகர்கையில்,   ஒரு நாள் கணவன் விவாகரத்துப் பேப்பருடன் வந்தான். எனக்கு இப்போது உன்னைப் பிடிக்கவில்லை. ஏனோ உனது தோற்றமும், இன்னும் தாய்மை ஆகமுடியாமல் இருக்கும் உடல் நிலையும் எனக்குபார்க்கக் கஷ்டமாகவும், இனி சேர்ந்து இருப்பதில் பிரச்சனை தான் வரும் என்றும் சொல்லி, அதனை ஏற்கச்சொன்னான்..!  அவளுக்கும் எதுவும் சொல்லத் தோன்றவில்லை. பெற்றோரின் வற்புறுத்தலால் இந்தத்திருமணத்தை  ஏற்றாளே தவிர அவள் தனிப்பட்ட ரீதியில் எந்த எண்ணத்தையும் அந்நேரம் கொண்டிருக்கவில்லை. தற்போது கணவனே வேண்டாம் என்கின்றான்..! விவாகரத்துக் கேட்கின்றான். காரணம் தவறுகள் எல்லாம் தன்மேல் உள்ளதாகக் கூறுகின்றான். இவனோடு இவ்வளவு நாள் வாழ்ந்ததன் பலன் என்ன..? கலங்கினாள்..? தனது பெற்றோருக்கும் தெரியப்படுத்தினாள்..! அவர்களும் தமது தவறான முடிவை, மகள் மேல் திணித்ததை எண்ணிக்கவலைப்பட்டார்கள்..! இருந்தாலும் மகளை தம்முடனேயே தங்க அனுமதித்தார்கள்.

சில வருட காலம் ஓட, அவள் தனது காலில் நிற்க, ஒரு வேலைக்கான நேர்முகத்தேர்வுக்குச் சென்றுகொண்டிருந்தாள்..! அந்த பஸ்ஸில், முன்பு ஒரு முறை கண்ட பொம்மை மனிதனும் பயணம் செய்தான்..! தன்னுடன், அந்தப்பொம்மைக்கும் ஒரு ரிக்கெட் வாங்கி, அருகில் அந்தப்பொம்மையை அமர்த்தி, இருவரும் பயனித்தார்கள்..! இதனைப் பார்த்த வக்சலாவின் மனதிற்கு என்னவோ செய்தது..?

யார் இவன்..? எங்கே இருக்கின்றான்..? என்ன வேலை செய்கின்றான்..? என அவனைப்பற்றி அறிய, அவளது மனம் ஆவல் பட்டது..!  ஆனால் அதனை  வெளிக்காட்டவில்லை. பிரிந்து இருக்கும் அவளுக்கு தன்னுருவத்தைக்கொண்ட பொம்மைக்கு அவ்வளவு மதிப்பை அந்த நபர்கொடுக்கும்போது, தனது நிலையை எண்ணி வருந்தினாள். சில வாரங்களில், அவள் நினைத்த இடத்தில் ஒரு வேலை அவளுக்குக் கிடைத்தது..!

அந்த வேலையைச் செய்துகொண்டு, தன்னைப்பற்றி அக்கறையற்ற கணவனை மறந்து, பெற்றோரின் புரிதலோடு, பொம்மை மனிதனின் நடத்தையை அவனை அறியாமல் அவதானிக்கத் தொடங்கினாள்..!

அப்போது தான், அவன் தனியாக வாழ்வதும், பலவித கைவண்ணப்பொருட்கள் செய்வதையே தொழிலாகவும் கொண்டிருந்தான்..!  அவனின் திறமையால்,  அவனது வசதிக்கு எந்தக் குறைச்சலும் இல்லை. எல்லாரையும் போல் சராசரிக்கு மேலாகவே வாழ்ந்தான். ஆனால் இன்னும் திருமணம் செய்யவில்லை என்ற நினைப்பு அவனுக்குத் துளிகூட எழவில்லை..! பொம்மைப்பாசம் அவனை அப்படியாக வைத்திருந்தது..!

 

வக்சலா, ஒரு நாள் துணிவுடன், அவனது பொம்மையைப் பற்றிக் கேட்கவேண்டும் என்ற முடிவோடு அவனது வீட்டிற்கு சென்றாள். அது வரை பல முறை அவனை, அவள் கண்டிருக்கின்றாள். ஆனால் அவன் பொம்மையே தனது மனைவி என்பது போல வாழ்ந்தால் அவனுக்கு, அவளைத் தெரியவில்லை..!

தான் யார் என்பது பற்றியும், ஏன் நீங்கள் இப்படி இருக்கின்றீர்கள்..? என்பது பற்றியும் இருவரும் கதைக்க, அவன் வைத்த உண்மையான அன்பு, அவளை அவனுடன் இணைத்து, திருமண பந்தத்திற்குள்  போக வழியமைத்தது..!

 

அன்பற்ற கணவனிடம் இருந்து விவாகரத்தைப் பெற்ற வக்சலா, தனது பெற்றோரின் சம்மதத்துடன், ஆக்க  கலைஞர் சங்கரை மணந்தாள்..!

ஒருவருடத்தில் அவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது..! சில வருடங்கள் கழித்து ஓர் ஆரோக்கியமான ஆண் குழந்தையும் பிறந்தது..!

அவர்கள் மிக அன்னியோன்யமாக வாழ்ந்தார்கள்.

வக்சலாவின் பெற்றோர், தமது மகளின் புதிய வாழ்க்கை சந்தோசமாக செல்வதைக்கண்டு, மகிழ்ந்ததுடன், “ஏன் இது பழைய வாழ்க்கையில் அவளுக்கு கிடைக்கவில்லை..? ” என அறிந்தபோது தான் அந்த உண்மை அவர்களுக்குப் புரிந்தது.. !  இது, இந்தக்கால உறவுப் பந்தம் கிடையாது. போன பிறப்பிலும் இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்தவர்கள் தான்..! அவனைத் தவிர, யாராலும் அவள் கருவுற முடியாது என விதிக்கப்பட்டதை ஒர் சன்நியாசி மூலம் அறிந்து அதிர்ச்சியானார்கள்..!  அதுபோல், அவளைத் தவிர, அவன் வேறு யாரையும் திருமணம் செய்ய முடியாது..! இது தான் அவர்களின் தொடர் பந்தம்..! இயற்கைக்கு மாத்திரமே இவர்கள் படைப்பின்  முழுவிபரமும் முற்றாகத் தெரியும்.

சங்கர் கண்டதும் காதல் வயப்பட்டது, தனது பழைய பிறப்பு மனைவியைத் தான்..! அவள் தனக்கு திரும்பவும் வருவாள் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது அந்தப்பொம்மை தான்..! அந்த பொம்மையே, உண்மையில் அவளை, அவனை நோக்கி இழுக்கும் வசியமாகவும் மாறியுள்ளது..!

உண்மைக்காதல், உலகுள்ளவரை உயிர்ப்புடன் இருக்கும்..! பொய்யான காதல், பொழுது கடந்தாலே கசங்கிப் போகும்..!

 

ஆ.கெ.கோகிலன்

30-08-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நம்பிக்கையீனம்..!